ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி அம்பாந்தோட்டையை சென்றடைந்தது.

  • November 16, 2020
  • 84
  • Aroos Samsudeen
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி அம்பாந்தோட்டையை சென்றடைந்தது.

லங்கா பிறிமியர் லீக் (LPL) போட்டிகளில் விளையாடும் ஐந்து அணிகளில், சுற்றுப்
போட்டிகள் இடம்பெறும் அம்பாந்தோட்டையில் அணிகளிற்கு ஒதுக்கப்பட்ட
ஹோட்டலைச் சென்றடைந்த முதலாவது அணியாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி
விளங்குகிறது.

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மூன்று நாட்கள் இடம்பெற்ற பயிற்சிப்
பாசறையை முடித்துக் கொண்டு, இன்று 16 நவம்பர் 2020 அன்று, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி,
அம்பாந்தோட்டையைச் சென்றடைந்தது.

LPL போட்டிகளில் ஆடுவதில் ஆர்வமாகவும் உற்சாகமாகவுள்ள ஜப்னா ஸ்டாலியன்ஸ்
அணியின் பதினான்கு உள்ளூர் கிரிக்கெட் வீரர்களும் அவர்களது பயிற்சியாளர்களுமே
இன்று அம்பாந்தோட்டை வந்தடைந்தனர்.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு விளையாடத் தெரிவாகியுள்ள ஆறு சர்வதேச கிரிக்கெட்
வீரர்களும் எதிர்வரும் நாட்களில் அம்பாந்தோட்டையை வந்தடைவார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

2020ம் ஆண்டுக்கான LPL போட்டிகள் நவம்பர் 26ம் திகதி தொடங்கி டிசம்பர் 17ம் திகதி
வரை நடைபெறும். இலங்கையில் அரங்கேறும் முதலாவது உரிமைத்துவ (Franchise)
அணிகளிற்கிடையிலான T20 போட்டிகள் இதுவென்பதால், இலங்கை கிரிக்கெட்
வரலாற்றில் இது ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் என்பது இலங்கையில் இடம்பெறும் Lanka Premier League (LPL)
போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரு உரிமைத்துவ (Franchise) கிரிக்கெட் அணி.

ஜப்னா ஸ்டாலியன்ஸ்அணியின் உரிமையாளர்களாக, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியாவில் வதியும் 12 கிரிக்கெட் ஆர்வலர்கள் விளங்குகிறார்கள்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் முதன்மை பயிற்றுவிப்பாளராக திலின கண்டம்பி,
அணியின் தலைவராக திஸேர பெரேரா கடமையாற்றுவார்கள்; இவர்கள் இருவரும்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவமுள்ள
கிரிக்கெட் வீரர்கள் ஆவார்கள்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் 20 கிரிக்கெட் வீரர்களில் பதினான்கு
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஆறு சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர்.

Tags :
comments