பொத்துவில் பிரதேச சபையின் வரவு -செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது

  • November 18, 2020
  • 212
  • Aroos Samsudeen
பொத்துவில் பிரதேச சபையின் வரவு -செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது

(எஸ்.எம்.அறூஸ்)

பொத்துவில் பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் தேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸித் தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த அமர்வின் போது அடுத்தாண்டுக்கான வரவு -செலவுத்திட்ட அறிக்கையை தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸித் சபையில் சமர்ப்பித்தார்.சபையின் தவிசாளர் உள்ளிட்ட 21 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது வாக்களிப்பில் 21 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். வரவு -செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 10 உறுப்பினர்களும், எதிராக 11 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் காரணத்தினால் மேலதிக ஒரு வாக்கினால் பொத்துவில் பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்ட அறிக்கை தோற்கடிக்கப்பட்டது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பான ஆறு உறுப்பினர்களில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 4 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்படி 10 உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பான 4 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் ஒரு உறுப்பினரும், சுயேட்சைக் குழு ஒன்றின் ஒரு உறுப்பினரும் எதிர்த்து வாக்களித்தனர்.

இதன்படி வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக 11 வாக்குகள் அளிக்கப்பட்டது.
பொத்துவில் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆளுகைக்குள் இருக்கின்ற ஒரு சபையாகும். ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 6 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 06 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் -05 உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் -04 உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 03 உறுப்பினர்களும்,மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் சார்பில் 01 உறுப்பினரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1 ஒரு உறுப்பினரும், சுயேட்சைக் குழு 2 சார்பாக 1ஒரு உறுப்பினரும் என மொத்தமாக 21 உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சுயேட்சைக் குழு 1 ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பொத்துவில் பிரதேச சபையின் 2021ம் வருடத்திற்கான வரவு – செயலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எம்.எஸ்.அப்துல் வாஸித்தும், பிரதி தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டைமைப்பின் பெருமாள் பார்த்தீபனும் செயற்பட்டு வருகின்றனர்.

Tags :
comments