பொத்துவில் கடலில் காணாமல் போனவரை தேடும் பணி மும்முரம்

  • January 1, 2021
  • 157
  • Aroos Samsudeen
பொத்துவில் கடலில்  காணாமல் போனவரை தேடும் பணி மும்முரம்

(எஸ்.எம்.அறூஸ்)

பொத்துவில் கொட்டுக்கல் மலைப்பிரதேசத்தில் உள்ள கடலில் நீராடச் சென்ற முகம்மட் சிபான் என்ற குடும்பஸ்தர் கடல் அலையில் சிக்குண்டு மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 3.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தனது மனைவி பிள்ளை மற்றும் குடும்ப உறவினர்கள் சகிதம் இன்று கொட்டுக்கல் பிரதேசத்தில் சமைத்து உண்ணுவதற்காகச்  சென்றிருக்கின்றார். சாப்பிட்டு முடிந்ததும் 3.00 மணியளவில் உறவினர்கள் இருவருடன் கடலில் நீராடச் சென்றிருக்கின்றார்.

இதன்போது கடல் அலையில் சிக்குண்டு முகம்மட் சிபான் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தபோது அவருடன் நீராடச் சென்ற ஏனைய இருவரும் சத்தம்போட்டு கத்தி உதவிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

சிறிது தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இதனை அவதானித்த நிலையில் ஓடி வந்துள்ளனர். தத்தளித்துக் கொண்டிருந்த முகம்மட் சிபானைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டபோதும் முயற்சி பலனளிக்க முடியாமல் அலை அடித்துச் சென்றுள்ளது.

பொலிஸார், மீனவர்கள், பொதுமக்கள்,உறவினர்கள் என பல தரப்பினரும் காணாமல் போயுள்ள முகம்மட் சிபானை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.முஸர்ரப் உடனடியாக இங்கு வருகை தந்ததுடன் சிபானை  தேடும் பணியை விரைவுபடுத்துமாறு பொலிஸார் மற்றும்  பாதுகாப்புத்தரப்பினருக்கு அறிவிறுத்தல் வழங்கினார்.

முகம்மட் சிபான் ஏறாவுர் பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், பொத்துவில் பிரதேசத்தில் திருமணம் செய்து வசிப்பிடத்தையும் கொண்டவர். இவருக்கு 2 வயதில் ஒரு குழுந்தையும் உள்ளது.

அத்தோடு இவர் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பொதுச் சுகாதார கள உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதுடன் விடுமுறையில் பொத்துவிலுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
comments