மௌனித்துப்போன அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் எம்.பி பதவி

  • January 23, 2016
  • 1622
  • Aroos Samsudeen

மௌனித்துப்போன அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் எம்.பி பதவி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வெற்றிடமான தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியாவைச் சேர்ந்த எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத மாவட்டங்களுக்குத்தான் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அண்மைக்காலமாக கூறிவந்த நிலையில் எம்.எஸ்.தௌபீக்கின் நியமனம் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்காக பலரும் ரவுப் ஹக்கீமை பின் தொடர்ந்து வந்த நிலையில் தமக்குக் கிடைக்கும் தமக்குக் கிடைக்கும் என்று பலரும் கனவு கண்டு வந்தார்கள். அது மட்டுல்ல ரவுப் ஹக்கீமை அச்சுறுத்தும் பாணியிலும் நடந்து கொண்டார்கள் என்பதை அவ்வப்போது இணையத்தள ஊடகங்களிலும், சில அரசியல் பிரமுகர்களின் பேச்சுக்களில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.

கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் தவிசாளர் என்பவர்கள் முன்னிலைப்பட்டியலில் இருக்க அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு எப்படிக் கிடைக்கும் என்கின்ற யோசனைக்கப்பால் ரவுப் ஹக்கீம் அவர்கள் இருவரையும் முன்னிலைப்படுத்த விரும்பவில்லை என்பதை அவரின் தீர்மானங்கள் வெளிப்படுத்துகின்றது.

கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ள குறிப்பிட்ட இருவரும் அடுத்த கட்டமாக என்ன முடிவுகளை எடுக்கப்போகின்றார்கள் என்பதில் அக்கரை கொள்ளாத ஒருவராகவே ரவுப் ஹக்கீம் இருப்பதாக தெரிகின்றது. அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் இருவர் தொடர்பிலும் அவ்வளவு அசட்டையாக இருந்துவிட முடியாது என்பதையும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக முக்கிய பதவியில் உள்ளவர்கள் என்பதால் மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கின்றபோதும், அமைச்சர் ரவுப் ஹக்கீமின் செயற்பாடுகளின் குறைபாடுகளையும், பிழைகளையும் தெரிந்து வைத்திருக்கின்றவர்கள் என்பதாலும் பெரியளவில் இல்லாவிட்டாலும் எந்த வகையிலாவது பாதிப்பு வருவதற்கு வாயப்புக்கள் இல்லாமலில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை பல பிரதேசங்களிற்கும் தேசியப்பட்டியல் எம்.பி பதவி வழங்கப்படும் என்று தேர்தல் மேடைகளில் கூறிவந்ததாக சொல்லப்படுகின்றது. அட்டாளைச்சேனைப் பிரதேசம், கல்குடா தொகுதி,கம்பஹா மாவட்டம், குருணாகல் மாவட்டம்,கொழும்பு மாவட்டம் என்பனவற்றிற்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதிலும் முஸ்லிம் காங்கிரஸின் இரும்புக் கோட்டையான அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதி கொடுத்தும் அதனை அவர் நிறைவேற்றவில்லை என்று ஆதரவாளர்கள் கவலை தெரிவித்தாலும் கட்சி முக்கியஸ்தர்கள் என்று சொல்லுகின்ற பிரமுகர்களின் போக்கு எம்.பி பதவியை பெற்றுக் கொள்வதில் பின்னடைவை ஏற்படுத்தி வருவதாக விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.

கடந்த பொதுத் தேர்தலில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் பகிரங்கமாக தேர்தல் மேடைகளில் அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் எம்.பி பதவியை வழங்கியே தீருவேன் என்று முழங்கியபோதும் அதனை அவர் நிறைவேற்றவில்லை. ஆனால் ரவுப் ஹக்கீம் அவர்கள் இப்போது இப்படிக் கூறிவருகின்றார், அட்டாளைச்சேனைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை அடுத்த கட்டத்தில் நிறைவேற்றுவேன் அதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று மீண்டும் பகிரங்கமாக சாய்ந்தமருதில் கூறியுள்ளார்.

அப்போதாவது நமக்குக் கிடைத்துவிடும் என்கின்ற ஆசையில் அட்டாளைச்சேனை கட்சி ஆதரவாளர்கள் இருக்கின்றனர். இதற்கிடையில் கட்சி செய்த துரோகத்திற்கு சரியான பாடத்தை பிரதேச சபைத் தேர்தலில் காட்டுவோம் என்கின்ற பேச்சுக்களும் பரவலாக உள்ளது.

தமக்கான எம்.பி பதவியை வெற்றி கொள்ளாதவர்களுக்கு தேசியப்பட்டியல் கொடுத்துத்தான் அடுத்த கட்டத்தை நகர்த்த வேண்டுமா? அல்லது ஏற்கனவே ஒரு தடவை தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்ட தௌபீக்கிற்கு வழங்கித்தான் மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியுமா? இவரைவிட்டால் வேறு ஒரு நபர் கட்சியில் இல்லையா? என்கின்ற கேள்விகளும் எழுகின்றது.

அதுமட்டுமல்ல கிண்ணியா பிரதேசத்திற்கு மாற்றுக் கட்சிகளில் இரண்டுபேர் எம்.பி பதவி வகிக்கும் சந்தர்ப்பத்தில் மூன்றாமவராக அங்குதான் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பியும் போக வேண்டுமா? என்கின்ற கேள்வியை பலரும் கூறுவது போன்று கல்குடா ஆதரவாளர்களும் கேட்கின்றனர். நேற்று இரவு கல்குடா ஆதரவாளர்கள் அமைச்சர் ரவுப் ஹக்கீமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பல பிரதேசங்களும், பல முக்கியஸ்தர்களும் அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு அழுத்தங்களையும்,நெருக்குவாரத்தையும் கொடுத்தாலும் இருக்கின்ற இரண்டையும் வைத்துக் கொண்டு ஒரு கட்சியின் தலைமை என்கின்ற ஸ்தானத்தில் இருந்து முடிவுகளை எடுப்பது என்பது அவ்வளவு இலசுப்பட்ட விடயமல்ல என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். எந்த விடயத்தையும் வெளியில் இருந்து கொண்டு விமர்சிப்பது என்பது மிகப்பெரிய இலகுவான விடயமாகும்.

Tags :
comments