மாயமான மலேசிய விமான தேடலில் மேலும் பிரச்சனை: சோனார் கருவி மாயம்

  • January 26, 2016
  • 668
  • Aroos Samsudeen

Image title

தெற்கு இந்திய பெருங்கடலில் நீருக்கு அடியில் மாயமான மலேசிய விமானத்தை தேட பயன்படுத்தப்பட்டு வந்த சோனார் கருவி மாயமாகிவிட்டது என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மலேசிய தலைநகரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது.

விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.

விமானம் விழுந்ததாக கூறப்படும் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா தலைமையில் தேடுதல் பணி நடந்து வருகிறது. 2 ஆண்டுகளாக தேடியும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் தாய்லாந்தில் கரை ஒதுங்கிய விமான பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் அது மலேசிய விமான பாகமாக இருக்க வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தெற்கு இந்திய பெருங்கடலில் நீருக்கு அடியில் விமான பாகங்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த டோஃபிஷ் என்ற சோனார் கருவி மாயமாகியுள்ளது. கடலுக்கு அடியில் இருந்த மணல் மேட்டில் மோதி கருவியின் கேபிள் வயர் அறுந்துவிட்டது. இதனால் கருவி தற்போது கடலுக்கு அடியில் சென்றுவிட்டது. அந்த கருவி நிச்சயம் தேடிக் கண்டுபிடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
comments