புதிய அரசியலமைப்பு தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் கலந்துரையாடல்!

  • January 27, 2016
  • 531
  • Aroos Samsudeen

புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்தும், எமது தேசத்திற்கு பொருத்தமான யாப்பின் வடிவம் எவ்வாறு அமைய முடியும் என்பது குறித்தும் பல்வேறு மட்டங்களில் கருத்தாடல்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றத்தின் ஒரு பங்காளி என்ற வகையிலும், ஆட்சி மாற்றம் மாத்திரமன்றி ஆட்சி முறையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தி வந்த ஒரு கட்சி என்ற வகையிலும், உத்தேச அரசியலமைப்பு மாற்றம் குறித்து மிகுந்த அவதானத்துடனும் முனைப்புடனும் செயற்படுகிறது.

ஏற்கனவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இது குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதுடன், அரசியலமைப்பு மாற்றம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தி சமூக மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஊடக அறிக்கை மூலம் மக்களுக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

அரசியலமைப்பு கற்கைகளுக்கான நிறுவனமும் சுவிற்சர்லாந்து Fribourg பல்கலைக்கழகமும் இணைந்து, “அதிகாரப் பகிர்வினை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு மாதிரிகள்: பல்லின சமூகங்களில் எதிர்நோக்கும் சவால்களும் பார்வைகளும்” என்ற தொனிப்பொருளில் கடந்த ஒரு வாரகாலமாக கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் போன்ற முக்கிய நகரங்களில் கலந்துரையாடல்களை நடத்தி வந்தன.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் பிரத்தியேகமான கலந்துரையாடலொன்றை நடத்துவற்கு, மேற்படி இரு நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்திருந்தன.அந்த வகையில், கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

சுவிஸ் தூதரகத்தின் அரசியல் அலுவலக முதன்மைச் செயலாளரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பேராசிரியர் ஏவா மரியா பெல்செர் (சுவிட்சர்லாந்து), பேராசிரியர் நிகோ ஸ்டேய்ட்ளர் (தென் ஆபிரிக்கா), மௌறிசியோ மக்கேட்டி (சுவிட்சர்லாந்து) ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

அதிகாரப் பகிர்வினை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்புகளின் பிரதான அம்சங்களையும் பண்புகளையும் விளக்கியதுடன், அவை பல்வேறு சூழ்நிலைகளில் எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றன என்பதையும் பேச்சாளர்கள் விளக்கினர்.குறிப்பாக சுவிட்சர்லாந்திலும் தென் ஆபிரிக்காவிலும் உள்ள

அரசியலமைப்புக்களின் முக்கிய பண்புகளைப் பற்றியும் அவற்றின் நடைமுறைகள் பற்றியும் விளக்கப்பட்டதுடன், இவ்வாறான மாதிரிகளை வைத்து இலங்கை தனக்கான தனித்துவமான அரசியலமைப்பு முறையொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது.

இலங்கையும் பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாடு என்ற வகையில்,பொதுவாக சகல பிரஜைகளினதும் உரிமைகள் சமமாக வழங்கப்படக் கூடிய வகையிலான அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களின் அவசியம் குறித்தும், ஒவ்வொரு இனக் குழுவுக்கும் பிரத்தியேகமாகக் காணப்படும் தனித்துவங்களைப் பேணக்கூடிய உரிமைகளையும் அபிலாஷைகளையும் உத்தரவாதப் படுத்தக்கூடிய அரசியலமைப்பு ஏற்பாடுகளின் அவசியம் குறித்தும் சபையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன

புவிசார் தேசிய இனக் குழுக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? பரந்தளவில் சிதறிவாழும் சமூகங்களின் எதிர்பார்ப்புகள், அபிலாசைகள் என்ன? போன்ற விடயங்கள் இனங் காணப்பட்டு, அவற்றிற்குப் பொருத்தமான அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் கண்டறியப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Tags :
comments