அமெரிக்காவில் தீவிரம் காட்டியுள்ள ஸிக்கா வைரஸ்: 2 ஆண்டுகளுக்கு கருத்தரிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்

  • January 28, 2016
  • 594
  • Aroos Samsudeen

கொசு மூலம் பரவும் ஸிக்கா வைரஸ் காய்ச்சல் குழந்தைகளின் மூளையைப் பாதிக்கிறது என்பதால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இன்னும் 2 ஆண்டுகளுக்கு கருத்தரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு, சிக்கன்குனியா போல் இப்போது பல நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது ஸிக்கா வைரஸ் காய்ச்சல்.

அமெரிக்கக் கண்டத்தில் மாத்திரம் 20 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. கனடா, சிலி தவிர அக்கண்டத்தில் உள்ள ஏனைய அனைத்து நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரசால் பிரேசிலில் 4000 பச்சிளம் குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஸிக்கா வைரஸ் தாக்கினால் இலேசான காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும். இருப்பினும் 80 சதவீதமானவர்களுக்கு எவ்வித அறிகுறியும் தென்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுளால் ஸிக்கா வைரஸ் தாக்குதல் பாதிப்பைக் கண்டறிவது மிகவும் சிரமம். இந்த வைரஸ் பற்றிய ஆய்வுகள் தற்போதுதான் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் ‘மைக்ரோசெபாலி’ பாதிப்புடன் பிறக்குமா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசெபாலி பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறப்பர். இதை வாழ்நாள் முழுவதும் சிகிச்சையால் சரி செய்யவே முடியாது. பாதிப்பு தீவிரமாக இருந்தால், அந்த குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை அளிக்க வேண்டியிருக்கும்.

இதனால் எல் சல்வடார் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் பெண்கள் இன்னும் 2 ஆண்டுகளுக்கு கருத்தரிப்பதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஸிக்கா வைரசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :
comments