ஒலுவில் பிரகடனத்திற்கு வயது 13 ஆசிரியர் தலையங்கம்

  • January 29, 2016
  • 561
  • Aroos Samsudeen

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்)

முஸ்லிம்களின் தேசிய எழுச்சியும், முஸ்லிம் தேசியக் கோட்பாட்டுப் பிரகடனமும் செய்யப்பட்டு இன்றோடு 13 வருடங்கள். இலங்கை அரசியலில் முஸ்லிம்களை தனியான தேசியமாக சுயாதீனமான மக்கள் எழுச்சி மூலம் பிரகடனப்படுத்திய இந்த நாளை எல்லோரும் நினைவு கூர்வோம்.

தமிழர்களின் அரசியல் வரலாற்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் திம்பும் பிரகடனமும், தமிழர்களின் தாயகக் கோட்பாட்டையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தி நிற்பதைப் போன்று, ஒலுவில் பிரகடனம் முஸ்லிம்களின் தாயகக் கோட்பாட்டையும் சுயநிர்ணய உரிமையையும் வரையறுத்து நிற்பதை அவதானிக்கலாம்.

ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானமும் திம்பும் பிரகடனமும் தமிழர்களினது அரசியல் கட்சிகளாலும் ஆயுதக் குழுக்களாலும் முன்வைக்கப்பட்டவையாக இருக்கின்ற அதே சமயம், ஒலுவில் பிரகடனம் அரசியல் நிறுவனங்களின் தலையீடற்ற சுயாதீன மக்கள் எழுச்சியும் கோட்பாட்டுப் பிரகடனமுமாகும்.

ஒலுவில் பிரகடனத்தை தென்கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் சமூகமே முன்கொண்டு சென்றது. அன்று மாணவர் சமூகத்திற்குத் தலைமை கொடுத்தவர் அன்றைய மாணவர் பேரவைத் தலைவர் ஏ.எல்.தவம் அவர்களாகும். .

அன்றைய ஒலுவில் பிரகடனத்திற்குப் பிறகு முஸ்லிம் சமூகம் சார்ந்த முன்னடுப்புக்கள் இன்று வரை சிவில் சமூகத்தினராலோ அல்லது அரசியல் கட்சிகளினாலோ முன்னடுக்கப்படவில்லை.

அண்மைக்காலமாக இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு பலவிதமான பிரச்சினைகளை இனவாதிகள் ஏற்படுத்திய நிலையில் அதனை தட்டிக் கேட்பதற்கும், மக்கள் மத்தியில் சிந்தனை ரீதியான போராட்டக் குணத்தை வெளிப்படுத்துவதற்கும் தலைமை கொடுக்க ஆளில்லாத சமூகமாக முஸ்லிம்கள் இன்று காணப்படுகின்ற துர்ப்பாக்கிய களத்தினைக் காண்கின்றோம்.

அரசியல் கட்சி ரீதியான கொள்கைக்குள் அடங்கிப் போய் பதவிகள் முன்னிலைப்படுத்தப்பட்டு சமூகம் சார்ந்த முன்னடுப்புக்களை பிற்படுத்துகின்ற சிந்தனைக்கு நமது அரசியல்வாதிகள் இன்று வந்துள்ளதை பார்க்கின்றோம்.

காலத்திற்குக் காலம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேடைகளில் வீரவசனங்களைப் பேசிவிட்டு பதவிகள் கிடைத்ததும் அதிகார வட்டத்திற்குள் முடங்கிப் போய்விடுகின்றனர்.

தமிழர்களின் இன்றைய அரசியல் ரீதியான போராட்டம் அன்றைய ஆயுதம் தரித்துப் போராடிய விடுதலைப்புலிகளின் போராட்டத்தைவிட கூர்மையானதாக இருப்பதாக சொல்லப்படுகின்ற நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் எந்தப்பாதையால் பயணிக்கின்றது, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு செயற்படுவதால் கண்ட பலன்கள் என்ன என்பது தொடர்பில் பலவிதமான விமர்சனங்கள் எழுகின்றது.

அரசியல் கட்சிகளில் உள்ள சமூகம் சார்ந்த சிந்தனையாளர்களும், சிவில் சமூகத்தினரும், பல்கலைக்கழக மாணவ சமூகமும், ஊடகத்துறை செயற்பாட்டாளர்களும் ஒன்றினைந்து முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் முன்னடுப்புக்களை செய்வதற்கான சரியான களத்தினை அமைக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் இடம்பெறப்போகின்ற அரசியல் அமைப்பு மாற்றத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை முன்வைக்க முடியும்.

Tags :
comments