அதிபராக, முதல் முறையாக அமெரிக்க மசூதிக்குச் செல்லும் ஒபாமா..! விருந்திலும் பங்கேற்பு

  • February 3, 2016
  • 659
  • Aroos Samsudeen

Image title

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை ஒட்டியுள்ள மசூதிக்கு இன்று அந்த நாட்டு அதிபர் ஒபாமா செல்ல இருப்பதாக அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களின் போது பல்வேறு மசூதிகளுக்குச் சென்றுள்ளார். ஆனால், அமெரிக்காவிலுள்ள மசூதிக்கு இதுவரை சென்றதில்லை.

விரைவில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் பதவி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட சில வேட்பாளர்கள் முஸ்லிம் விரோதக் கருத்துகளை வெளியிட்டு வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்கா மேரிலாந்தில் அருகே உள்ள பால்டிமோர் மசூதிக்கு முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று வருகை தருகிறார். அங்கு முஸ்லிம்களுடன் அவர் உரையாடுகிறார்.

இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறுகையில், தலைநகரையொட்டி அமைந்துள்ள மசூதிக்கு அதிபர் ஒபாமா புதன்கிழமை செல்கிறார். அங்கு பிரார்த்தனைக்குப் பிறகு நடைபெறும் விருந்தில் அவர் கலந்து கொள்கிறார். அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கவும், அனைத்து மதத்தினருக்கும் தங்களது மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் அமெரிக்காவில் உள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் அவர் மசூதி செல்கிறார். வேற்றுமையில் ஒற்றுமை காணும் அமெரிக்காவில், அண்மைக் காலமாக எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகளால் மதச் சுதந்திரம் கேள்விக் குறியாகியுள்ளது. அத்தகைய சந்தேகங்களைப் போக்கும் வகையில் அதிபர் ஒபாமா மசூதிக்குச் செல்வது முக்கியத்துவம் பெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், சீக்கிய அல்லது இந்துக் கோவிலுக்குச் செல்லும் திட்டம் ஒபாமாவிடம் இருக்கிறதா என்று தனக்குத தெரியவில்லை என்றும் எர்னஸ்ட் கூறினார். தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியை அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேலும் கடந்த 2010-ம் ஆண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
comments