தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்: இலங்கை ஹொக்கி ஆடவர் பிரிவு இந்தியா செல்லத் தடையுத்தரவு

  • February 3, 2016
  • 362
  • Aroos Samsudeen

Image title

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவிருந்த இலங்கை ஹொக்கி ஆடவர் பிரிவு வீரர்கள் இந்தியா செல்வதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டீ.டி.குணசேகர இன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

திலுக மதுஷங்க வீரசூரிய எனும் வீரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய போட்டிகளில் கலந்துகொள்ளும் இலங்கை ஹொக்கி அணிக்கான வீரர்கள் தெரிவு உரிய முறையில் இடம்பெறவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதைத் தடுக்கும் வகையில் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு திலுக மதுஷங்க வீரசூரிய தாக்கல் செய்திருந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மனுவில் 23 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த தடையுத்தரவு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என்பதுடன் தெற்காசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணி நாளை மறுதினம் (05) இந்தியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
comments