வட்ஸப்பும், கூகுளும் செய்யும் சூறையாடல்கள் அம்பலம்..!!

  • February 4, 2016
  • 621
  • Aroos Samsudeen

Image title

வாட்ஸ் அப்பில் ஏன் விளம்பரங்களே இல்லை? என்ற கேள்விக்கு இந்நிறுவனம் கூறும் பதில், “தினமும் காலையில் நம்முடைய மொபைலை பார்க்கும் போது இன்று நம் மொபைலில் என்ன விளம்பரத்தை பார்க்கப்போகிறோம் என்று எதிர்பார்ப்பதில்லை.

அதேபோல தினமும் தூங்கப் போகும் முன்பும் அன்று நாம் மொபைலில் கண்ட விளம்பரத்தை நினைத்து சிரமப்பட போவதுமில்லை. எங்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்று தான். பெரும்பாலும் தூங்கப்போகும் முன் பலரது மனத்திரையிலும் அன்றைய நாளில் சாட் செய்தவர்களின் சாட் பக்கங்களே பிரதிபலித்துக் கொண்டிருக்கும். இதனை நாங்கள் நன்கு அறிவோம். எனவே தான் எங்கள் சாட் சேவையில் நாங்கள் விளம்பரங்களை விற்பதில்லை”

இவ்வாறு வாட்ஸ் அப் மட்டுமல்ல. இதனைப்போன்று பல்வேறு ஆப்கள் இலவசமாக சந்தையில் இறங்கி இருந்தாலும் ஏதேனும் ஒரு இடத்தில் விளம்பரங்களின் மூலம் லாபம் பார்த்துவிடுகின்றன. பொதுவாக ஆப்களுக்கான லாபம் வருவது இரண்டு வகைகளில்.

1) இன்ஸ்டால் செய்யப்படும்போதே ஆப்பிற்கு விலை நிர்ணயித்தல். சில ஆப்களை முதலில் இலவச ட்ரையல் பேக்காக பயன்படுத்தி சில காலங்களுக்கு பிறகு விலை கொடுக்க வேண்டியதாய் இருக்கும். மேலும் சில ஆப்களில் அடிப்படை வசதிகள் மட்டும் இலவசமாக கிடைக்கும். கூடுதல் அம்சங்களுக்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும்.

2) ஸ்க்ரீனிலேயே ஒரு மூலையில் பிரதிபலிக்கப்படும் விளம்பரங்கள். இவற்றின் மூலம் கிடைக்கும் லாபத்தில் இந்த ஆப்களின் கஜானாவிற்கும் சில பரிமாற்றங்கள் நிகழ்வதால் பல இலவச ஆப்கள் இத்தகைய விளம்பரங்களை ஊக்குவிக்கின்றன. கூகுளும், பேஸ்புக்குமே கூட இதற்கு உதாரணங்கள் தான்.

ஆனால், தினமும் 90 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப்பில் ஒரு விளம்பரம் கூட எட்டிப்பார்க்க அனுமதி இல்லை. இன்ஸ்டால் செய்வதும் இப்பொழுது முற்றிலும் இலவசமாகி விட்டது. பின்னர் எப்படி லாபம் ஈட்டுகிறது வாட்ஸ் அப்? மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளிலும் லாபம் ஈட்டுவது சாமானியனின் யுக்தி. ஆனால் இன்டர்நெட் ஜாம்பவான்களான கூகுளும் சரி, வாட்ஸ் அப்பும் சரி லாபம் ஈட்டுவதற்கு கையாளும் முறை விசித்திரமானது, நம்மில் எவரும் எதிர்பாராதது.

வாட்ஸ்அப் போலவே கூகுளும் தனது பெரும்பாலான சேவைகளை இலவசமாகவே வைத்துள்ளது. இதற்கு காரணம் இவ்விரு கம்பெனிகளும் கையாளும் அந்த பிசினஸ் மாடல். உலகில் வேறு எந்த நிறுவனத்தாலும் பயன்படுத்த முடியாத பிசினஸ் மாடல் அது.

இதற்கு அடிப்படையாக இருப்பது மிக பிரம்மாண்டமான ஒரு விஷயம். ஆங்கிலத்தில் இதனை பிக் டேட்டா (BIG DATA) என்பர். அதாவது நாம் ஒவ்வொரு நாளும் இணையத்தில் பயன்படுத்தும் எண்ணற்ற தகவல்களின் தொகுப்பு. உதாரணமாக நீங்கள் கூகுளில் ஒவ்வொரு நாளும் தேடும் தகவல்கள் கூகுளால் கண்காணிக்க பட்டுக்கொண்டே இருக்கும். உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு தேடலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு உங்களைப் பற்றிய ஒரு டேட்டாபேஸையே உருவாக்கிக்கொள்ளும். மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் அன்றாட தேவைகளையும் அவர்களின் ஒட்டுமொத்த விருப்பத்தையும் அறிந்து அவற்றைப் பற்றிய தகவல்கள் சேமிக்கப்படும்.

நீங்கள் தினந்தோறும் செய்யும் எண்ணிலடங்கா சாட்கள் அனைத்தும் வாட்ஸ்அப்பில் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு தான் எதிர்முனைக்கு செல்கிறது என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. கூகுளிலும் இதே நிலைமை தான். கூகுள் சர்ச் இன்ஜினில் நீங்கள் தேடுவதும் சரி, ஜிமெயிலில் பரிமாற்றப்படும் மெயிலும் சரி கூகுளால் ஸ்கேன் செய்யப்பட்டு தான் அனுப்பப்படுகின்றன. அங்கு நம் ஒவ்வொருவரைப் பற்றியும் பெரிய ஆராய்ச்சியே நடந்து கொண்டிருக்கிறது தினமும்.

இவ்வாறு ஒட்டுமொத்த மனிதகுலத்தின் தகவல் பரிமாற்றங்களும் இந்த இரு நிறுவனங்களின் மூலம் நடைபெறுவதால் இவ்வளவு பெரிய மெகா சைஸ் டேட்டாபேஸை உருவாக்குவது இந்த இரு நிறுவனங்களால் மட்டுமே சாத்தியம்.

இது எது வரை என்றால் நீங்கள் யூடியூபில் காணும் படங்களை அலசி ஆராய்ந்து கொண்டு அடுத்த முறை நீங்கள் யூடியூபினுள் நுழைந்தவுடன் உங்களின் ரசனைக்கேற்ற திரைப்படங்களின் பட்டியல் உங்கள் முன் தோன்றுமே. அதுபோல் ஃபேஸ்புக் இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முனைந்திருக்கிறது. வாட்ஸ் அப்பில் நீங்கள் அடிக்கடி உங்கள் நண்பருடன் பிரிட்னி ஸ்பியர்ஸ் பற்றி பேசிவிட்டு உங்களது பேஸ்புக் அக்கவுண்ட்டிற்குள் லாக் இன் செய்தால் பிரிட்னி ஸ்பியர்ஸின் “ஜாய் ஆப் பெப்சி“ விளம்பரத்தையோ, அவரின் லேட்டஸ்ட் ஆல்பம் அடங்கிய குறைந்த விலை டிவிடிக்களின் விளம்பரத்தையோ காணலாம்.

உலகின் மூலை முடுக்கில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் இரண்டு செயலிகள் கூகுளும், வாட்ஸ் அப்பும். ஆக கிட்டத்தட்ட இந்த பூமியின் பெரும்பான்மை மக்களின் டேட்டாபேஸும் இப்பொழுது இந்த இரு நிறுவனங்களின் கையில் உள்ளது. இதனால் என்ன பெரிய லாபம் கிடைத்துவிடப்போகிறது என நீங்கள் எண்ணலாம். ஆனால், ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உலகின் மிகப்பெரிய கம்பெனிக்களின் மிகப்பெரிய இலக்கு ஒன்றே ஒன்று தான். அது வாடிக்கையாளர்களான மக்களின் விருப்பங்களை அறிந்து கொள்வதுதான். இந்த பெரும் செயலை செய்து தரும் திருப்பணியை கூகுளும் வாட்ஸ் அப்பும் கவனித்து கொள்ள இப்பொழுது அந்த உலகளாவிய கம்பெனிகளின் ஆணி வேர் இந்த இரு நிறுவனங்களின் கையில்.

இப்பொழுது யோசித்து பாருங்கள், நம்மை பற்றிய டேட்டாபேஸிற்கு எவ்வளவு விலை கொடுத்திருக்கும் இந்த கம்பெனிகள். உண்மையில் இதற்கான விலை பில்லியன் டாலர்களை தொட்டு பல வருடங்கள் ஆகிற்று. இவ்வாறு நம்மைப் பற்றிய அந்தரங்கங்கள் அனைத்திற்கும் உற்பத்தித்தலமாக வாட்ஸ் அப் என்ற ஒன்று இருந்ததால் தான் ஃபேஸ்புக் இதற்கு கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் விலை கொடுத்திருக்கிறது.

மேலும் சில நிறுவனங்களோடு வைத்திருக்கும் டை-அப் மூலம் கோடிக்கணக்கில் பணம் வாட்ஸ் அப்புக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் வாட்ஸ் அப்புடன் டை-அப் வைத்திருப்பதனால் 16 ரூபாய்க்கு இலவச ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சாத்தியமாகி இருக்கிறது.

சிக்கனமும் பல வகைகளில் வாட்ஸ் அப்பிற்கு லாபத்தை அள்ளித் தந்திருக்கின்றது எனலாம். வாட்ஸ் அப் தன் சுய விளம்பரத்திற்கு இது வரை ஒரு ரூபாய் கூட செலவழித்ததில்லை. மேலும் வாட்ஸ் ஆப் முழுவதும் மிக எளிமையானது. இந்த காரணத்தினாலேயே இதனை பராமரிக்கும் செலவுகள் மிகவும் குறைவு. மேலும் கிட்டத்தட்ட கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்களை கொண்ட இந்த வாட்ஸ் அப் நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த இன்ஜினியர்களின் எண்ணிக்கை மொத்தமே 40-ஐ விட குறைவு.

வாட்ஸ் அப்பில் ஒவ்வொரு நாளும் புதிதாக சேர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் வாட்ஸ் அப்பில் பரிமாறிக்கொள்ளும் படங்களின் எண்ணிக்கை 4,000 கோடி. ஒரு புறம் இந்த எண்ணிக்கை அதிகரிக்க மறுபுறம் நம்மை பற்றிய டேட்டாபேஸிற்கான விலையும் எங்கோ ஒரு மூலையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது யாராலும் மறுக்க முடியாது.

Tags :
comments