தேசிய கீதத்தை தமிழில் பாடுவதன் மூலம் முழுமையான சுதந்திரத்தை அடைந்துவிட்டோமா?

  • February 4, 2016
  • 979
  • Aroos Samsudeen

(அட்டாளைச்சேனை மன்சூர்)

இவ்வருடம்(2016) சுதந்திர தின நிகழ்வுகளில் இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் கருத்துரைக்கையில் சுதந்திர தினத்தின் போது தமிழில் தேசிய கீதம் இசைப்பதை ஒரு சில அமைச்சர்கள் விரும்பவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்கவும் செய்தார்கள்.

எனினும் நான் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரின் விடாப்பிடியான முயற்சி காரணமாக அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. எனவே எதிர்வரும் சுதந்திர தினத்தில் இலங்கை வரலாற்றில் முதன்முதலாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் சுதந்திர கீதம் இசைக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

உண்மையில் தேசியக் கீதம் தமிழில் முதன்முதலாக 1949ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது தேசிய சுதந்திர தினத்தில் பாடப்பட்டதாக அண்மையில் பத்திரிகை ஒன்றில் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அப்படியானால் கடந்த 66ஆண்டுகளாக தேசியக் கீதம் தமிழில் பாடவில்லை. இவ்வாண்டு பாடப்படவிருக்கிறது. தேசிய கீதம் தமிழில் பாடினால் நாம் முழுமையான சுதந்திரத்தை அடைந்துவிட்டோமா? என்பதையும் சற்று நிதானித்து யோசிக்க வேண்டியும் உள்ளது.

இன்று சில அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற பேரினவாதிகள் தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்று கோரிக்கைவிட்டுக் கொண்டு வருகின்றனர். தேசியக்கீதம் பாடுவதன் ஊடாக அனைத்து சுதந்திரமும் கிடைத்துவிட்டது. இனிவழங்குவதற்கு எதுவுமே இல்லை என்பதுபோல இறுமாப்புக் கொள்கின்;ற அரசியல் வாதிகளால்தான் நாட்டில் இன ஒற்றுமை சீர் குலைக்கப்பட்டு இன்று பேரினவதாம் தலைதூக்க முற்படுகின்றது.

இன்று நாட்டிலுள்ள நல்லாட்சியாளர்கள் இன ஒன்றுமையின் பக்கம் தன் கவனத்தை செலுத்திக் கொண்டு வருகின்ற இன்றைய நாட்களில் மக்களின் மனங்களை வெல்வதற்கான முஸ்தீபுகளில் ஒன்று நாட்டில் பிரச்சினைக்குள்ளாகிய மொழிரீதியான சிந்தனையாகும். நாட்டில் இரு மொழிபேசுவோர் மாத்திமே உள்ள ஒருநாட்டில் அந்த மொழிக்குரிய அந்தஸ்த்தை வழங்குவதை உறுதிப்படுத்துகின்ற அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருந்த போதிலும் இன்று அதன் உறுதிப்பாட்டினை மேற்கொள்ள முயற்சிக்கின்றபோது இவ்வாறான பச்சோந்திகள் நாட்டை மீண்டும் குழப்ப முயற்சிக்கின்றனர். இந்த சுதந்திர தினத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.

நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களினதும் பாதுகாப்பு, சுதந்திரத்தன்மை பேணிபாதுகாக்கப்படுகின்றபோது நாடு அபிவிருத்தியை நோக்கிய நகர்வினை உருவாக்கும். அந்த அடிப்படையில் இன்று நடைபெறுகின்ற சுதந்திர தின வைபவத்தின்போது தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடுவதன் ஊடாக ஒற்றுமைமிக்கதான சமூதாயக் கட்டமைப்பை கட்டியெழுப்ப முடியும்.

இன்று நல்லிணக்கம், ஒற்றுமை என்பவை மீது முக்கியத்துவத்துடன் கவனம் செலுத்த வேண்டிய இந்த நேரத்தில், தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு ஏற்கெனவே உள்ள ஏற்பாட்டின் மீது கைவைத்து மக்களை மேலும் அல்லல்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சிகள் ஒழிக்கப்படவேண்டும். சிலர் தமிழில் தேசிய கீதம் பாடுவது சட்டவிரோதமானது எனக் கூறுவதையும் நாம் கேட்கின்றோம். அந்தவகையில் உணர்வுபூர்வமான ஒரு விடயத்தை அந்த மொழியில் பற்றுக் கொண்டு தேசத்தின் பற்றினை உள்ளார்ந்தமான முறையில் அனுபவிப்பதற்கு வழிசெய்த நல்;லாட்சியாளர்களுக்கு நாட்டு மக்கள் குறிப்பாக தமிழ்பேசும் மக்கள் நன்றியுடையோராக இருப்பார்கள் என்பது திண்ணம்.

இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்று(04.02.2016) கொண்டாடப்படுகின்றது. சுதந்திரத்தின் சுதந்திரமான காற்றை சுவாசித்திருந்த மக்களிடையே இனரீதியான பிளவுகளையும், பேரினவாதக் கருத்துக்களையும் ஊட்டி மீண்டும் நாட்டை குட்டிச்சுவராக்கி, கிடைத்த சுதந்திரத்தை தொடர்ந்தும் தக்கவைக்காது நாட்டையும், சமூகத்தையும் பலிக்கடாவாக்க நினைக்கும் ஒருசிலரின் வார்த்தைகள் மீண்டும் ஒரு சுதந்திரமற்ற நாட்டை உருவாக்க முனைவதிலிருந்து பாதுகாக்க வேண்டியது சுதந்திரத்தின் சுதந்திரமான காற்றை ஒற்றுமையுடன் சுவாசிக்க நினைக்கும் அத்தனைபேரினதும் கடமையாகும்.

மக்கள் அனைவரும் தத்தமது கடமைகளை ஜனநாயகப் பண்புகளுடன் விதைக்க வேண்டும் என்பதற்கான அத்திவாரங்கள் போடப்படுகின்றன. இதனை முறியடிக்க நினைக்கின்ற விரோதிகளையும், எதிர்ப்பாளர்களையும் மக்கள் நிராகரித்து ஒதுக்குவதன் மூலம் மீண்டும் சுதந்திரமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.

உண்மையில் சுதந்திர இலங்கையின் வரலாற்றுப்பின்னணியினைப் பார்க்கின்றபோது காலத்திற்குக்காலம் இலங்கை பல்வேறுபட்ட ஆளுகைகளுக்குள் உட்பட்டு சுதந்திரத்திற்கான விடுதலைநோக்கிய பயணத்தின் கஷ்டங்களை அனுபவித்துள்ளமை வரலாறாகும். சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் சிறுபான்மையினர் தொடர்பான சுதந்திர வேட்கைக்கு பெரும்பான்மையின அரசுகள் கொண்டிருந்த மேலாதிக்கம் இன்றுவரையிலும் தொடர்வதாகவே உள்ளது. காரணம் இன்னும் நாட்டுப்பற்றாளர்களை சுதந்திரத்தின் வெளிப்பாடுகள் காண்பிக்கவில்லை.

அதாவது சுதந்திரமானது வகுப்பாளர்களையும், இனவாதிகளையும் வளர்த்துள்ளதே தவிர இலங்கையன் என்கிற கருத்தாளத்தைக் கொண்டுள்ள மக்களை வளர்க்கத் தவறிவிட்டன. இதனால்தான் இன்று சிங்கள இரத்தம் என்றும், பொதுபலசேனா என்றும், மக்கள் மத்தியில் இனரீதியான கண்ணோட்டத்துடன் தத்தமது இனத்தின் மீதான பற்றின் காரணமாக மற்ற இனத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டதன் விளைவு நாட்டில் பாரிய விளைவுகள் கடந்தகாலத்தில் ஏற்பட்டதை மறக்கத்தான் முடியுமா. அதனை மீண்டும் கொண்டுவரத் துடிக்கும் ஏகாதிபத்திகளுக்கு மக்கள் இன்றைய நல்லாட்சியின் ஊடாக சாவு மணி அடிக்கவைத்துள்ளனர்.

இலங்கைக்குக் கிடைத்த சுதந்திரக் காற்று வெறுமனே கேட்டவுடன் கிடைத்ததொன்றல்ல. நாட்டின் பற்றுமிக்க பல்லாயிரக்கணக்கான வீரர்களினது தியாகத்தின் பின்னணியில் விளைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது. எமது நாட்டு சுதேசிகளின் ஆட்சிகளைத் தொடர்ந்து இலங்கையின் அமைவிடத்தின் முக்கியத்துவத்தை கண்டுகொண்ட மேற்கத்தேய ஏகாதிபத்தியவாதிகள் 1505ஆம் ஆண்டில் தம்மை அடிமைப்படுத்த முற்பட்டனர்.

அன்றிலிருந்து வெளிநாட்டினரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்துவந்த எமது நாட்டை ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் தத்தமது தேவைகருதி பயன்படுத்திக் கொண்டனர். நாட்டின் அபிவிருத்தியில் கவனம் கொள்ளாது அவர்களது நலனை முன்னிலைப்படுத்துவதிலேயே கருத்தாய் இருந்தனர். இதற்காகவேண்டியே ஒவ்வொரு திட்டத்தையும் ஆரம்பித்திருந்தனர். அப்பொழுதெல்லாம் உள்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. முடிவுகளுக்கான பாதையோ மிகவும் கரடுமுரடாகவே இருந்தது.

தோற்றுப்போன அடிமை சாசனத்தின் கீழ் எம்மக்கள்; வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டினுள் இருந்தபோது சுதந்திரத்தை அடைவதில், தாய் நாட்டுக்காக போராடிய வகையில் இந்நாட்டு மக்கள் இன, மத பேதமற்ற ஒரேதாய் பிள்ளைகள்போன்று ஒற்றுமையுடன் தமது எதிர்ப்பினைக் காட்டியமையினால் 1948.02.04ஆந்திகதி விடுதலை கிடைத்தது.

அதாவது எம்மை நாம் ஆளுகின்ற நிலைக்கு வந்தது. வளம் கொழித்த நாட்டை சீரழித்து, வெறுமையுடன் ஒப்புவித்திருந்தனர் அந்நிய ஆதிக்கவாதிகள். அதுமாத்திரமான என்ன எம்மிடையே பிரித்தாளும் தந்திரத்தை தந்திரோபாயமாக உள்ளீர்ப்புச் செய்து, அதனை சமயம்சார்ந்த விடயங்களுக்குள் ஒப்புவித்து குழப்பங்களுக்கும் தூபமிட்டுக் கொண்டனர். இனங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரிப்பதில் வெற்றியும் கண்டனர்.

ஏகாதிபத்தியவாதிகளோ ஒற்றுமைப்பட்டிருந்த மக்களிடையே குழப்பங்களை விளைவித்தனர். உதாரணமாக 1915ஆம் ஆண்டில் சிங்கள – முஸ்லீம் கலவரத்தைக் குறிப்பிடலாம். அன்றைய தலைவர்கள் மிகவும் நிதானமாக நடந்து கொண்டதால் இக்கலவரம்; பின்னர் அடங்கிப்போனமை வரலாறாகும்.

அன்று அநகாரிக தர்மபால, ஆறுமுக நாவலர், அறிஞர் சித்தி லெவ்வை, வாபிச்சி மரைக்கார் போன்றோர் தங்களது சமரீதியான நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தி, தத்தமது மார்க்கத்தை வளர்தெடுப்பதில் கங்கஙனம் கட்டிக்கொண்டு சமூகத்தின் கீர்த்திமிக்கத் தலைவர்கள், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாது ஒற்றுமையுடன் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்தனர்.

மத்தியதர வர்க்கத்தினரின் ஏகபோக உரிமையாக இருந்துவந்த அக்கால ஆங்கிலக்கல்வி முறையிலமைந்த நடவடிக்கைகள் இனரீதியான பிளவுகளுக்கும், பிரிவுகளுக்கும் வித்திட வழிவகுத்திருந்தமையினால், சமயப்பற்றுடன் தாம் கற்ற கல்வி மூலமாக ஒன்றுபட்ட ஒற்றுமைகொண்ட இலங்கையினைப் பெறுவதில் பெரும்பான்மையினருடன் இணைந்து சிறந்த வழிகாட்டலுடன் சிறுபாண்மைத் தலைமைகள் நல்லுறவு பூண்டிருந்ததை வரலாற்றின் படிகளில் காணலாம்.

அந்த அடிப்படையில் சமய ரீதியான கல்விக்கு முக்கியத்துவம் வழங்கிய நிலையில் அன்றைய தலைவர்கள் சமயரீதியான சித்தாந்தங்களை தம்மினத்தாரிடையே ஊட்ட முற்பட்டு அதில்; வெற்றியும் கண்டனர். அந்தவகையில் சமூதாய நலனில் அக்கரைகொண்ட தலைவர்களாக ஹென்ரி ஸ்டீல் ஒல்கொட், அநாகரிக தர்மபால, குணாநந்த தேரர், ஸ்ரீ ஆறுமுக நாவலர், சேர் பொன்னம்பலம் இராமநாதன், அறிஞர் சித்திலெவ்பை, கொடைவள்ளல் வாப்பிச்சி மரைக்கார், அப்துர் றகுமான், ஓராபிபாஷா, அப்துல் அஸீஸ், சேர் ராசிக் பரீத், டாக்டர்கலீல், எம்.எஸ் காரியப்பர், லத்தீப் சின்னலெவ்பை போன்றோர்கள் கல்வியின் மறுமலர்;ச்சிக்குரிய வழிவகைகளை ஏற்படுத்தி தான் சார்ந்த சமுதாயத்திற்கு உதவிசெய்திருந்தமை நினைவிற்கொள்ளத்தக்கதாகும்.

மட்டுமன்றி தேசிய விடுதலை நோக்கிய பயணத்தில் பல்வேறு இயக்கங்கள் ஊடாக தலைவர்கள் பலர் தங்களது பங்களிப்பினை நல்கியிருந்தனர். மத்தியதர வர்க்கத்தினரிடம் காணப்பட்ட செல்வச் செழிப்பு மற்றும் கல்வியறிவு போன்றவற்றை பயன்படுத்தி அரசியல் பலத்தைக் தம்பக்கம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தத் தொடங்கினர்.

அந்தவகையில் தொழிலாளர்களின் நலனில் அக்கரைகொண்டு உழைத்தன் காரணமாக 1893ஆம் ஆண்டில் அச்சகத் தொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது போராட்ட வடிவத்திற்கு மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவும் கிடைத்தது. இதன் பின்னணியில் இடதுசாரி தலைவர்கள் பாரியளவிலான பங்களிப்பினையும் நல்கியிருந்தனர்.

தேசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு சமயரீதியான விழிப்புணர்வுகள் மேம்படலாயின. பௌத்தம் இந்து, இஸ்லாம் போன்ற சமயரீதியான மறுமலர்;ச்சிக்கு மத்தியதர வர்க்கத்தினரின் கல்வியும் செல்வமும் பக்கபலமாயின. மேலும், தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தினரால் கலாசார மறுமலர்;ச்சிக்கும் அப்பால் அரசியல் சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களும் தொடங்கப்பட்டன.

தேசிய மது ஒழி;ப்பு இயக்கத்தின் ஊடாக தேசிய தலைவர்களான டி. எஸ் சேனநாயக்க, எப்ஆர். சேனநாயக்க, அநாகரிக தர்மபால, எட்மன் ஹேவாவிதாரண, சேர் டிபி. ஜயதிலக, டபிள்யு ஏ.சில்வா, பியதாஸ சிரசேன, ஆத்தர்.வி. தியெஸ் போன்றோர்கள் மதுபாவனைக்கு எதிரான பிரசங்கிகளாக தமது போராட்ட வடிவத்தை முன்கொண்டனர். பிரித்தானிய ஆட்சியாளர்கள் கதிகலங்கும் அளவுக்கு இவ்வியக்கத் தலைவர்கள் தேச விடுதலைக்கும் வெளிப்படையான ஆதரவைக் கொடுத்திருந்தனர்.

அக்காலகட்டத்தில் தெளிவில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி சிங்கள முஸ்லீம் கலவரத்தை சாதகமாக திசைதிருப்ப முயன்று இறுதியில் நாட்டுப்பற்றுக்காகவும், விடுதலை நோக்கிய போராட்டத்தின் விளைவாக முறியடிக்கப்பட்ட இனவாதத்தையும் இன்றைய நாளில் நினைவுகூறல் முக்கியமாகும். பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அரசியல் பின்னணியில் பல முஸ்லீம் தலைவர்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.

“ஆங்கிலக் கல்வியானது சமயத்திற்கு முரணானது” என்கிற வாதம் அக்கால முஸ்லீம்கள் மத்தியில் வலுப்பெற்றபோது கல்வியின் மூலமாக சமுதாயம் உயர்வடைவதன் அவசியத்தை பல முஸ்லீம் தலைவர்களுடன் இணைந்து சட்டசபையிலும் வெளியிலும் கலாநிதி ரீபி. ஜாயா அவர்கள் 1914ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “சிலோன் ரிவீவ்” என்கிற சஞ்சிகை வாயிலாக எழுதிய கடிதம் முஸ்லீம்களின் கல்விக்கு அவர்கொடுத்த ஒத்தடமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. கொழும்பு சாஹிறாவின் அதிபராக இருந்து செய்த சேவைகளை முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி ஏனைய சமூகத்தினருக்கும் பயன்தரும் விடயமாகவே அன்று பார்க்கப்பட்டது.

1921ஆம் ஆண்டின் “மனிங் யாப்பு சீர்திருத்தத்தம், 1931ஆம் ஆண்டில் டொனமூர் சீர்திருத்தத்தங்களின் விளைவாக சர்வஜன வாக்களிப்பு உரிமை வழங்கப்படலாயிற்று. இதன்பயன் இலங்கையின் சுதந்திரத்திற்;கான வழி மிக இலகுவாகத் திறக்கப்பட்டதுடன், தொடர்ந்து ஏற்பட்ட அரச நிருவாகச் சிக்கல்கள்கள், அதிகாரத் தன்மை, அமைச்சு நியமனம், வாக்குரிமை போன்ற விடயங்கள் காரணமாக தேசியத் தலைவர்கள் ஒன்றினைந்து போரட்டங்களை முன்னெடுக்க ஏதுவாகின.

இதன் பின்னணியில் சோல்பரி பிரபுவின் தலைமையில் உருவாக்கப்பட்ட “சோல்பரி யாப்பு – 1947” இல் உருவாக்கப்பட்ட கையுடன், நாட்டின் சுதந்திரத்திற்கான கதவும் திறக்கப்படலாயிற்று. 1947ஆகஸ்டில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து முதலாவது பிரதமராக கௌரவ டி.எஸ். சேனநாயக்க அவர்களும், ஆளுநராக சேர் ஒலிவர் குணதிலகவும் தெரிவாகினர்.

இவ்வாறாக பல்வேறு தலைவர்கள் ஒன்றிணைந்து பெற்ற சுதந்திரமானது முழுமையான வகையில் எம்மை வந்தடையவில்லை என்றுதான் கூறவேண்டும். காலத்திற்குக்காலம் அரசுகள் மாறினாலும் ஆளுகின்ற தலைமைகள், அரசியல்வாதிகள் தங்களது நலன்கருதி மக்களை பிரித்தாள முற்பட்டனர் என்பதுதான் யதார்த்தமாகும்.

மூவினமும் ஓரினமாய் பெற்ற சுதந்திரத்தை சரியான முறையில் கொண்டாட முடியாமல் போனமை துரதிஷ்டமே. காட்டிக் கொடுக்கின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். அப்போதுதான் பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்படும். அன்று இவ்வாறான ஒற்றுமையற்ற தன்மைகள் காரணமாக ஒவ்வொரு இனமும் மற்ற இனத்தின் மீது சந்தேகத்துடன் பார்க்க முற்பட்ட காலத்தை மறைக்க இன்றைய தலைவர்கள் இந்த சுதந்திர நாளில் திடசங்கற்பம் பூணவேண்டும்.

இது நடைமுறைச்சாத்தியமான விடயம் என்பதை முதலில் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். தமிழில் தேசியக் கீதம் பாடுவதன் ஊடாக எதிர்காலத்தில் நமக்குரிய நியாயமான பங்கு நல்லாட்சியில் கிடைக்கும் அதற்கான முயற்சியாக புதிய அரசியலமைப்பினை ஏற்படுத்துவதற்கு அரசு முயன்று வருகின்றது. அதன் அடிப்படையில் நாம் இன்றைய சுதந்திர தினத்தை இதயபூர்வமாக கொண்டாடுவோம்.

நன்றி – சுடர் ஒளி – 04.02.2016

(அட்டாளைச்சேனை மன்சூர்)

Tags :
comments