இலங்கை ஆடவர் ஹொக்கி குழாமிற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீக்கம்

  • February 5, 2016
  • 357
  • Aroos Samsudeen

Image title

தெற்காசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதை தடுக்கும் வகையில் இலங்கை ஆடவர் ஹொக்கி குழாமிற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதவான் ரி.டி. குணசேகர இன்று (05) நீக்கியுள்ளார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

ஹொக்கி குழாமினர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதற்காக விசா பெற்றுக்கொள்ளும் பொருட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கடவுச்சீட்டை ஒப்படைப்பதை தடுக்கும் வகையில் ஏற்கனவே நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆயினும, நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னரே தேசிய ஹொக்கி குழாமினர், விசாக்களை பெற்றிருந்ததனர்.

நீதிமன்றத்திற்கு ஒருசில விடயங்களை மறைத்தே முறைப்பாட்டாளர்கள் தடையுத்தரவை பெற்றுக்கொண்டுள்ளதாக விளையாட்டுத் துறை பணிப்பாளர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய பிரதி சொலிஸ்டர் நாயகம் சுமிதி தர்மவர்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் தேசிய ஹொக்கி குழாமிற்கான வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டதாகவும் பிரதி சொலிஸ்டர் நாயகம் நீதிமன்றத்திற்கு விளக்கமளித்தார்.

எவ்வாறாயினும், வீரர்களின் தெரிவு நீதியாக இடம்பெறவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளமையால், எதிர்வரும் 17 ஆம் திகதி இந்த வழக்கு நீதிமன்றத்தினால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Tags :
comments