களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம் – நல்லாட்சி அரசுக்குள் முரண்பாடு?

  • February 6, 2016
  • 768
  • Aroos Samsudeen

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்)

தேசிய அரசாங்கத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்குமிடையில் அறிக்கைப் போர் ஆரம்பமாகியுள்ளது. முரண்பாடுகள் வெளியில் தெரியாமல் இருந்து வந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸவின் கைதுக்குப் பிறகு பகிரங்கமாக மாறியுள்ளது.

சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் பலரும் சிறைக்குச் சென்று யோசித்தவைப் பார்வையிட்டதுடன் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிப்பது போல் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அறிக்கை ஒன்றினை விட்டுள்ளார். அதில் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமைக்காக கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய பிரபு ஒருவரின் மகன் கைதானமையை தாங்கிக் கொள்ள முடியாத பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் எனவும் அதற்கு தடையில்லை.பதவி விலகப் போவதாக கூறி தொடர்ந்தும் ஊடக கண்காட்சி நடத்த வேண்டியதில்லை. பதவி விலக விரும்புவோர் தங்களது பெயர்களை உடனடியாக வெளியிட வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் அனைவருக்கும் சமமானது. யாரேனும் சட்டத்தை மீறினால் தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என லக்ஸ்மன் கிரியல்லவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தியதாகவே தேசிய அரசாங்கம் செயற்படுகின்றது. இன்று நாட்டில் பல விடயங்களில் அரசுக்குள் கருத்து முரண்பாடு காணப்படுகின்றது. உரிய காலத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டிய உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. கீழ் மட்ட மக்களின் அபிவிருத்திக்கு பாரிய தடையினை தேர்தல் பிற்போடப்பட்டமை ஏற்படுத்தியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக் கொண்டு மக்களின் வாக்களிக்கும் உரிமையை பிற்படுத்துவது ஆரோக்கியமான விடயமாகத் தெரியவில்லை. இலங்கை போன்ற நாட்டுக்கு ஒரு கட்சி அரசாங்கம்தான் சரிவரும் என்று சொல்லுகின்ற நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்தும் முரண்பாடுகள் காணப்படுமாயின் அரசுக்குள் குழப்ப நிலை உண்டாகும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

பிரதமர் இது விடயத்தில் தமது அமைச்சர்களுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அறிய வருகின்றது. தேசிய அரசாங்கத்தை முன் கொண்டு செல்ல வேண்டுமாயின் ஜனாதிபதியும்,பிரதமரும் தமது கட்சிகளின் அமைச்சர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஊடக அறிக்கைகளை தவிர்த்துக் கொள்வதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டுக்கான நல்ல திட்டங்களை அமுல்படுத்துவதற்கான சூழ்நிலை ஏற்படும்.

Image title

Tags :
comments