சாப் விளையாட்டுப் போட்டியும், அம்பாரை வீரா்களின் வரலாற்றுச் சாதனையும்- களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்

  • February 8, 2016
  • 1168
  • Aroos Samsudeen

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்)

சாப் விளையாட்டுப் போட்டியும், அம்பாரை வீரா்களின் வரலாற்றுச் சாதனையும்

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது இந்தியாவின் அஸாமில் நடைபெற்று வருகின்றது. 12 ஆவது தடவையாக இடம்பெறும் இவ்விளையாட்டுப் போட்டியில் தெற்காசிய பிராந்தியத்தின் எட்டு நாடுகள் கலந்து கொள்கின்றது.

ஆரம்பத்தில் ஏழு நாடுகளே சாப் என்று அழைக்கப்படும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றியது. பிறகுதான் ஆப்கானிஸ்தான் நாடும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இதுவரை நடைபெற்ற 11 விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியாதான் முதலிடத்தைப் பெற்றிருக்கின்றது. பாக்கிஸ்தான் 7 தடவைகளும், இலங்கை 3 தடவைகளும் இரண்டாமிடங்களைப் பெற்றுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா பலமிக்க வீரா்களைக் கொண்ட நாடு என்பதை தொடர்ந்தும் நிருபித்துள்ளது. இலங்கை முதல் தடவையாக 1991ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற போட்டிகளில் பதக்கப் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் சிறிய பதக்க மாற்றத்தில் முதலாமிடத்தையும் பறிகொடுத்தது.

இலங்கை நீச்சல் அணியில் அங்கம் வகித்த நீச்சல் சாதனை வீரர் ஜுலியன் போலிங், நீச்சல் வீராங்கனை தீபிகா சண்முகம், மெய்வல்லுநர் அணியில் இடம்பெற்ற தமயந்தி தர்சா, சிறியாணி குலவன்ஸ,கருணாரத்ன போன்றவர்களின் அதீத திறமைகள் இலங்கை கூடுதல் தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக அமைந்தது.

அத்தோடு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் பலமிக்க இந்தியாவை தோற்கடித்து இலங்கை அணி தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது. இந்தப் போட்டி நடைபெற்று இன்றைக்கு 25 வருடங்கள் கடந்த போதிலும் அந்தப் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தவன் என்ற வகையில் அந்தக்காட்சிகள் என் மனத்திரையைவிட்டு அகலவில்லை.

இலங்கையின் விளையாட்டுத்துறையில் 1991ம் ஆண்டு நடைபெற்ற சாப் போட்டிகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் இளம் வீரா்கள் பல சாதனைகளைப் படைப்பதற்கும் உந்து சக்தியாக அமைந்தது. பிற்பட்ட காலப்பகுதியில் சுதந்திகா ஜெயசிங்க, சுகத் திலகரத்ன போன்ற சாதனை வீர,வீராங்கனைகளும் இலங்கையில் தோன்றினர்.

சுதந்திகா ஜெயசிங்க, சுகத் திலகரத்ன மற்றும் பல திறமையான வீரா்கள் தங்களது போட்டி நிகழ்ச்சிகளில் சாதனைகளுடன் கூடிய தங்கனப்பதக்கங்களைப் பெற்றுக் கொண்டது சர்வதேசம் அறிந்த விடயமாகும். சுதந்திகாவின் இந்த சாதைனைகள்தான் ஒலிம்பிக்கில் இலங்கை மக்களின் கனவாக இருந்து வந்த பதக்கம் ஒன்றுக்கான ஏக்கத்தை நிறைவேற்றிக் கொடுத்து.

அண்மைக்காலமாக சர்வதேசப் போட்டிகளில் மிகப் பெரிய பெறுதியில் இலங்கையின் மெய்வல்லுநர் வீரா்களால் சாதிக்க முடியாவிட்டாலும் பிராந்திய ரீதியான போட்டிகளில் பிரகாசித்து வருகின்றனர்.

இந்தியாவின் அஸாமில் நடைபெறும் போட்டிகளில் இலங்கையின் வெற்றிகள் குறித்து முழுமையான நம்பிக்கையோடு விளையாட்டுத்துறை அமைச்சு இருக்கின்றது. தமது நாடு இழந்துவிட்ட உயரிய இடத்தை மீண்டும் திரும்பப் பெறவேண்டும் என்கின்ற சிந்தனையோடு செயல்படுகின்ற விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர போட்டிகளைக் கண்டு களிப்பத்றகாகவும், வீரா்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் இந்தியா சென்றுள்ளார்.

அதேபோன்று பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் 13ம் திகதி இந்தியா செல்வதுடன் இறுதி நிகழ்வில் இலங்கையின் பிரதிநிதியாகவும் கலந்து கொள்கின்றார்.

தற்போது இடம்பெறும் போட்டி முடிவுகளின் படி இலங்கையின் பதக்க வேட்டை சிறப்பாக இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றது. குறிப்பா நீச்சல் போட்டியில் இலங்கை வீரா்கள் அசத்தி வருகின்றனர். முதல் கட்ட உதைபந்தாட்டப் போட்டியில் 10 வருடங்களின் பின்னர் இலங்கை இந்தியாவை தோற்கடித்துள்ளது.

இதில் விசேட அம்சமாக சாப் போட்டி வரலாற்றில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மெய்வல்லுநர் வீரா்கள் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். அட்டாளைச்சேனை- ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.ரஜாஸ்கான், பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த எ.எல்.அஸ்ரப் ஆகியோர்களாகும்.

இந்த இரண்டு பேரின் பங்குபற்றுதலை நம்மவர்கள் அறிந்து வைத்திருந்த நிலையிலும் அவர்களைப் பாராட்டுவதற்கு மனமில்லாதவர்களாக இருந்துவிட்டனர். இரண்டு வீரா்களின் ஆரம்பகால வெற்றிகளையும், திறமைகளையும் ஊடகங்களில் முதலில் கொண்டு வந்தவன் என்ற வகையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியுள்ளது.

இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு ஆளுமையுள்ள அமைச்சரும், ஒரு பிரதியமைச்சரும் கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதமாகும்.

இலங்கை நாட்டின் வெற்றிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

Image title

Tags :
comments