"இஸ்லாமிய மார்க்கம் காதலை, எதிர்ப்பதாக கருதுவது தவறானது"

  • February 13, 2016
  • 832
  • Aroos Samsudeen

Image title

காதலர் தினத்தை கண்டித்து இஸ்லாமிய பிரச்சாரகர்களும் இயக்கங்களும் அதிகமாக ஓங்கியொலிப்பதால் இஸ்லாமிய மார்க்கம் காதலை எதிர்ப்பதாக கருதுவது தவறானது.

இஸ்லாம் காதலை ஆதரிக்கிறது, காதலை வலியுறுத்துகிறது. ஒரு ஆணும் பெண்ணும் தமக்கான வாழ்க்கையை துணையை தேடிக்கொள்வதற்கான, தெரிவுசெய்வதற்கான உரிமையை தாராளமாகவே இஸ்லாம் வழங்கியுள்ளது.

மேலும் கட்டாயத்திருமணத்தை இஸ்லாம் வன்மையாகவே கண்டிக்கிறது. தனக்குப்பிடித்த, தனக்கேற்ற வாழ்க்கைத்துணையோடுதான் ஒரு ஆணும் பெண்ணும் வாழவேண்டுமென்பது இஸ்லாத்தின் கண்டிப்பான கட்டளை.

ஆனாலும் காதல் என்னும் பெயரால் சமகாலத்தில் இடம்பெற்றுவருகின்ற சமுதாய, கலாச்சார சீர்கேடுகளை இஸ்லாம் வெறுக்கிறது. மேலைத்தேய கலாச்சார மோகத்தில் சிக்குண்டு காதல் என்ற போர்வைக்குள் இளம்பெண்களின் கற்பொழுக்கம் சூறையாடப்படுவதை தூய இஸ்லாமிய மார்க்கம் மிகவும் வன்மையாகக்கண்டிக்கிறது.

பெண்களை கௌரவப்படுத்துவதையும் அவர்களை பாதுகாப்பதையுமே இலட்சியமாகக்கொண்ட இஸ்லாமிய மார்க்கம் காதலர் தினம் என்ற கலாச்சார சீரழிவால் பெண்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டு இறுதியில் அவர்களுடைய எதிர்காலம் இருட்டறையாவதை விரும்பவில்லை.

காதலர்தினங்களின்போது லொட்ஜ்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் றூம் போட்டு பெண்களை Use & Trough பண்டமாக பயன்படுத்துகின்ற இந்த படுகேவலமான சித்தாந்தத்தை இஸ்லாமிய மார்க்கம் ஒழித்துக்கட்ட முனைகிறது.

பூங்காக்களிலும் கடற்கரையோரங்களிலும் மரத்தடி மறைவுகளிலும் குடைகளுக்குள்ளும் அற்பநேர சுகத்திற்காக பெண்களின் விலை மதிப்பற்ற கற்புகளும் உயிர்களும் விரயமாக விலைபோவதை இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்காது.

எதிர்கால சந்ததியை வழிநடாத்துகின்ற பொறுப்பையும் கடமையையும் தன்னகத்தே சுமந்து நிற்கின்ற சமகாலத்தலைமுறை விபச்சாரத்தின் மூலமாக மானம், மரியாதைகளை இழந்து தனது எதிர்காலத்தை ஹோட்டல் அறைகளிலும் கடற்கரையோரங்களிலும் தொலைத்துவிட்டு நடுச்சந்தியில் நாதியற்று நிற்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

எனவே மேலைத்தேய உலகம் முறைகேடாகப்பெற்றெடுத்த சட்டவிரோதக்குழந்தையான காதலர் தினத்தின் மூலம் சமகால இளம் தலைமுறையின் எதிர்கால இலட்சியங்களும் கனவுகளும் கலைந்துபோகும் பரிதாபத்தை இன, மத, மொழி வேறுபாடுகள் எதுவுமின்றி பொதுவாகவேதான் எதிர்க்கிறது தூய இஸ்லாம்.

Tags :
comments