முபாரக் மௌலவியின் கருத்து தொடர்பில் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்

  • February 16, 2016
  • 646
  • Aroos Samsudeen

பெண்கள் தாமாக விரும்பாத வரை அவர்களை கட்டாயப்படுத்தி அரசியலில்; 25 வீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது பல குடும்பங்களில் அநாவசிய பிரச்சினைகளை தோற்றுவிக்கச்செய்வதோடு பலர் தமது மனைவிமாரை இழக்கும் நிலையும் ஏற்படலாம் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நடை பெற்ற கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்ட கருத்தினை தெரிவித்துள்ளார்.

பெண்கள் தாம் விரும்பினால் அவர்கள் அரசியலுக்கு வரலாம். பெண்கள் அரசியல் செய்யக்கூடாது என்ற சட்டம் நாட்டில் இல்லை. ஆனாலும் ஒழுக்கமான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு வருவதை தவிர்த்தே வருகிறார்கள். காரணம் நமது நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகளும் தலைவர்களும் ஒழுக்கம் கெட்டவர்களாக இருப்பதுதான் காரணம்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த, அங்கம் வகிக்கும் பெண்களில் பலர் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. பெரும்பாலும் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகைகள், பாடகிகள் என்றே இருக்கின்றனர். ஆக பெண்களுக்கு இருபத்தைந்து வீதம் வேட்பாளர் பட்டியல் எனும் போது இத்தகைய பெண்களே அரசியலுக்கு முன் வருவார்கள்.

சமூகத்தை சீரழிக்கும் இத்தகைய பெண்களால் ஏற்கனவே சீர் கெட்டுப்போயுள்ள அரசியல் மேலும் சாக்கடையாகும் நிலையே ஏற்படும். அத்துடன் பெண்கள் அரசியலுக்குள் வருவதன் மூலம் பல கணவன்மார் தமது மனைவிமாரை பறி கொடுக்கும் நிலையும் வரலாம். அரசியல்வாதிகளிடம் தொடர்பு வைத்திருக்கும் பல ஆண்கள் தமது மனைவியரை பறிகொடுக்கும் நிலை இலங்கை அரசியலில் மிக அதிகமாகவே உள்ளது.

அத்துடன் 25 வீதம் பெண் வேட்பாளர் வேண்டும் என்பதற்காக சில கட்சிகளினால் பெண்கள் விருப்பமின்றியே கட்டாயப்படுத்தப்பட்டு பட்டியலில் இணைக்கப்படும் நிலையும் ஏற்படும். இது அப்பட்டமான பெண்ணுரிமை மீறலாகும்.

மேலும் அரசியலில் அவதூறு என்பது கட்டாய கடமை என்பது போல் இருக்கும் நமது நாட்டின் ஜனநாயகத்தில் ஒழக்கமுள்ள பெண்கள் அநியாயமாக தமது மானத்தையும், கௌரவத்தையும் தேர்தல் மேடைகளில் இழக்க வேண்டியும் ஏற்படும் என்பதை எம்மால் உறுதியாக சொல்ல முடியும்.

ஆகவே பெண்களுக்கு 25 வீதமோ 50 வீதமோ என்றில்லாமல் பெண்கள் விரும்பினால் அவர்களை எத்தனை வீதமாகவும் வேட்பாளர்களாக நியமிக்கலாம் என்ற வழமையான சட்டத்தை அமுல்படுத்துவதே பெண்களை அநாவசியமாக அரசியலுக்குள் இழுத்து அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் இழிவு படுத்தும் நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியும் என முபாறக் மௌலவி மேலும் இங்கு தெரிவித்துள்ளார்.

முபாரக் மௌலவியின் கருத்தின்படி பெண்கள் அரசியலில் ஈடுபடுவதும், அதிகாரத்திற்கு வருவதும் பல வகையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றுள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் கட்டாய அரசியல் பெண்களை ஈடுபடச் செய்ய எடுத்துள்ள நடவடிக்கை அப்பட்டமான பெண் உரிமை மீறலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

முபாரக் மௌலவியின் கருத்தின் அடிப்படையில் இனிவரும் தேர்தல்களில் பெண்கள் குதிக்கும் போது குறிப்பாக முஸ்லிம் பெண்கள் தங்களை மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். முபாரக் மௌலவியின் கருத்துத் தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

முபாரக் மௌலவி பதிவு செய்யப்பட்டாத உலமாக் கட்சியின் தலைவராக இருந்து வருகின்ற போதிலும் அண்மையில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டு அக்கட்சியில் பதவி ஒன்றையும் பெற்றிருக்கின்றார்.

இவ்வாறான ஒரு நிலையில் முபாரக் மௌலவியின் கருத்தினை எந்தக்கட்சியின் கருத்தாக பார்க்க வேண்டிய குழப்பகரமான நிலை மக்களுக்கு உள்ளது. தங்களது கட்சியில் பதவி வகிக்கும் முபாரக் மௌலவியின் கருத்தினை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அங்கிகரித்துள்ளாரா? என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Image title

Tags :
comments