உதைபந்தாட்ட வளர்ச்சிக்கு புதிய மாற்றங்கள் நம்பிக்கையளிக்கும்

  • February 23, 2016
  • 557
  • Aroos Samsudeen

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்)

அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் புதிய தலைவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று திங்கட் கிழமை காலை 10 மணிக்கு அக்கரைப்பற்று டாக்டர் பதியுதீன் மௌமூத் வித்தியாலயத்தில் நடைபெற்றபோதே தலைவராக ஏ.எல்.தவம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் தலைவரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எம்.ஏ.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இப்போதுக்கூட்டத்தில் லீக்கில் பதிவு செய்து இயங்கி வருகின்ற கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இங்கு அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் செயலாளராக என்.ரீ.பாறூக், பொருளாளராக ஏ.எச்.ஹம்ஸா சனூஸ், உப தலைவர்களாக எம்.ஏ.நவாஸ், எம்.பி. செய்னுலாப்தீன்,எஸ்.எம்.அறூஸ்,ஏ.எல்.அன்வர்,ஐ.எச்.ஏ.வஹாப், உபசெயலாளராக எம்.சாதீக், உபபொருளாளராக எம்.ஐ.எம்.றியாஸ், முகாமையாளராக எ.எல்.றமீஸ், பயிற்றுவிப்பாளராக எம்.எச்.அஸ்வத்,கணக்காய்வாளராக ஏ.எல்.கியாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் துணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் அடுத்த நிர்வாக சபைக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக செயற்பாட்டு ரீதியில் பின்னடைந்து காணப்பட்டு வந்த அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் பொதுக்கூட்டத்தை கூட்டுமாறு பல தடவைகள் விளையாட்டுக் கழகங்களினால் கோரப்பட்டு வந்தது.

நீண்டகாலமாக உதைபந்தாட்ட வீரா்களின் கனவாக இருந்து வந்த உதைபந்தாட்ட லீக் அக்கரைப்பற்று லீக்காக தோற்றம் பெற்ற விடயம் எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் உதைபந்தாட்ட லீக்கிற்குரிய எந்தவித செயற்பாடுகளும் இன்றி லீக்கின் செயற்பாடுகள் அமைந்தது மிகப்பெரிய கவலையாக இருந்தது.

இன்று புதியவர்கள் நிர்வாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது புதிய உத்வேகத்துடன் அக்கரைப்பற்று லீக் செயற்படும் என்பதற்கு நம்பிக்கையளித்துள்ளது. அதன் தலைவரான மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆளுமைமிக்கவர். அவரது கன்னி உரையே மிகவும் சிறப்பாக அமைந்தது. உதைபந்தாட்டத்தின் வளர்ச்சிக்காக பல வேலைத்திட்டங்கள் முன்னடுக்கப்படும் என்று அறிவித்ததுடன் விரைவில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். அத்தோடு கழகங்களின் ஒத்துழைப்பினையும் வேண்டிக் கொண்டார்.

செயலாளராக தெரிவு செய்யப்பட்ட என்.ரீ.பாறூக் உதைபந்தாட்ட லீக் தொடர்பில் பரிட்சயமிக்கவர். மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவராக பல வருடங்கள் கடமையாற்றியவர். அவ்வாறான ஒருவரின் சேவையைத்தான் அக்கரைப்பற்று லீக் இதுவரை எதிர்பார்த்து இருந்தது.

பொருளாளரான அஹம்ஸா சனூஸ் உதைபந்தாட்டத்தில் பல சாதனைகளைப் படைத்தவர். நல்லதொரு சமூக சேவையாளன். உதைபந்தாட்டத்தை இப்பிரதேசங்களில் வளர்த்து எடுக்க வேண்டும் என்பதில் தீராத ஆசை கொண்டவர். இவ்வாறானவர்களுடன் உதைபந்தாட்ட தேசிய அணியில் விளையாடி பெருமை சேர்த்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.நவாஸ், ஏ.ஜிஅன்வர் மற்றும் உப தலைவர் செய்னுலாப்தீன், முகாமையாளர் றமீஸ், பயிற்சியாளர் எம்.எச்.அஸ்வத் போன்றவர்களின் அர்ப்பணிப்புமிக்க செயற்பாடுகளும் அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக் வளர்ச்சியடைந்து நமது பிரதேசங்களில் மிகவும் திறமையான வீரா்கள் தேசிய மட்டத்தில் பிரகாசிப்பார்கள் என நம்பலாம்.

Image title

Tags :
comments