பெண் வெட்டிக் கொலை: முகாமையாளர் கைது

  • February 28, 2016
  • 834
  • Aroos Samsudeen

Image title

கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதி கம்பனியின் உதவி முகாமையாளராக கடமையாற்றி வந்த பெண்ணொருவர் பட்டப்பகலில் அலுவலகத்துக்குள் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின்பேரில் அந்த நிறுவனத்தின் மட்டக்களப்பு முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள மேற்படி நிறுவனத்தில் முகாமையாளராகப் பணியாற்றும் நற்பிட்டிமுனை மயான வீதியைச் சேர்ந்த பொன்னம்பலம் உதயகுமார் (வயது 41) என்பவரே இவ்வாறு சனிக்கிழமை(27) மாலை கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ராஜேந்திரன் சுலக்ஷனா திலீபன் (வயது 33) என்பவரே இவ்வாறு சனிக்கிழமை(27) கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்தப் பெண் வழமை போன்று சனிக்கிழமை(27) காரியாலத்துக்குச் சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவருடன் கடமையிலிருந்த மற்றொரு வெளிக்கள உத்தியோகத்தர் பகல் போஷனத்துக்காக வெளியில் சென்று மீண்டும் அலுவலகத்துக்கு வந்து பார்த்தபோது குறித்த பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கீழே கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் நீதிபதியின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். இதன்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தப் பெண் கடந்த 8 வருடங்களாக மேற்படி நிதி நிறுவனத்தின் மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் பணிபுரிந்ததாகவும் கடந்த 10 நாட்களுக்கு முன்னரே கல்முனையிலுள்ள அலுவலகத்துக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Tags :
comments