பொத்துவில் கல்வி வலயம் அமைப்பதற்கான அனுமதியினை மாகாண சபையினால் வழங்கப்பட்டிருந்தும் அதற்கான முன்னெடுப்புக்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

  • February 29, 2016
  • 773
  • Aroos Samsudeen

Image title

(எம்.ஜே.எம். சஜித்)

பொத்துவில் கல்வி வலயம் அமைப்பதற்கான அனுமதியினை கிழக்கு மாகாண சபையினால் 02 தடவைகள் வழங்கப்பட்டிருந்தும் அதற்கான முன்னெடுப்புக்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது விடயமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்தி இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.றஸாக்கினால் பொத்துவில் கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற தனிநபர் பிரேரனை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றுகையில்….

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் றஸாக் 03வது தடவையாக கிழக்கு மாகாண சபையில் பொத்துவில் கல்வி வலயத்திற்கான தனிநபர் பிரேரனையை சமர்ப்பித்துள்ளார்.

பொத்துவில் கல்வி வலயம் அமைப்பதற்கான கோரிக்கை 2011ம் ஆண்டில் முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் எம்.ஏ.அப்துல் மஜீதினால் கொண்டு வரப்பட்டு பொத்துவில் வலயத்தினை அமைப்பதற்கான ஏகமனதாக தீர்மானத்தை கிழக்கு மாகாண சபை வழங்கியது. 2015ல் முன்னாள் கல்வி அமைச்சர் திரு.விமல வீர திஸாநாயக்கவினால் தனிநபர் பிரேரனை சமர்ப்பிக்கப்பட்டு பொத்துவில் கல்வி வலயம் அமைப்பதற்கான ஏகமனதாக தீர்மானத்தை கிழக்கு மாகாண சபை வழங்கியதுடன்.

பொத்துவில் வலயத்திற்கான உப கல்வி வலயம் திறந்து வைக்கப்பட்டு இவ் உப கல்வி வலயம் விரைவில் கல்வி வலயமாக தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. முன்னாள் மத்திய அரசாங்க கல்வி அமைச்சர் திரு.பந்துல குனவர்த்தன பொத்துவில் மத்திய கல்லூரி வைபவத்தில கலந்து கொண்டு உரையாற்றும் போது பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் இரண்டு வாரத்திற்குள் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

2016ம் வருட வரவு செலவு திட்ட கல்வி அமைச்சின் விவாதத்தில் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயக் கோரிக்கையை தற்போதைய கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.தண்டாயுதபானியிடம் முன் வைத்தேன். இச்சபையில் அவர் பதில் அளித்து உரை நிகழ்த்தும் போது பொத்துவில் பிரதேசத்திற்கான கல்வி வலயக் கோரிக்கையினை ஏற்றுக் கொள்கின்றேன் என வாக்குறுதி அளித்தார். இதுவரையும் பொத்துவில் வலயம் அமைக்கப்படவில்லை. எனவே, இந்த விடயம் கிழக்கு மாகாண சபையும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் இணைந்து அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள 21 முஸ்லிம் பாடசாலைகளையும், 8000 மாணவர்களின் நன்மை கருதியும் தனியான கல்வி வலயம் வழங்கப்பட வேண்டும். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் 2015ஃ12ம் இலக்க சுற்று நிருபத்தின் படி பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் 435 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது 299 ஆசிரியர்கள் மட்டும் பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் கடமை புரிகின்றனர்.

சுமார் 136 ஆசிரியர்கள் தேவைப்பாட்டுடன் இப்பிரதேச பாடசாலைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. பழைய சுற்று நிருபத்தின் படி 385 ஆசிரியர்கள் தேவை உள்ளது. இதன்படியும் 86 ஆசிரியர்கள் குறைபாட்டுடன் இப்பிரதேச பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இப்பிரதேசத்தில் வெளி வலயங்களில் இருந்து இரண்டு வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் கடமை புரிந்து தங்களின் பழைய பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக இன்னும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலமை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. எனவே, இப்பிரதேச மக்களின் நன்மை கருதி இவர்களுக்கான தனியான கல்வி வலயத்தினை வழங்குவதன் ஊடாக பொத்துவில் பிரதேச மக்களுக்கான வளங்கள் நேரடியாக அம்மக்கள் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

பொத்துவில் கல்வி வலயம் அமைவதற்கு பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலைகள் போதாது எனக் கருதினால் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 08 தமிழ் பாடசாலைகளையும், 02 சிங்களப் பாடசாலைகளையும் இணைத்தாவது பொத்துவில் கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டும். பொத்துவில் கல்வி வலயம் இன ரீதியிலான கோரிக்கை என யாரும் நினைத்து விட வேண்டாம். சுமார் 80முஆ தூரத்தில் பிரயாணம் செய்துதான் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு செல்ல வேண்டிய நிலமை உள்ளது.

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பாடசாலைகளின் தொகை போதாது என்றால் லகுகலப் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள சிங்கள மொழிப் பாடசாலைகளின் நிருவாகத்தினை 135முஆ தூரத்தில் அமைந்துள்ள அம்பாறை வலயக் கல்வி காரியாலயமே நிர்வகித்து வருகின்றன.

லகுகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகளை இணைத்தாவது பொத்துவில் கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டும். மஹாஓயா கல்வி வலயம் 5045 மாணவர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது, திருமலை வடக்கு கல்வி வலயம் 9000 மாணவர்கள் தொகையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச மக்களுக்கு கல்வி வலயங்கள் வழங்கப்பட்டதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். இன்னும் கிழக்கு மாகாணத்தில் புதிய கல்வி வலயம் கோரும் பிரதேசங்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று கல்வி வலயங்கள் வழங்குங்கள். ஆனால் பொத்துவில் மக்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கையினை ஏற்று முன்னுரிமை வழங்கி பொத்துவில் கல்வி வலயம் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Tags :
comments