ஓராண்டு விண்வெளி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பிய வீரர்கள்

Image title

நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஓராண்டாக ஆய்வு மேற்கொண்டிருந்த அமெரிக்கா மற்றும் ரஷ்ய வீரர்கள் இன்று பூமிக்கு திரும்பி உள்ளனர். இதன் மூலம் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த இரண்டாவது வீரர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கொட் கெல்லி மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மிச்செல் கோர்னிகோ ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம், சோயூஸ் விண்கலம் மூலம் விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்திற்கு ஆய்விற்காக சென்றனர்.

இவர்கள் பூமிக்கு வெளியே 340 நாட்கள் பயணித்து, ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்தில் 340 நாட்கள் தங்கி இருந்த இவர்கள், கசகிஸ்தானின் பாலைவனப் பகுதியில் திட்டமிட்டபடி இன்று காலை தரையிறங்கி உள்ளனர்.

340 நாட்கள் விண்வெளி பயணித்தின் போது இவர்கள் 144 மில்லியன் மைல்கள் பயணித்துள்ளனர். பூமியை 5440 முறை சுற்றி வந்துள்ளனர். பூமியின் சுற்று வட்டப்பாதையில் 10,880 முறை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை இவர்கள் கண்டுள்ளனர். பூமியின் பல்வேறு வண்ணம் கொண்ட 1000 படங்களை ட்விட்டரிலும், இன்ஸ்டகிராமிலும் அவ்வப் போது வெளியிட்டு வந்துள்ளனர்.

இதற்கு முன் 1990 களில் ரஷ்யர் ஒருவர் 438 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வு மேற்கொண்டார். இதுவே இன்றளவும் உலக சாதனையாக கருதப்படுகிறது. இந்த சாதனையை கெல்லி மற்றும் கோர்னிகோ கிட்டதட்ட நெருங்கி உள்ளனர்.

விண்வெளியில் அதிகபட்சமாக மனிதன் எத்தனை நாட்கள் இருக்க முடியும் என்பது குறித்து அமெரிக்கா ஆய்வு நடத்தி வருகிறது. 2030 இல் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளதால், அதற்கான முன்னோட்டமாக இதனை கருதுகிறது. ஆனால் கதிரியக்கம் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *