இலங்கை கிரிக்கட் அணியில் முஸ்லிம்களுக்கு கதவடைப்பு – பிரதியமைச்சர் ஹரீஸ் கவனம் கொள்வாரா?

  • March 11, 2016
  • 1808
  • Aroos Samsudeen

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்)

(எஸ்.எம்.அறூஸ்)

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தமிழ் வீரர்கள் உட்பட அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணி மலேஷியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இவர்களுக்கான வழியனுப்புதல் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது.

அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் கோபிநாத்தும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனான ரிஷாந்த் ரியூட்டரும் மட்டக்களப்பு மெதடிஸ்ட் கல்லூரி மாணவனான  ஜெயசூரியன் சஞ்சீவனும் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களான சஜித் இந்திரரத்ன, ரமேஷ் நிமந்த, பந்துல உடுபிஹில ( அணித் தலைவர் ), உதித் மதுவன்த, டில்ஷான் சந்துருவன், சனுக்க, நிபுன் சதுரங்க, சண்டீப் நிஸன்சல, கஜித் கொட்டுவெகொட, நிவன்த கவிஷ்வர,  இலங்கசிங்க, அத்தநாயக்க, அவிஷ்க பெர்னாண்டோ,  சனோஜ் செனவிரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் இலங்கை தேசிய அணியில் சில முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்தனர். இளவயது அணியிலும் சில முஸ்லிம்கள் இடம்பெற்றனர். பிரபல பாடசாலை அணிகளிலும் தற்போதும் முஸ்லிம் மாணவர்கள் ஆடிவருகின்றனர். எனினும் அண்மைய காலங்களில் இலங்கை தேசிய அணிகளில் முஸ்லிம்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் முஸ்லிம்கள் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்குகிறார்களா அல்லது ஓரங்கட்டப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

இலங்கை தேசிய கிரிக்கட் அணிக்காக பர்வீஸ் மஹ்றூப், ஜெஹான் முபாரக்,நவீட் நவாஸ், உவைசுல் கர்னைன், மர்ஹூம் அபுபுவாத் போன்ற வீரா்கள் இடம்பெற்று விளையாடியதுடன் அர்சாத் ஜூனைத் இலங்கை ஏ அணிக்காகவும், 23 வயதுக்குட்பட்ட அணிக்காகவும் விளையாடி சிறந்த சாதனைகளைப் படைத்திருக்கின்றார்.

முஸ்லிம் என்ற காரணத்திற்காக தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை அர்சாத் ஜூனைத் இழந்திருந்தமை கவலைக்குரிய விடயமாகும்.  மூவர்ஸ் அணிக்காக இசாம் கௌஸ் மிகச்சிறப்பாக விளையாடி வந்தார். இலங்கை ஏ அணிக்காக அவரை எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை தெரிவுக்குழு தெரிவு செய்யவில்லை.

நவீட் நவாஸ் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரம் பங்குகொண்டு சிறப்பாக விளையாடிய போதிலும் தொடர்ந்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது அப்பட்டமான புறக்கணிப்பாகும். இதனை தட்டிக்கேட்பதற்கு நமது ஊடகங்களே முன்வரவில்லை. ஆனால் எங்களால் முடிந்த எதிர்ப்புக்களை கட்டுரையாக அன்று எழுதினோம்.

பர்வீஸ் முஹ்றுப் சிறப்பாக விளையாடினார். மெத்தியுஸ் அணிக்குள் வந்ததும் அதனை காரணமாக வைத்து மிகவும் கச்சிதமாக மஹ்றூபை அணியிலிருந்து கழற்றிவிட்டார்கள். மஹ்றூபிற்கு நடந்த அநீதியை மஹேல ஜெயவர்த்தன கண்டித்திருக்கின்றார்.

அண்மைக்காலமாக கொழும்பு ஸாஹிராவின் இம்றாஸ் ராபி மற்றும் நிக்ஸி அஹமட் ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடி வருகின்னர்.இவர்கள் இருவரும் பாடசாலைகள் போட்டியில் 1000 ஓட்டங்களைப் பெற்றருக்கின்றனர். பந்துவீச்சில் உமர் களக்கினார். அதேபோன்றுதான் இன்று ஸாஹிராவுக்கு முகம்மட் அஹ்னப் சிறப்பாக விளையாடி வருகின்றார்.

கிரிக்கட்டில் தமக்கு எதிர்காலம் இல்லை என்பதற்காக இம்றாஸ் ராபி மற்றும் உமர் போன்ற இளம் வீரா்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.

நிக்ஸி அஹமட்டிற்கு பயிற்சியாளரின் நெருக்கடிகள் அவரை மனதளவில் பாதித்திருக்கின்றது.இருந்தபோதும் உள்ளுர்போட்டியில் அசத்தி வருகின்றார். நிக்ஸி அஹமட் மற்றும் அஹ்னப் இருவரும் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மாவட்ட ரீதியாகவே மலேசியாவுக்கான சுற்றுப்பயணத்திற்கு இளம் வீரா்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கிழக்கு மாகாணம் சார்பாகவும், அம்பாரை மாவட்டம் சார்பாகவும் குறித்த இரண்டு வீரா்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம்.  இந்த விடயத்தில் இலங்கை கிரிக்கட் நிறுவனம் பாரிய அநீதியை இழைத்துள்ளதாக களம் பெஸ்ட் இணையத்தளம் கருதுகின்றது.

அண்மையில் நடந்து முடிந்த இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தலில் திலங்க சுமதிபாலவுக்கு ஆதரவு அளித்ததற்காகவே மாவட்ட ரீதியாக வீரா்கள் தெரிவு செய்யப்பட்டு மலேசியாவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அறியக்கிடைக்கின்றது. இதன் மூலம் தனது நன்றியறிதலை சுமதிபால செய்துவிட்டார்.

தற்போது நமது சமூகத்தின் சார்பில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சராக இருக்கின்ற எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் இது விடயத்தில் உரிய கவனத்தை செலுத்த வேண்டும். வீரா்களின் திறமைகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும், கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் சுமதிபாலவுக்கும்  தெரியப்படுத்தி இன்று ஏற்பட்டுள்ள புறக்கணிப்பை நிவர்த்தி கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பாரப்பாகும்.

Image title

Tags :
comments