இருதய நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விற்றமின் டி ஆனது பெரிதும் உதவுவதாக புதிய ஆய்வொன்று கூறுகிறது.
சுமார் 70 வயதுடைய மாரடைப்புக்குள்ளான 163 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஆய்வின் பிரகாரம் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கப் பெறும் விற்றமின் டி போஷணையானது உடலெங்கும் குருதியை விநியோகிப்பதற்கான அவர்களது இருதயத்தின் ஆற்றலை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
லீட்ஸ் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் சிக்காகோ நகரில் திங்கட்கிழமை இடம்பெற்ற அமெரிக்க இருதயவியல் கல்லூரியின் 65 ஆவது வருடாந்த உச்சிமாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.
விற்றமின் டி போஷணை ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமாகவுள்ளதுடன் முழு உடலினதும் நலனுக்கு மிகவும் அத்தியாவசியமானதாக கருதப்படுகிறது. எனினும் பலர் இந்தப் போஷணையை போதியளவில் பெறாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வயதானவர்கள் சூரிய ஒளியில் நடமாடுவது மிகவும் குறைவாக உள்ளதுடன் சூரிய ஒளியைப் பயன்படுத்தி விற்றமின் டி போஷணையை உற்பத்தி செய்வதற்கான அவர்களது தோலின் ஆற்றலும் மிகவும் குறைவாகவுள்ளதாகக் கூறிய இந்த ஆய்வில் பங்கேற்ற இருதயவியல் நிபுணரான மருத்துவ கலாநிதி கிளோஸ் விட், தாம் ஆய்வில் பங்கேற்ற வயோதிபர்களில் ஒரு பகுதியினருக்கு வருடமொன்றுக்கு தினசரி 100 மைக்ரோகிராம் விற்றமின் டி மாத்திரையையும் மற்றைய பகுதியினருக்கு மருந்தற்ற இனிப்பு மாத்திரையையும் வழங்கி இந்த ஆய்வை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இதன் போது விற்றமின் டி மாத்திரையை உள் எடுத்தவர்களின் இருதயத்தின் குருதியை உடலெங்கும் விநியோகிக்கும்
ஆற்றலானது 26 சதவீதத்திலிருந்து 34 சத வீதமாக அதிகரிக்கின்றமை அவதானிக்கப் பட்டுள்ளது. விற்றமின் டியை சூரிய ஒளி யிலிருந்து மட்டுமல்லாது எண்ணெய்த் தன்மையான மீன்கள், முட்டைகள் மற்றும் காலை நேர தானிய (சீரியல்) உணவுகள் என்பவற்றிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும் .
ஆரோக்கியமான வயதானவர்களில் இருதயத்தின் குருதி விநியோக ஆற்றல் 60 சதவீதத்துக்கும் 70 சதவீதத்துக்கும் இடைப்பட்டதாகவுள்ளது.