இலங்கையைக் கவிழ்க்கும் விடுமுறைகள்!

  • April 15, 2016
  • 605
  • Aroos Samsudeen

Image title

இலங்கையில் வருடம் ஒன்றுக்கு வழங்கப்படும் 25 பொது விடுமுறைகள் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற போரினால் பல பில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை நிவர்த்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் நாட்டில் வழங்கப்படும் பொது விடுமுறைகள் பெரும் தடையாக அமைவதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆசிய நாடுகளில், இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரில் 13 நாட்களும் ஜப்பானில் 17 நாட்களும், இந்தோனேஷியாவில் 19 நாட்களும், தாய்லாந்தில் 20 நாட்களும் பொது விடுமுறைகள் வழங்கப்படுகின்றன.

அத்துடன், அமெரிக்காவில் 09 நாட்களும் அவுஸ்திரேலியாவில் 10 நாட்களும் பொது விடுமுறைகளாக உள்ளன. எனினும், இலங்கையில் பல்லின இனங்களை இலக்கு வைத்து இந்த விடுமுறைகள் ஒதுக்கப்படுகின்றன.

2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்துக்கமைய 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் பௌத்தர்களாக உள்ளனர். தவிர இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் ஏனையவர்கள் என பல்லின மத, இன அடிப்படையில் விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. பௌத்தர்கள் புனித நாளாகக் கருதும் பௌர்ணமி தினங்கள் வழங்கப்படும் பொது விடுமுறைகளே, வருடத்தில் 12 நாட்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags :
comments