விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அட்டாளைச்சேனை விஜயம்
அறிவும்,ஆளுமையும்,அழகும் தன்னகத்து கொண்டு நாட்டில் பலராலும் பேசப்படுகின்ற விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரிற்கு வருகை தரவுள்ளார்.
இந்நாட்டு விளையாட்டுத்துறை வரலாற்றில் இப்படியானதொரு அமைச்சர் நியமிக்கப்பட்டிருப்பது விளையாட்டு வீரா்களின் அதிர்ஸ்டமாகும். எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் விருப்பமுள்ளவராகவும், அதனை முன்னேற்றுவதில் ஆர்வமுள்ளவராகவும் தயாசிறி ஜயசேகர காணப்படுகின்றார்.
இனவாதங்களைக் கடந்து தேசத்தை நேசிக்கின்ற ஒருவராக தனது அரசியல் பயணத்தை கொண்டு செல்கின்றார். தொலைக்காட்சியில் அரசியல் விவாத நிகழ்வுகளில் இவரது விவாத ஆற்றல் பிரமிக்கத்தக்கது. நள்ளிரவு தாண்டியும் இவரது நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கலாம்.
குறிப்பிட்ட அமைச்சுக்கள் கிடைத்தால் மாத்திரம்தான் சேவை செய்ய முடியும் என்று சொல்லித்திரியும் நமது அரசியல்வாதிகள் மத்தியில் தயாசிறி ஜயசேகர விளையாட்டுத்துறை அமைச்சைப் பாரமெடுத்து பலவிதமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.
விளையாட்டுத்துறையின் பழமையான சட்டதிட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வீரா்களுக்கான சன்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திறமையான வீரா்களுக்கு ஜனாதிபதி விருது,கிராமப்புற மைதானங்களிற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு, விளையாட்டு சங்கங்களிற்கு முன்னுரிமை, விளையாட்டு வீரா்களுக்கு சிறந்த பயிற்சிக் கட்டமைப்பு, சிறுபான்மையின வீரா்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு போன்ற விடயங்களை அமுல்படுத்தி வருவதுடன் அதற்கான மேலதிக திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இவ்வாறானதொரு ஆளுமையுள்ள விளையாட்டமைச்சர் நமது மண்ணுக்கும் வரவேண்டும் என்பதில் அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகம் விருப்பமாக இருக்கின்றது. விளையாட்டுத்துறை அமைச்சருடன் குருணாகலில் உள்ள நண்பர்கள் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளனர். அந்த வகையில் அட்டாளைச்சேனைக்கு அவரைக் கூட்டிக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் புணரமைக்கப்பட்ட வெபர் மைதானம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. அந்நிகழ்வில் இந்நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைக்கவுள்ளார். இதில் நமது விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்.
இத்திறப்பு விழா நிகழ்வில் லக்கி விளையாட்டுக் கழக செயலாளர் எ.எல்.கியாஸ்தீன், பொருளாளர் யு.எல்.முனாப் மற்றும் உயர்பீட அங்கத்தவர்களும் கலந்து கொள்வதுடன், விளையாட்டுத்துறை அமைச்சரை அட்டாளைச்சேனைக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது..