அதிகாரப் போட்டியில் ரவுப் ஹக்கீமை வீழ்த்தி ஹசன் அலி வெற்றி

  • July 28, 2016
  • 5038
  • Aroos Samsudeen

Image title

(எம்.சி.ஹிம்ராஸ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிவரும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஹசன் அலி தரப்புடன் முழுமையான விட்டுக்கொடுப்பிற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் வந்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஈடுபட்டுவருகின்றார். கடந்த வாரம் ஹசன் அலியின் வீட்டுக்குச் சேன்று நேரடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப்பேச்சுவார்த்தையில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியுடன் செயலாளருக்குரிய அதிகாரமும் வழங்கப்படும் என்றும் இதற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் இணங்கியுள்ளார் எனவும் முதலமைச்சர் நஸீர் அஹமட் இங்கு தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த எம்.ரி.ஹசன் அலி செயலாளருக்குரிய அதிகாரங்கள் முழுமையானதா? அல்லது மட்டுப்படுத்தப்பட்டதா? என்பதை தனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் இந்த விடயங்களை தனது தரப்புடன் கலந்து ஆலோசித்துவிட்டு பதில் சொல்லுவதாக தெரிவித்துள்ளார்.

நீங்கள் குறிப்பிட்ட விடயங்களை தலைவரிடம் எத்திவைத்துவிட்டு மீண்டும் உங்களை சந்திப்பதாக கூறிவிட்டு நஸீர் அஹமட் சென்றுள்ளார். இப்போது எம்.ரி. ஹசன் அலிக்கு செயலாளருக்குரிய முழுமையான அதிகாரங்களை வழங்கி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் கொடுப்பதற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் முன்வந்துள்ளார்.

இதன் அடிப்படையில் முரண்பாட்டு அணியின் முக்கியமானவராகக் கருதப்படும் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவுத் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்தக்கூட்டத்தில் அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு எதிராக செயற்படும் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக்கூட்டத்தில் வைத்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதுடன் அமைச்சர் ரவுப் ஹக்கீமுடன் பலமான ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வதற்கும் முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாம்.

எம்.ரி.ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவி கிடைப்பதற்கும், செயலாளருக்குரிய அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கும் தவிசாளர் பசீர் சேகுதாவு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

அதிகாரப் போட்டிக்காக முட்டி மோதும் இரண்டு தரப்பினர்களுக்கிடையில் ஹசன் அலி பாராளுமன்றம் செல்வதன் ஊடாகவே தமது தரப்பு பலப்படும் என்று பசீர் சேகுதாவுத் நம்புகின்றார். அந்த வகையில் ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவி வழங்கப்படுவதும் அதனை அவர் பெற்றுக்கொள்வதும் இன்று உறுதியாகியுள்ளது.

அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் மீது ஹசன் அலியும் அவரது புதல்வர் அலி சப்ரியும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுத்தி வந்த நிலையில் அந்தக்குற்றச்சாட்டுக்கள் இத்துடன் முடிவுக்கு வந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அடகுவைத்து இதுவரைக்கும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் பெற்றுக்கொண்ட பணங்களை முழுமையாக மக்களுக்கு தெரியப்படுத்தி தனது தலைமைப்பதவிக்கு ஆபத்தை பசீர் சேகுதாவுதுடன் சேர்ந்து ஏற்படுத்திவிடுவார் என்ற அச்சத்தின் காணமாகவே ஹசன் அலிக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் நம்புகின்றனர்.

இதேவேளை உயர்பீடச் செயலாளராகக் கடமையாற்றும் மன்சூர் எ.காதரை அப்பதவியிலிருந்து விலக்குவதற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

எம்.ரி.ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அட்டாளைச்சேனைக்குரிய தேசியப்பட்டியல் எம்.பி பதவி இல்லாமலாக்கப்பட்டுள்ளதுடன் அந்த மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட வாய்ப்பு வந்துள்ளது.

நாட்டில் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளதால் தொகுதி வாரித் தேர்தல் முறையில் அட்டாளைச்சேனைப்பிரதேசத்திற்கு எம்.பி பதவியைப் பெற்றுக்கொள்வதுகடினமான விடயமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 36 வருடகாலம் எம்.பி பதவி இல்லாத அட்டாளைச்சேனைக்கு மீண்டும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.

Tags :
comments