ஹனிபா மதனிக்கு அக்கரைப்பற்று மு.கா போராளி எப். அப்துல் குத்தூஸின் திறந்த மடல்

  • July 29, 2016
  • 1319
  • Aroos Samsudeen

Image title

அன்புள்ள ஹனிபா மதனி அவர்களே! நீங்கள் எழுதிய கடிதம் ஒன்றை முழுமையாக எனக்கு வாசிக்கக் கிடைத்தது நேற்றுத்தான். வரலாற்றுப் புகழ்மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையை நினைவூட்டி, அப்படியான ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு தவிசாளர் பசீர் சேகு தாவூத்தையும் செயலாளர் ஹசனலியையும் இணைத்துக் கொண்டு கட்சியை வழிநடாத்துமாறு நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு அறிவுரை கூறியுள்ளீர்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி போன்று அடிக்கடி திறந்த மடல் எழுதும் உங்களின் மடலை காணாமல் ஏக்கத்தில் இருந்த எங்களுக்கு, அதனைக் கண்டதும் நீங்கள் இன்னும் உங்கள் மரபில் மாறாது இருப்பதை உணர்ந்து கொண்டோம். உங்கள் மடல் வராத காலத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உங்கள் மடல் ஏன் இவ்வளவு தாமதம்? என்ற ஆதங்கத்தில், பல இடங்களில் அலசிப் பார்த்தோம். நீங்கள் ஒலுவில் அமைப்பாளர், சாய்ந்தமருது அமைப்பாளர், மற்றும் சில ஊடகவியலாளர்கள் போன்றோரையும் இவர்களைப் போன்ற பலரையும், ஹசனலி அவர்களுக்கு சார்பாக திருப்புவதில் மிகுந்த பிரயத்தனம் எடுத்துக் கொண்டதில் உங்கள் காலம் செலவிடப்பட்டதால் உங்களுக்கு மடல் எழுத நேரமிருக்கவில்லை என்று அறியக் கிடைத்தது.

மேலும், நோன்பு திறப்பிக்கவென கவனமாகத் தெரிவு செய்தவர்களுக்கு மட்டும் அழைப்பிதல் அனுப்பி, அவர்களை ஹசனலிக்குச் சார்பானவர்களாக ஆக்கிக் கொள்வதற்கும், மேற்கூறிய ஊடகவியலாளர்களை தலைவர் றஊப் ஹக்கீமுக்கு எதிராக எழுத வைப்பதற்குமான சந்தர்ப்பத்தை நோன்பின் பேரால் உருவாக்கிக் கொண்டதில் உங்கள் நேரத்தை செலவிட்டதால் மடலுக்கு நேரமில்லாமல் இருந்திருக்கிறீர்கள். நோன்பு திறந்ததும் எல்லோரையும் அனுப்பிவிட்டு, ஹசனலியையும் இவ்வூடகவியலாளர்களையும் தனியாகச் சந்திக்க வைத்து, தலைவர் ஹக்கீமுக்கு எதிராக எழுதுவதற்கு, ஹசனலி துணுக்குகள் கொடுக்க டாப்பர் வேலை பார்ப்பதில் உங்கள் காலம் கடந்திருக்கிறது.

சரி, காலம் இவ்வாறு கடந்ததுதான் கடந்தது, கிடைத்த நேரத்தில் எழுதிய மடலிலாவது கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். ஹுதைபிய்யா உடன்படிக்கையை குறிப்பிட்டுச் சொல்லும் போது, இடம், பொருள், ஏவல் போன்ற விடயங்களில் கவனமாக இருந்திருக்கலாம். அதிலும், மதீனா சென்று ஓதிய நீங்கள், மதீனாவுக்கு வெளியே மக்காவுக்கு அருகில் ஹுதைபிய்யாவில் செய்யப்பட்ட ஒப்பந்தம், மதீனாவுக்கு வெளியில் வாழ்ந்த யாரோடு செய்யப்பட்டது என்பதை ஆழமாக சிந்தித்த பின்னர் உங்கள் மடலை வரைந்திருக்கலாம். அவ்வாறான கவனமில்லாமல் மடல் எழுதி, நீங்கள் ஹசனலிக்கு முண்டு கொடுப்பதில் அதிகம் அக்கறை எடுப்பதாக, உங்களை நீங்களே காட்டிக் கொடுத்து விட்டீர்கள்.

இனி விடயத்திற்கு வருவோம், ஹுதைபிய்யா உடன்படிக்கை மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும்; மக்காவிலே வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளான குறைசிகளுக்குமிடையில் நடந்ததே தவிர;

1)மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும்; மதீனாவில் வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளுக்குமல்ல.

2)மதீனாவுக்குள் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும்; மதீனாவுக்குள் வாழ்ந்த முனாபிக்குகளுக்குமல்ல

இந்த இரண்டு அடிப்படை அம்சங்களையும் வைத்துப் பார்க்கும் போது, நீங்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை குறிப்பிட்டுக் காட்டி தலைவர் றஊப் ஹக்கீமை, ஹசனலியோடும் பசீரோடும் செய்யச் சொல்லும் ஒப்பந்தம் எந்த வகைக்குள் வருகிறது? என்பதை நிதானமாக யோசிக்காமல், உங்கள் பக்கசார்பு நிலையைக் காட்டி விட்டீர்கள் என்பதை நான் உங்களுக்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை மிகத்தெளிவாக மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும்; மக்காவிலே வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளான குறைசிகளுக்குமிடையில் நடந்தது என்ற அடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வெளியே இருக்கும் அதாவுல்லா, ரிஷாத், ஹிஸ்புல்லா, அமீர் அலி போன்றோரோடு தலைவர் ஹக்கீம் ஒப்பந்தம் செய்து கொண்டால், அதனை ஹுதைபிய்யா ஒப்பந்ததைப் போன்ற ஒப்பந்தம் என்று கூறலாம்.

ஆனால், நீங்கள் ஒப்பந்தம் செய்யச் சொல்வதோ; நாங்களும் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்று இன்று வரைக் கூறிக் கொண்டு, ஊடகங்களில் தலைவருக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுக்களைக் கூறி அறிக்கைகளை விட்டுக்கொண்டு, கட்சியை அழிக்க திரைமறைவில் சதி செய்வோரோடு என்பதை உங்களுக்கு குறித்துக் கூற விரும்புகிறேன். அதாவது, மதீனாவுக்குள் இருந்து கொண்டு நாங்களும் முஸ்லிங்கள்தான் என கூறிக் கொண்டு, இஸ்லாத்தையும் அதன் தலைமையையும் அழிக்க சதி செய்து கொண்டிருந்த முனாபிக்குகளான அப்துல்லா இப்னு உபை போன்றவர்களின் குணத்தை ஒத்தவர்களோடு ஒப்பந்தம் செய்யச் சொல்கிறீர்கள்.

ஆகவே, முனாபிக்குகளோடு ஒப்பந்தம் செய்யச் சொல்லும் நீங்கள், எப்படி அதனை ஹுதைபிய்யா ஒப்பந்தத்தோடு ஒப்பிடுவீர்கள்? என்பதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் முனாபிக்குகளோடு சார்ந்திருக்கிறீர்கள் என்பதற்காக, நீங்கள் கூறும் ஒப்பந்தம் ஹுதைபிய்யா உடன்படிக்கை போன்றதாக ஆகி விடுமா? முனாபிக் அப்துல்லா இப்னு உபையை அல்லாஹ் குர்ஆனில், அவன் இழிவுபடுத்தப்படுவான் என்று கூறி இழிவுதான் படுத்தினானே தவிர, அவனோடு ஒப்பந்தங்களைச் செய்ய சொல்லவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?

எனவே, ஹனிபா மதனி அவர்களே! உங்கள் கருத்தை சொல்லும் போது இனியாவது கவனமாகச் சொல்லப் பாருங்கள். முனாபிக்குகளோடு ஒப்பந்தம் செய்யச் சொல்லி யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். தலைவர் ஹக்கீம் உங்களுக்கு தனது அமைச்சில் பதவியும் வாகனமும் தராத கோபத்தில், ஹசனலியோடும் பசீரோடும் அண்மைக்காலமாக நீங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் உறவின் ரசத்தில், இஸ்லாத்திற்கு தவறான அர்த்தங்களைக் கொடுக்க முன்வர வேண்டாம். இஸ்லாம் நெருப்பு. தீண்டினால் உங்களை அழித்து விடுமென்பதைக் கொண்டு உங்களுக்கு உபதேசம் செய்கிறேன்.

Tags :
comments