‘’கரையோர மாவட்டமும் மயிரும்’’ என்ற பசீருக்கு ஒரு நீண்ட கடிதம்…..

  • August 11, 2016
  • 2039
  • Aroos Samsudeen

Image title

பாகம் – 01

தவிசாளர் பசீர் அவர்களே!

துரோகம் எங்கு தொடங்கினாலும் அதனைக் கொண்டு படிப்பினை பெறுவது காலம் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்பதை மறந்தால், அது யாராக இருந்தாலும் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமாகவே இருக்கும். அதனை இன்றாவது உணர வைத்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

தமிழினம் ஆயுதமேந்திப் போராடிக் கொண்டு அதன் இரத்தத்திலும் சதையிலும் 89 களில் ஈரோஸ் ஊடாகப் பெற்ற பாராளுமன்ற ஆசனத்தை உங்கள் சுயநலத்திற்காக இராஜினாமா செய்யாமல் துரோகத்தனமாக கபளீகரம் செய்த போது உங்களை சரியாக அடையாளம் கண்டிருக்க வேண்டும். அதில் தவறிவிட்டோம்.

ஒரு சமூகம் தனது வாழ்விழந்து; வாழ்விடமிழந்து; உயிரிழந்து; உடமையிழந்து; ஊனுற்று போராடிக்கொண்டிருக்கின்ற போது, ஒரு கட்டத்தில் அந்தப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத அம்சமாக பாராளுமன்ற அரசியலைத் திறக்கும் நிலை எடுத்து நின்ற போது, அவர்கள் இழந்து நிற்கும் வாழ்வை; வாழ்விடத்தை; உயிரை; உடமையை; ஊனத்தைப் பொருட்டென்று கொள்ளாமல், அந்த சமூகமே அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போனாலும் பதவியில் நீங்கள் எவ்வளவு வெறி கொண்டு இருப்பீர்கள் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளாமல் இருந்தது நாங்கள் செய்த தப்புத்தான்.

அதுதான் போகட்டும், பதினெட்டாவது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தில் கட்சியை அரசாங்கத்திற்கு ஆதரவு செய்ய நீங்கள் எடுத்துக்கொண்ட கள்ளத்தனமான முயற்சிகளையும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் காவுகொள்ள மேற்கொண்ட சதிகளிலும் நாம் பாடம் கற்றிருக்க வேண்டும். அதிலும் தவறு விட்டு விட்டோம்.

மகிந்த இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்த போது, இனி தானே தனது மரணம் வரை ஆட்சி செய்ய வேண்டுமென்ற அல்லாஹ்வை மறந்த பேராசையில் பதினெட்டாவது சரத்தினைக் கொண்டு வர முனைந்த போது, கட்சியை ஆதரவு செய்ய வைக்க முகவராக உங்களையே அடையாளம் கண்டார். உங்களுக்கு கைமாறப்பட்ட முடிச்சிக்களுக்காகவும், அமைச்சுப் பதவி பற்றிய வாக்குறுதிக்காகவும் நீங்கள் களமிறங்கினீர்கள்.

இவ்வாறான கொந்தராத்து உங்களுக்கு மகிந்தவால் வழங்கப்பட்டுள்ளதை அறியாமல் தலைவர் றஊப் ஹக்கீம் நுவரெலியாவில் சட்ட முதுமாணிப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தார். தற்செயலாக அவருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரமே அவர் உசாரடைந்து உங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்தார் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள்.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை மகிந்தவின் அதிகாரத்தைக் காட்டிப் பயமுறுத்திப் பணிய வைத்துக் கையில் எடுத்துக்கொண்டு, பதினெட்டாவது சரத்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் தலைவரின் வீட்டில் தலைவரை சந்திக்கப்போனதையும் நீங்கள் அவ்வளவு இலகுவில் மறந்திருக்க நியாயமில்லை. அப்போது அங்கு என்ன நடந்தது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தலாம் என்று நினைக்கிறேன்.

தலைவர் றஊப் ஹக்கீமோடு செயலாளர் ஹசன் அலியும், பொருளாளர் அஸ்லம் அவர்களும் இருந்ததும், உங்களுக்குள் காரசாரமான கருத்து வேறுபாடு ஏற்பட்டதும் நினைவில் இல்லாமல் போயிருக்காது. மகிந்தவுக்கு எதிராக எவ்வளவோ பேசிவிட்டும் செய்துவிட்டும் மகிந்தவிடம் போய் மண்டியிட்டு, சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் பதினெட்டாவது சரத்திற்கு வாக்களித்தால் முஸ்லிம் சமூகம் நம் மீது பழி சொல்லும் என்று தலைவர் றஊப் ஹக்கீமும் ஹசன் அலியும் கூறியதற்கு அங்கிருந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சாட்சி என்பதை உங்களால் மறுக்க முடியாது.

கரையோர மாவட்டத்தை வென்றெடுக்க வேண்டிய நேரத்தில் இப்படியாக அரசுக்கு அதரவு செய்வது, நமது கொள்கையை காற்றில் பறக்க விடுவதற்குச் சமன் என்று கூறிய போது, ‘’கரையோர மாவட்டமும் மசிரும். எதுக்கெடுத்தாலும் கரையோர மாவட்ட மசிரைத்தான் கொண்டு வந்து ஓட்டுவீங்க ’’ என்று இருந்த கதிரையிலிருந்து நீங்கள் ஆத்திரமுற்று துள்ளி எழுந்ததை நினைவூட்டிப் பாருங்கள். நீங்கள் பயன்படுத்திய வார்த்தையில் ஹசன் அலி ஆத்திரப்பட்ட போது அவர் மீது எரிந்து விழுந்ததை எண்ணிப்பாருங்கள். இப்படி கரையோர மாவட்டமும் மயிரும் என்று கூறிய அதே வாயால், கல்முனைக்கு வந்து நாக்கூசாமல் கரையோர மாவட்டத்தை பெறக் காலக்கேடு விதித்துப் பேசி மக்களை ஏமாற்றியது இந்தக் கடிதத்தை வாசிக்கும் போது உங்கள் கண் முன் வந்து போகுமென்றே நினைக்கிறேன்.

இப்படி விவாதம் நீண்டு செல்ல, இருக்கையை விட்டு வேகமாக எழுந்த நீங்கள் தலைவரைப் பார்த்து ‘’நான் அரசாங்கத்தோடு போகிறேன். நீங்கள் வராவிட்டால் இருங்கள். மகிந்தவை யாரும் இனி அசைக்க முடியாது. அவன்தான் தொடர்ந்து ஜனாதிபதியாக இருக்கப் போகிறான்’’ என்று கூறி விட்டு ‘’ இனி அரசியலில் நான் உங்களோடு இல்லை. நமது தனிப்பட்ட உறவை மாத்திரம் பேணிக்கொள்வோம்’’ என்று கூறிய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.

அதற்குப் பின்னர்தான், கட்சியைக் காப்பாற்றும் நோக்கில் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் அரசாங்கத்தோடு இணைய நிர்ப்பந்திக்கப்பட்டு, பதினெட்டாவது சரத்திற்கு ஆதரவளித்தார். கண்ணைத் திறந்து கொண்டே குழிக்குள் விழுந்தேன் என்று பகிரங்கமாக தவறை ஏற்றுக்கொண்டார் என்பதை உங்களால் மறுக்க முடியாது. இப்படி மகிந்தவுக்கு முகவர் வேலை பார்த்ததால் உங்களுக்கு பிரதியமைச்சர் பதவி வழங்குவதற்கு தலைவர் றஊப் ஹக்கீமின் சம்மதத்தைப் பெற, பசில் ராஜபக்ஷ றஊப் ஹக்கீமின் வீட்டுக்கே வந்தார் என்பதை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

இப்படி நடந்த எல்லாக் காட்சிகளையும் மூடி மறைத்து, உங்களை உத்தமராக்கிக் கொண்டு, பதினெட்டாவது சரத்திற்கு வாக்களிக்கக் கட்சிக்கு காசு வழங்கப்பட்டது என்று சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் கூறிய கதைகளை பாமரனும் நம்பமாட்டான் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளாதது உங்கள் தப்பு. அதேபோல, முடிச்சுக்களுக்காகவும் அரை அமைச்சுப் பதவிக்காகவும் நீங்கள் சமூகத்தையும் கட்சியையும் மகிந்தவிடம் மாட்டி விட்டபோது உங்களை சரியாக அடையாளம் காணாதது எங்கள் தப்புத்தான். நாங்கள் கண்ணைத் திறந்து கொண்டு பசீர் என்னும் பள்ளத்தில் வீழ்ந்துதான் விட்டோம்.

(போராளி – நிப்ராஸ்)

Tags :
comments