கட்சி முரண்பாட்டை தீர்க்க ஹசன் அலிக்கு அமைச்சர் ஹக்கீம் தூது – அதனை ஹசன் அலி நிராகரிப்பாம்.

  • August 13, 2016
  • 1055
  • Aroos Samsudeen

Image title

செயலாளருக்குரிய அதிகாரத்தை மீண்டும் வழங்கக் கோரி அமைச்சர் ரவுப் ஹக்கீமுடன் முரண்பட்டுள்ள செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலியின் அண்மைக்கால ஊடக அறிக்கைகள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால தேர்தல் செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுவதால் அவருடன் சமரசத்திற்கு வருவதற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் முன்வந்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலியின் இளைய சகோதரரும், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான ஜப்பார் அலியை தனது வீட்டுக்கு அழைத்து பல விடயங்கள் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் பேசியதுடன் தன்னுடன் இணக்கப்பாட்டிற்கு வருமாறு ஹசன் அலிக்குத் தூது ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற சல்மானை இராஜினாமாச் செய்துவிட்டு உடனடியாக ஹசன் அலியை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்றும் கட்சியின் தலைமையகத்தில் இருந்து கொண்டு கட்சிப்பணிகளை முன்னடுக்குமாறும், எதிர்காலத்தில் அவரின் நன்னடத்தையை கவனத்தில் கொண்டு முழுமையான செயலாளருக்குரிய அதிகாரங்கள் ஹசன் அலிக்கு வழங்கப்படுவது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் இங்கு ஜப்பார் அலியிடம் கூறியதுடன் இதனை ஹசன் அலியிடம் தெரியப்படுத்தி அவரை சம்மதிக்க வைக்குமாறும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்த விடயங்களை தனது சகோதரர் ஹசன் அலியிடம் தூது சென்ற ஜப்பார் அலி முன்வைத்துள்ளார்.

சற்றுக்கோபப்பட்ட எம்.ரி.ஹசன் அலி தனது செயாளர் பதவிக்குரிய அதிகாரத்தை என்ன காரணத்திற்காக ரகசியமான முறையில் மாற்றினார் என்பதை அமைச்சர் ரவுப் ஹக்கீம் முதலில் எனக்குச் சொல்ல வேண்டும். அடுத்தது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நாங்கள் போராடவில்லை. என்னிடமிருந்து பறித்தெடுத்த அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதுதான் எமது போராட்டமாகும்.

நன்னடத்தைக் காலம் கணிக்கப்படுகின்ற அளவிற்கு ஹசன் அலியின் தராதரம் இருக்கின்றதா? என்பதை ஹக்கீம் கூறவேண்டும். அமைச்சர் ரவுப் ஹக்கீமின் இந்தக் கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயமாக எம்.ரி. ஹசன் அலியும், உயர்பீட செயலாளராக மன்சூர் ஏ.காதரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் மேற்படி இருவருக்கும் கூட்டங்களிற்கு அழைப்பு அனுப்பி வருகின்றார். தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் வேட்பாளர் நியமனப்பத்திரத்தில் கையொப்பமிடுகின்ற அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதை தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Tags :
comments