அறபா தினம்

  • September 11, 2016
  • 476
  • Aroos Samsudeen

(Image titleஅஷ்ஷெய்க் அல்ஹாபிழ் ஆரிப் (ஸஹ்ரி)

சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு அனுப்பப்பட்ட ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் முதல் முதலாக சந்தித்த இடம் அறபா. இதனால்தான் இந்த இடத்திற்கு அறபா என்று பெயர் சொல்லப்படுகின்றது. வேறு பல கருத்துக்கள் இருந்த போதும் இக்கருத்தே பிரபல்யமாக கூறப்படுகின்றது.

அறபா நாள் என்பது சங்கையான நான்கு மாதங்களில் உள்ள துல் ஹிஜ்ஜா மாதமாகிய ஒன்பதாம் நாளைக் குறிக்கும். இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த நாளாகிய இந்நாள்தான் அறபா தினமாகும். அன்றைய நாளில்தான் ஹாஜிகள் அறபா எனும் இடத்தில் ஒன்று கூடுகின்றார்கள். அறபா மைதானத்தைப் பொருத்தவரை எப்போதும் வெறுமனே வெட்ட வெளியாகக் காட்சி தரும். அதற்கு எந்த சிறப்பும் கிடையாது. ஆனால் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் ஹாஜிகள் ஒன்று கூடும் போது அந்த அறபா மைதானம் முக்கியத்துவம் பெறுகிறது.

அன்றைய நாளினது நோன்பின் சிறப்பு.

நபி (ஸல்) அவர்களிடத்தில் அறபா நாளில் பிடிக்கப்படும் நோன்பைப் பற்றி கேட்கப்பட்ட போது .. அது சென்ற ஒரு வருடத்தினதும் எதிர்வரும் ஒரு வருடத்தினுதும் செய்த பாவங்களுக்கு மண்ணிப்பைத் தரக்கூடியது எனச் சொன்னார்கள். (முஸ்லிம்)

ஹஜ் செய்து கொண்டிருப்போருக்கு இந்நாளில் நோன்பு பிடிப்பது சுன்னத் அல்ல.

இந்தளவுக்கு சிறப்பு வாய்ந்த இச்சந்தர்ப்பத்தை வீனடிக்காமல் எதிர்வரும் 11 -09-2016 அன்று நோன்பு பிடித்து கஷ்டங்களையும், துயரங்களையும் வாழ்வில் சுமந்து தங்களது இருப்புக்கும் உயிருக்கும் பேராபத்தை எதிர் நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் (குறிப்பாக பலஸ்தீன், சிரியா, எமன், பர்மா போன்ற) உலகலாவிய முஸ்லிம் உம்மத்திற்காக துஆ செய்வோம். எமது நாட்டு மக்களுக்காகவும் துஆ செய்வோம்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜதுல் வதாவில் கஸ்வா எனும் ஒட்டகத்தில் அமர்ந்து கொண்டு 124000 ஸஹாபாக்களுக்கு முன்னால் இஸ்லாமிய வரலாற்றில் அதி விஷேட சிறப்புமிக்க ஓர் உரை நிகழ்த்தினார்கள். அப்பேருரைதான் அறபாப் பேருரை என்று அழைக்கப்படுகிறது. இது அந்த நேரத்தில் அன்று இருந்த ஸஹாபாக்களுக்கு மட்டுமல்ல, முழு உலகலாவிய உம்மத்திற்கும் செய்த உபதேசங்களும், அமானிதமுமாகும். குறிப்பாக உலக முஸ்லிம்கள் அனைவரும் இப்பேருரையை படித்து தங்களது வாழ்வில் செயற்படுத்த கடமைப்பட்டவர்கள்.

அறிவியல் கருத்துக்கள், இஸ்லாத்தின் கோட்பாடுகள், ஜாஹிலிய்யாக்கால தன்மைகளின் பாரதூரம், உரிமைகள் போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளடங்கியதாக நபி (ஸல்) அவர்களின் இப்பேருரை அமைந்திருந்தது.

உயிர், சொத்து செல்வம், மானம் போன்ற மனித உரிமை, பெண்கள் உரிமை, எவர்களையும் அடிமைப்படுத்தாதீர்கள், இஸ்லாத்தை அடுத்தவர்களுக்கு எத்திவைத்தல் ஜாஹிலிய்யாக்கால பண்புகளை குழி தோன்டிப் புதைத்து விடுங்கள் போன்ற பல விடயங்களை ஒட்டுமொத்தமாக இவ்வுரையில் மிக வலியுறுத்திப் பேசினார்கள்.

இந்த அறபாவுடைய நாள், இடம், எப்படி சிறப்பானதோ அதைப் போன்றுதான் மனிதனின் மானம், சொத்து, உயிர் சிறப்பானதாக கன்னியமானதாக உள்ளது. ஆனால் இன்று இக் கோட்பாடு மிக மோசமான, பாரிய ஆபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. எத்தனை மனித உயிர்கள் துப்பாக்கிச் சூட்டுகளுக்கும், நெருப்புக் கிடங்குகளுக்கும், வால் மற்றும் கத்தி வெட்டுக்களுக்கும் அநியாயமாக இலக்காகிக் கொண்டிருக்கின்றது.

நாம் வல்லரசு, நாம் பெரும்பான்மை போன்ற மமதையால் மனிதர்களின் மானங்கள் கொடிகட்டிப் பறக்க விடப்படுகின்றது.. சொத்து, செல்வங்கள், சொந்த இடங்கள் சூரையாடப்படுகின்றது அபகரிக்கப்படுகின்றது. இதனால் மனித உலகம் நிம்மதியற்றுப் போயிருக்கின்றது.

இந்நிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் உலகம் இன்று இழந்திருக்கின்ற நிம்மதியை மீளப்பெறும். அதற்கு ஒரே வழி நபி வழியே ! இதனால்தான் மனித உரிமைகளைப்பற்றி பேசிய நபி (ஸல்) அவர்கள் என்னைப் பற்றி ஓர் சிறு விடயம் உங்களுக்கு தெரிந்தாலும் அதை தெரியாதவர்களுக்கு எத்தி வையுங்கள் என எமக்கு பாரிய பொறுப்பை தந்து விட்டுச் சென்றார்கள். அப்பாரிய பொறுப்புத்தான் இஸ்லாத்தை அடுத்தவர்களுக்கு எத்தி வைப்பது. தஃவா செய்வது. இதற்காக நாம் இஸ்லாம் கூறும் பண்பாடுகளையும் சகிப்புத் தன்மைகளையும் எம்மில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்

எனவே இவைகளை எமது வாழ்வில் செயற்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையும் தேசத்தின் கடமையுமாகும் எனக் கூறி மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றேன் எதிர்வரும் அறபா நோன்பை பிடியுங்கள் அடுத்தவர்களுக்கும் எத்திவையுங்கள். வசதி படைத்தவர்கள் உழ்ஹிய்யாவையும் கொடுத்துக் கொள்ளுங்கள்.

Tags :
comments