‘அச்சுறுத்தல் இருந்தால் பாதுகாப்பை அதிகரிப்போம்’

  • March 10, 2017
  • 500
  • Aroos Samsudeen

/images/ title

(ஜே.ஏ.ஜோர்ஜ்)

“ஐ.தே.க எம்.பியான எஸ்.எம். மரிக்காருக்கு, பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்குமாயின், அதனை ஆராய்ந்து பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், “அரசியல் கட்சிகளின் தொகுதி அமைப்பாளர்களுக்கு, பொலிஸ் அல்லது இராணுவத்தின் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா” என, மரிக்கார் எம்.பி கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பொலிஸ்மா அதிபரின் சுற்றறிக்கையின் பிரகாரம், மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் சிலருக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது” என அமைச்சர் பதிலளித்தார். “எனினும், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை அமைப்பாளருமான பிரசன்ன சோலங்க ஆராச்சிக்கு, 3 பொலிஸார் பாதுகாப்பு அளிக்கின்றனர். இது என்ன நியாயம், அப்படியாயின் என்னையும் சுடுவதற்கு முயன்றனர். எனக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையா?” என வினவினார்.

“அவ்வாறு ஏதும் பிரச்சினைகள் இருக்குமாயின் அதனை நாங்கள் தேடிப்பார்க்கிறோம். சாதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு பாதுகாப்பு ஊழியர்களே வழங்குகிறோம். ஆனால், இவருக்கு (மரிக்கார் எம்.பி) மூவர் வழங்கப்பட்டுள்ளனர். எனினும், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்குமாயின் பாதுகாப்பை அதிகரிப்போம்” என, அமைச்சர் மேலும் கூறினார்.

Tags :
comments