இறக்காமம் சிலை விவகாரம் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் பிரதியமைச்சர் ஹரீஸ்

  • April 27, 2017
  • 1814
  • Aroos Samsudeen

அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் பிரதியமைச்சர் ஹரீஸ்

இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் இனவாதிகளால் கட்டப்படவுள்ள கட்டிடத்தை தடுத்து நிறுத்துவதுடன் அங்கு வைக்கப்பட்டுள்ள சிலையை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம்  விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இல்லாத விடயம் ஒன்றை உருவாக்கி சிறுபான்மையின மக்களை இனவாதத் தீயில் சிக்க வைப்பதற்கான சூழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரலாகவே மாணிக்கமடு பிரச்சினையை நாம் பார்க்கின்றோம். இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக பல வழிகளிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வரும் பொதுபல சேனாவும் அதன் செயலாளர் ஞானசார தேரரும் நேற்று இறக்காமத்திற்கு விஜயம் செய்தது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது.

மாவட்ட செயலகத்தில்  மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி சில தீர்வுகளை எட்டுவதற்கும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டதாக அறிகின்றோம். இங்குள்ள முஸ்லிம்,தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான திட்டமாகவே இதனைப் பார்க்கின்றோம்.  இவர்களுக்கு  இதற்குரிய அதிகாரத்தை வழங்கியது யார் என்ற  கேள்வி எழுகின்றது.

 நாட்டில் இனவாத பிரச்சினைக்கு தூபமிட்டுள்ள ஞானசாரவுக்கு மாவட்ட அரசாங்க அதிபரை கட்டுப்படுத்தி உத்தரவிடும் பொறுப்புக்கள்  நல்லாட்சி அரசு வழங்கியுள்ளதா? என்ற நிலைப்பாட்டில் இளைஞர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இளைஞர்களின் நியாயத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு புறக்கணிப்புக்கள் ஆரம்பித்துள்ளது என்கின்ற விடயம் பேசப்பட்டு வருகின்ற நிலையில் இறக்காமம் மாணிக்கமடு சிலையும், புதிய கட்டிடம் கட்டப்படும் விவகாரமும் இதற்கு இன்னும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

நல்லாட்சி உருவாக்கத்தில் முஸ்லிம் சமூகம் குறிப்பாக அம்பாரை மாவட்ட மக்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தின் தோற்றத்திற்கு முழுமையான எதிர்ப்பை இனவாதத்தைக் கொண்டு வெளிக்காட்டிய பொதுபல சேனா இன்று முஸ்லிம்களை இனவாதத் தீக்குள் அகப்பட வைப்பதற்காக அம்பாரையில் களமிறங்கியிருப்பது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இறக்காமம் மாணிக்கமடு விடயத்தில் தலையிட்டு முஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெறாமல் தடுப்பதுடன் அங்கு வைக்கப்பட்டுள்ள சிலையை  உடனடியாக அகற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இதன் மூலம் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தையும், செயற்பாட்டையும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாகவும் அமையும்.

 கடந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருந்ததனாலேயே தோல்வியடைந்து வீட்டுக்குச் செல்ல நேரிட்டது என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காமல் நழுவல் போக்கில் செயற்படுமாக இருந்தால் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சியை மாற்றுவதற்கான ஆரம்பமாக இறக்காமம் மாணிக்கமடு பிரச்சினையை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்கொள்வார்கள்  என்ற நிலையையும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகங்களுக்கிடையில் இன உறவை கட்டியெழுப்பி சுபீட்சமான நாடாக இலங்கையை மாற்றுவதற்கு இவ்வாறான சம்பவங்களும், இனவாதத்தைக் கக்கும் இனவாதி ஞானசாரவும் பெரும் தடையாகவே இருக்கின்றனர்.

இனவாத ஞானசாரவும் அவரது குழுவினரும் முன்னடுக்கவுள்ள சூழ்ச்சிகரமான திட்டங்களுக்கு அம்பாரையில் உள்ள அரச அதிகாரிகள் துனைபோகக் கூடாது. இனவாதத்தைக் கக்குவதன் மூலம் முஸ்லிம்களை ஒருபோதும் அடக்கி ஒடுக்க முடியாது. தேசிய அரசியலின் மாற்றத்தில் முஸ்லிம்களின் வகிபாகம் முக்கியத்துவம் மிக்கது என்பதை உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

/images/ title

Tags :
comments