‘நான் தயார்’

  • April 27, 2017
  • 678
  • Aroos Samsudeen

/images/ title

(ஜே.ஏ.ஜோர்ஜ்)

சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டு வதற்காக, அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக, பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முப்படைகளில் அதியுட்ச பொறுப்பை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இரண்டு வருடங்களுக்கு மட்டுமே வழங்குவதற்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த பத்திரத்துக்கும் அனுமதி கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இந்த அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த விவகாரம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன பதிலளிக்கையில்,

முப்படைகளில் அதியுட்ச பொறுப்பை, பொன்​சேகாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்ட அவர், அதிகாரங்களுடன் உரிய பதவியை வழங்கினால், தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு தயார் என்றார்.

“நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடை உயர் பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

அதற்காக, இரண்டு வருடங்களுக்கு தனது அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். துன்பப்படும் மக்களுக்காகவே நாங்கள் நல்லாட்சியை கொண்டு வந்தோம். நாட்டை தின்ற திருடர்கள் மீண்டும் நாட்டை குழப்ப அனுமதிக்க முடியாது.

நாட்டில் இன்று தேவையற்ற விடயங்களுக்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வீதியில் இறங்குவதற்கு முன்னர் எம்முடன் கலந்துரையாடி தீர்வு காணலாம். தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திப்பதற்கு பிரதமர் மறுப்புத் தெரிவித்ததில்லை. எனினும், அதனை செய்யாது வீதியில் இறங்கி ​போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காராணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். கொழும்பில் அடிக்கடி இடம்பெறும் இவ்வாறான போராட்டங்களால், நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. அது அபிவிருத்தி பின்னடைவுக்கும் காரணமாக அமைகின்றது. இவ்வாறான நிலையை கட்டுப்படுத்தும் நோக்கிலும் சீரற்று காணப்படும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் சரத்பொன்சேகாவுக்கு இந்தப் புதிய பதவி வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இவ்வாறு நியமிக்கலாம். அவருக்கு அந்த அதிகாரம் உள்ளது என்றார். ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள, எதிர்ப்பு தெரிவிக்க நாங்கள் தடைவிதிக்கப்போவதில்லை. எனினும், நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பாதுகாப்பு துறையுடன் தொடர்புபட்ட உயர் பதவி அல்லது முப்படைகளின் கூட்டு உயரிய பதவி வழங்கப்படலாம். பொன்சேகா எதனை விரும்புகின்றாரோ அந்தப் பதவி வழங்கப்படும்” என்றார். “சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் உள்ளபோது இந்த புதிய பதவி தேவைதானா, பொலிஸாரின் நிலை என்னவாகும்” என, ஊடகவியலாளர்கள் கேட்டதுக்கு பதிலளித்த அமைச்சர்,

“இவ்வாறு இராணுவத்தை பயன்படுத்துவது இது முதன் முறை அல்ல, இன்று நாட்டில் இடம்பெறும் சம்பவங்களை கொண்டு நாட்டில் என்ன நடக்கிறது என இராணுவத்தினர் எம்மிடம் கேட்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க காலத்திலும் இராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று பதிலளித்த ராஜித்த, “இப்போது யுத்தம் இல்லையே. அவர்கள் ஏதாவது வேலை கேட்கின்றனர்” என்றார். இந்த புதிய பதவி குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ செயற்பட்டதை போன்று பொன்சேகா நடந்துகொள்ளமாட்டார். அதற்கு நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்” என்றார்.

“இலங்கை இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றங்கள் சுமத்தப்பட்ட காலக்கட்டத்தில் அதற்கு பொறுப்பாக இருந்த பொன்சேகாவை மீண்டும் அப்பதவியில் அமர்த்துவது எவ்வாறு?” என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

“முன்னைய ஆட்சியில் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து முதலில் வாய்திறந்தது அவர்தான், 5 மணிநேரத்துக்கும் அதிகமாக அவர் வாக்குமுலம் வழங்கியுள்ளார். அத்துடன் யுத்தக் குற்றத்தில் யாராவது ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

யுத்தம் இடம்பெற்ற போது, பொன்சேகா மாத்திரம் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரி இல்லை. அவருக்கும் மேலாக பல அதிகாரிகள் இருந்தனர். பொன்சேகாவுக்கும் தெரியாமல் அவருடன் பேசாமல் உயரதிகாரிகளுடன் பேசி பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன” என்றார்.

Tags :
comments