‘நீக்குவதற்கு தகுதி உள்ளதா?’

  • April 28, 2017
  • 583
  • Aroos Samsudeen

/images/ title

தற்போது இருக்கின்ற தகுதிவாய்ந்த தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை நீக்குவதற்கு யாருக்கும் தகுதியில்லை. அவ்வாறு தங்களை விடவும் தகுதியானவர்கள் இருப்பார்களாயின், அவர்களைப் புதிய அமைப்பாளர்களாக நியமிக்குமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களில் சிலரே, இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சியின், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் சிலர் நீக்கப்பட்டு, புதிய அமைப்பாளர்கள் சிலர் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் நியமிக்கப்பட்டனர்.

நீக்கப்பட்டவர்களில், தம்புள்ளை தொகுதி அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனும் அடங்குவார். அவர், நீக்கப்பட்டதையடுத்தே, அந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், சுதந்திரக் கட்சியின் மாத்தளை அமைப்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் ரோஹண குமார திஸாநாயக்க, அமைப்பாளர் பதவியிலிருந்து தன்னை நீக்குவதற்கு முன்னர், அப்பதவியை இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, தன்னைவிடவும் தகுதியானவர்கள் இருப்பார்களாயின், அவர்களை அமைப்பாளர்களாக நியமிக்குமாறு களுத்துறை மாவட்ட ஹொரணை தேர்தல் தொகுதியின் அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இம்முறை மேதினத்துக்கு, காலிமுகத்திடலுக்கே தான் செல்வேன் என்றும் அமைப்பாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கவேண்டுமாயின், நீக்கிவிடவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags :
comments