சாய்ந்தமருதுக் காரியாலயத்தை மூட இடமளிக்க முடியாது – பிரதியமைச்சர் ஹரீஸ் இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை

  • May 3, 2017
  • 1709
  • Aroos Samsudeen

 /images/ titleசாய்ந்தமருதில்  இயங்கி வந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண தலைமைக் காரியாலயம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டிருப்பது தொடர்பில்  பல அமைப்புக்கள் கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளன.

இக்காரியாலயத்தை பல தடவைகள் அம்பாறைக்கு இடமாற்றுவதற்கு திரைமறைவில்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தபோதிலும் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் இளைஞர் மற்றும் பொது அமைப்புகளினதும்  பலத்த எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டிருந்தது.

எனினும் கடந்த மார்ச் மாதம் 29 தொடக்கம் ஏப்ரல் 04 ஆம் திகதி வரை திருகோணமலையில் நடைபெற்ற "யொவுன் புர" எனும் இளைஞர் மாநாட்டுக்காக சாய்ந்தமருதில் இயங்கி வந்த இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண தலைமைக் காரியாலயத்திற்குரிய கணினிகள் மற்றும் கோவைகள் எடுத்துச் செல்லப்பட்டதுடன் இங்கு கடமையாற்றிய உத்தியோகத்தர்களும் அம்மாநாட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் மாநாடு முடிவுற்ற பின்னர் குறித்த கணனிகளும் கோவைகளும் அம்பாறை இளைஞர் வள நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாய்ந்தமருது காரியாலயத்தில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர்களை அம்பாறை இளைஞர் நிலையத்தில் வந்து கடமையாற்றுமாறு இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளரினால் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதனால் தற்போது சாய்ந்தமருத்திலுள்ள இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண காரியாலயம் செயலிழந்து மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இது இப்பிராந்திய தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பெரும் அநீதி என்பதுடன் தேசிய நல்லிணக்கத்திற்கும் இன ஐக்கியத்திற்கும் குந்தகம் ஏற்படுத்தும் செயற்பாடுமாகும்.

அம்பாரையில் இனவாதத்தை விதைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் தயாகமகேவின் ஏற்பாட்டிலேயே இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணக் காரியாலயம் அம்பாரைக்கு மாற்றப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பெரும் முயற்சியின் காணரமாக கிழக்கு மாகாணக் காரியாலயம் முன்னால் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அலகப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களின் இளைஞர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சிறந்த சேவையாற்றி வந்த நிலையில் இனவாதத்தை முன்னிறுத்தி தனது அரசியல் மற்றும் பண பலத்தைக் கொண்டு சிங்கள அதிகாரிகள் ஒரு சிலரின் ஒத்துழைப்புடன் அம்பாரைக்கு மாற்றியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.

மாகாணக் காரியாலயம் மீண்டும் சாய்ந்தமருதில் இயங்காத பட்சத்தில் முழு இளைஞர்களும் களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதுடன் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளருக்கும் தெரியப்படுத்தியதுடன் தனது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இன்று மாலை பாராளுமன்றத்தில் விசேட உரை  ஒன்றையும் நிகழ்த்துவதுடன் பிரதமரையும் சந்தித்து உடனடியாக சாய்ந்தமருதுக் காரியாலயம் செயற்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தவுள்ளார்.

Tags :
comments