இலங்கை மெய்வல்லுநர் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு

  • May 31, 2017
  • 654
  • Aroos Samsudeen

//images title

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் மூன்றாவது தடவையாக மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவராக செயற்படும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் புதிய அதிகாரிகள் குழுவிற்கான தேர்தல் கொழும்பு தேசிய நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

சுகத் திலகரத்ன, பாலித பெர்னாண்டோ மற்றும் ஜீ.எல்.எஸ். பெரேரா ஆகியோர் இம்முறை தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

எனினும், தேர்தல் ஆரம்பமாவதற்கு முன்னர் ஜீ.எல்.எஸ். பெரேரா போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.

25 மாவட்ட சங்கங்களும் 14 விளையாட்டுக் கழகங்களும் இன்றைய தேர்தலில் வாக்களித்தன.

பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்திற்கு தேர்தலில் வாக்களிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.

அதற்கமைய, பாலித பெர்னாண்டோவுக்கு ஆதரவாக 79 வாக்குகளும் சுகத் திலகரத்னவுக்கு 22 வாக்குகளும் கிடைத்தன.

பயிற்றுநர்களும், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களமும் விளையாட்டுத்துறை அமைச்சும் மெய்வல்லுநர் சங்கமும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே விளையாட்டுத்துறையை மேம்படுத்த முடியும் என தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் புதிய செயலாளராக பிரேமா பின்னவல போட்டியின்றித் தெரிவானார்.

புதிய அதிகாரிகள் குழுவில் 7 உபதலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Tags :
comments