முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்த அதாஉல்லா, ஹசன் அலி, பசீர் சேகுதாவுத் பேச்சு

  • July 2, 2017
  • 1382
  • Aroos Samsudeen

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பின் நகர்வுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும், பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் நம்பிக்கைக்குரியவருமான எம்.ரி.ஹசன் அலி மற்றும் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவுத் ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றதோ அவ்வாறு முஸ்லிம் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் முஸ்லிம் கூட்டமைப்பு தாக்கம் செலுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டேதான் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடனான பேச்சுவார்த்தைகள் கொழும்பிலும், கிழக்கிலும் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவை நேற்று முன்தினம் சனிக்கிழமை(01) எம்.ரி.ஹசன் அலி மற்றும் பசீர் சேகுதாவுத் இருவரும் அக்கரைப்பற்றில் வைத்து சந்தித்துள்ளனர். இச்சந்திப்பு சுமார் 4 மணித்தியாலயத்திற்கு மேல் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு விடயங்கள் இங்கு ஆராயப்பட்டுள்ளதுடன் தலைமைத்துவ சபையின் கீழ் முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முழுமையான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிர்காலத்தில் அரசியல் வீழ்ச்சியைத் தடுப்பதற்கு முஸ்லிம் கூட்டமைப்பே பலமான சக்தியாகத் திகழும் என்ற விடயம் இன்று அரசியல் ஆய்வாளர்களால் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதற்குரிய சமிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

அடுத்த சந்திப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் கிழக்கு மாகாண முஸ்லிம் புத்திஜீவிகள், சிவில் சமூக அமைப்புக்கள் முஸ்லிம் கூட்டமைப்பை ஆதரித்து களத்தில் இறங்கி செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் முக்கிய பதவியில் உள்ள ஒருவரும் தனது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முஸ்லிம் கூட்டமைப்புடன் இணைவதற்கு தயாராகி வருவதுடன் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் முக்கிய முஸ்லிம் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இணைவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் நம்பப்படுகின்றது.

/images/ title

Tags :
comments