ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் – எம்.எல்.கலீல்

  • September 18, 2017
  • 954
  • Aroos Samsudeen

Image title

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலமே முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என்பதால் அந்தக் கட்சியுடன் சேர்வதுதான் பொறுத்தமாகும் என்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.கலீல் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு எம்.எல்.கலீல் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடியாது. அதேபோன்று மஹிந்த அணி முற்றாக ஒதுக்கப்பட்ட நிலையில் நமக்கு இருக்கும் இலகுவானதும், பொறுத்தமானதுமான தெரிவு ஐக்கிய தேசியக் கட்சியாகும்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின் மூன்று மாவட்டங்களிலும் அந்தக் கட்சியுடன் இணைய வேண்டும். நமது எதிரிகள் முழுமையாக தோற்கின்ற நிலை இதன் மூலம் உருவாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்நாட்டு சிறுபான்மையின முஸ்லிம்களின் உரிமையை வென்றடுக்கும் இயக்கமாகும். இந்த இயக்கத்தை பதவி ஆசை பிடித்தவர்களால் ஒரு போதும் அழித்துவிட முடியாது.

மத்தியிலும்,மாகாணத்திலும் ஆட்சியில் இருக்கின்றோம். மக்களுக்காகன வேலைத்திட்டங்களை கட்சியில் பதவியில் உள்ள அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,தவிசாளர்கள் சிறந்த முறையில் முன்னடுத்துச் செல்ல வேண்டும். இன்று கட்சி ஆதரவாளர்கள் பலரும் விரக்தி நிலையில் உள்ளனர். தங்களுக்கு கிடைக்கின்ற வசதிகளையும்,வரப்பிரசாதங்களையும் கட்சிப் போராளிகளின் நலனில் பயன்படுத்தாது இருக்கின்றனர்.

குறிப்பிட்ட சிலர்தான் அதிகாரப் பதவியிலும், கட்சியின் அமைப்பாளர் பதவியிலும் இருப்பதால் கட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியாது. எல்லோருக்கும் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். எல்லாம் அவர்கள்தான் என்ற நிலையை மாற்றியமைக்கப்பட வேண்டும். நமது தலைவரின் கரங்களைப் பலப்படுத்தி கட்சியை அழிக்க நினைக்கும் சதிகாரர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட கட்சிப் போராளிகள் களத்தில் இறங்க வேண்டும் என்றார்.

Tags :
comments