மின்சார சபையின் நிதி பாரியளவில் சூறை: பின்புலத்தில் இருப்பது யார்?

  • September 19, 2017
  • 680
  • Aroos Samsudeen

Image title

ஒரு புறம் மின்சார சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் மின்சார சபையின் நிதி பாரியளவில் சூறையாடப்படுகிறது.

இந்த நிலையில், அதிகரித்துச் செல்லும் மின்சாரத்திற்கான கேள்வியை நிறைவேற்ற முடியாமற்போனால், 2020 ஆம் ஆண்டில் நாடு பாரிய மின்சாரத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கெரவலப்பிட்டியவில் 300 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான விலை மனு கோரல் செயற்பாட்டுச் சிக்கலும் நாளுக்கு நாள் வலுப்பெறுகின்றது.

300 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்திற்கு ஆரம்பத்தில் டீசல் பயன்படுத்தப்பட்டு, சில வருடங்களின் பின்னர் இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமாக அதனை மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சர்வதேச மட்டத்தில் விலை மனு கோரப்பட்டதுடன், 8 நிறுவனங்கள் விலை மனுக்களை சமர்ப்பித்தன.

இதில் இரண்டு நிறுவனங்கள் முதலில் தொழில்நுட்ப ஆய்வுக்குழுவின் பரிந்துரைக்கு அமைய நிராகரிக்கப்பட்டதுடன், 6 நிறுவனங்கள் இறுதித் தேர்வுக்கு தெரிவுசெய்யப்பட்டன.

எனினும், தொழில்நுட்ப ஆய்வுக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், ஐந்து நிறுவனங்கள் இயற்கைத் திரவ வாயுவால் இயங்கும் மின் உற்பத்தி நிலையமாக மாற்றத் தேவையான குறைந்தபட்ச வசதிகளை முன்னிலைப்படுத்தி இருக்கவில்லை.

கொரியாவின் செமிசுன் நிறுவனம் மாத்திரமே குறைந்தபட்ச வசதிகளை முன்வைத்திருந்தது.

எனினும், விலை மனு கோரலின்போது இறுவட்டு ஒன்றில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்து அவர்களது விலை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

எஞ்சிய ஐந்து நிறுவனங்களின் டென்டர்கள் திறக்கப்பட வேண்டும் என இறுதியில் பிரேரிக்கப்பட்டது.

எனினும், அமைச்சரவை நியமித்த கொள்முதல் குழு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இறுதியில் அதன் தலைவர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் இராஜினாமா செய்ய நேரிட்டது.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் தமது கையொப்பத்துடன் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்ததுடன், குறித்த ஐந்து நிறுவனங்களினதும் விலை மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள பொருளாதார முகாமைத்துவ குழு தீர்மானித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம், சொஜிட்ஸ் கார்ப்பரேஷன், சீ,ஜீ,என்.பீ.சீ. இன்டர்நெஷனல், வின்ட் ஃபோஸ், லக்தனவ் மற்றும் சமீட் பவர் ஆகிய ஐந்து நிறுவனங்களின் மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

எனினும், இந்த ஐந்து நிறுவனங்களும் தொழில்நுட்ப ஆய்வுக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் இயற்கை திரவ வாயு மின் உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்குத் தேவையான குறைந்தபட்ச வசதிகளை சமர்ப்பிக்கவில்லை என்பதுடன் டீசலைப் பயன்படுத்தி மின் உற்பத்தி நிலையத்தை இயக்குவதற்கான திட்டத்தை மாத்திரமே அவர்கள் முன்வைத்திருந்தனர்.

மூன்றாவது கட்ட தேர்வுக்காக இன்று இந்த நிறுவனங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், தொழில்நுட்ப ஆய்வுக்குழுவின் பிரேரணைக்கு அமைய மிகவும் இலாபகரமான திட்டத்தை லக் தனவ் நிறுவனம் சமர்ப்பித்திருந்ததாக தகவல் வௌியாகியுள்ளது.

லக்தனவ் நிறுவனத்தின் அதிகளவிலான பங்குகளின் உரிமம் லங்கா ட்ரான்ஸ்ஃபோமர் நிறுவனத்திடம் உள்ளதுடன் , அந்நிறுவனத்தின் 63 வீதமான பங்குகள் இலங்கை மின்சார சபையிடமே உள்ளன.

இதனடிப்படையில், லக் தனவ் நிறுவனம் என்பது இலங்கை மின்சார சபையின் கீழ் இயங்கும் உப நிறுவனம் அல்லவா?

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்திற்காக சர்வதேச மட்டத்தில் விலை மனு கோரப்பட்ட நிலையில், மின்சார சபையுடன் தொடர்புடைய உப நிறுவனமொன்று விலை மனு தாக்கல் செய்தமை சட்டத்திற்கு புறம்பானது என விலை மனு தாக்கல் செய்த ஏனைய தரப்பினர் கூறுகின்றனர்.

இதேவேளை, லங்கா ட்ரான்ஸ்ஃபோமர் மற்றும் லக் தனவ் நிறுவனங்களின் பணிப்பாளர் சபையில் உள்ள மூன்று முக்கிய நபர்கள் தொடர்பிலான தகவல்களும் வௌிவந்துள்ளன.

யூ.டி.ஜயவர்தன, எம்.ஜே.எம்.என். மரிக்கார் மற்றும் ரவீந்திர குமார் ஆகியோரே பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்கள் நிறுவனங்கள் ஊடாக என்ன செய்கின்றனர்?

நியாயமான விலைமனு செயற்பாடு ஊடாக நாட்டிற்கு இலாபகரமான நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்கு உள்ள சந்தர்ப்பத்தை இல்லாதொழித்து முன்னெடுக்கப்படுகின்ற இந்த நடவடிக்கைகளின் பின்புலத்தில் இருப்பது யார்?

Tags :
comments