அஹங்கமயில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது: 7 பேர் காயம்

  • September 19, 2017
  • 599
  • Aroos Samsudeen

Image title

காலி – அஹங்கம பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த ஐந்து மாடிக் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் காயமடைந்த ஐவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த மற்றுமொரு நபரை மீட்கும் முயற்சியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவம், தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேச மக்கள் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் அந்நபர் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கட்டடத்தின் ஒப்பந்தக்காரரும் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஹபராதுவ பிரதேச சபையின் தொழில்நுட்ப அதிகாரிகள் இன்று மதியம் அங்கு சென்றிருந்தனர்.

மூன்று மாடிகளுக்கு அனுமதி வழங்கியிருந்த போதும், அவர்கள் ஐந்து மாடிகளை நிர்மாணித்துள்ளதாக முதற்கட்ட ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கட்டடத்தின் ஐந்தாம் மாடி கடந்த வௌ்ளிக்கிழமை (15) நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதம் 17 ஆம் திகதி நீர்கொழும்பு – பெரியமுல்ல பாலத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் நால்வர் காயமடைந்தனர்.

கொழும்பு – வௌ்ளவத்தையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இடிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags :
comments