நியூயோர்க் நகரத்தை சென்றடைந்தார் ஜனாதிபதி

  • September 19, 2017
  • 859
  • Aroos Samsudeen

Image title

ஐக்கிய நாடுகளின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக, அமெரிக்காவுக்குப் பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க் ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை, ​நேற்று அதிகாலை (18) சென்றடைந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க் நகரில் தங்கும் ஹொட்டலில், அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராலய உத்தியோகத்தர்கள், ஜனாதிபதியையும் அவருடைய பாரியார் ஜயந்தி சிறிசேனவையும் வரவேற்றனர்.

ஜனாதிபதி தலைமையிலான குழு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:35க்கு புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில், இன்று (19) ஆரம்பமாகும், ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச் சபை அமர்வின் பிற்பகல் அமர்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது விசேட உரையை நிகழ்த்துவார்.

‘மக்களை கேந்திர படுத்தும் நிலையை உலகில், அனைவருக்கும் மதிப்பளிக்கக்கூடிய, வாழ்க்கை மற்றும் சமாதானத்துக்கான முயற்சி’ எனும் தொனிப்பொருளில் இம்முறை நடைபெறும் அந்த மாநாட்டில், இலங்கையில் அரசியல் சமரசம், நல்லிணக்கம் மற்றும் சமாதானம் தொடர்பிலும், 2017ஆம் ஆண்டை வறுமை ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தி, அதுதொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், பசுமை அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய உரையில் பிரஸ்தாபிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
comments