2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான நேரடி வாய்ப்பை இலங்கை அணி பெற்றது

  • September 20, 2017
  • 629
  • Aroos Samsudeen

Image title

2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு தகுதிப்பெறும் வாய்ப்பு இலங்கை அணிக்கு நேரடியாகவே கிட்டியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் தோல்வியடைந்தமையே அதற்கான காரணமாகும்.

மென்செஸ்ட்டரில் நடைபெற்ற இந்தப்போட்டி மழை காரணமாக 42 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியதீவுகள் 42 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்களை பெற்றது.

அணியின் முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 53 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதும் தனி ஒருவராக போராடிய அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களை பெற்றார்.

பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

205 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

என்றாலும் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த ஜொன்னி பெயார்ஸ்ரோவ் மற்றும் ஜோரூட் ஜோடி 125 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றிக்கான அடித்தளத்தை இட்டது.

ஜொன்னி பெயார்ஸ்ரோவ் ஒருநாள் அரங்கில் தன்னுடைய கன்னி சதத்தை பூர்த்தி செய்தார்.

ஜோரூட் அரைச்சதம் கடக்க இங்கிலாந்து 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதனால் இலங்கை அணி 2019 உலக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு நேரடியாக தகுதிப்பெறும் வாய்ப்பை நேரடியாக பெற்றது.

மேற்கிந்தியதீவுகள் தகுதிகாண் சுற்றுப்போட்டிகளில் விளையாடி உலக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு தகுதிப்பெறும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான நிரல்படுத்தலில் முதல் 08 இடங்களில் நீடிக்கின்ற அணிகள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு நேரடியாக தகுதிப்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
comments