நிந்தவுர் ஆஸீக் கிழக்கிற்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்

  • September 22, 2017
  • 879
  • Aroos Samsudeen

Image title

(எஸ்.எம்.அறூஸ்)

மாத்தறை கொடவில விளையாட்டரங்கில் இன்று ஆரம்பிக்கப்பட்ட 43வது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டம் நிந்தவுர் பிரதேசத்தைச் சேர்ந்த இஸட். ரீ.எம்.ஆஸீக் பரிதுவட்டம் நிகழ்ச்சியில் 42.97 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற பரிதுவட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுதான் இஸட். ரீ.எம்.ஆஸீக் தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளதுடன் கிழக்கு மாகாணத்திற்கு முதலாவது தங்கப்பதக்கத்தையும் வென்று கொடுத்துள்ளார்.

கடந்த வருடம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று முடிந்த 42வது தேசிய விளையாட்டு விழாவிலும் கிழக்கு மாகாணத்தின் சார்பில் இஸட். ரீ.எம்.ஆஸீக் பரிதுவட்டம் நிகழ்ச்சியில் 42.34 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பபதக்கத்தையும், குண்டு போடுதலில் 13.78 மீற்றர் பெறுதியில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வருடத்திற்கான தேசிய விளையாட்டு விழாவில் முதலாவது நாளில் இடம்பெற்ற பரிது வட்டம் நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பான முறையில் தனது ஆற்றலை வெளிப்படுத்திய இஸட்.ரீ.எம்.ஆஸீக் பல முன்னணி வீரா்களை பின்னுக்குத்தள்ளி 42.97 சிறந்த பெறுதியுடன் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்.

2015ம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பரிது வட்டம் நிகழ்ச்சியில் இஸட்.ரீ.எம். ஆஸீக் 40.53 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, கடந்த வருடம் 2016 இடம்பெற்ற 94 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை இராணுவத்தின் சார்பில் கலந்து கொண்ட இஸட். ரீ.எம். ஆஸீக் பரிதுவட்டம் நிகழ்ச்சியில் 43.77 மீற்றர் தூரம் எரிந்து தங்கப்பதக்கத்தினைப் பெற்றிருந்தார்.

அம்பாரை மாவட்டம் நிந்தவுரைப் பிறப்பிடமாகக் கொண்ட ரீ.எம்.ஆஸிக் பாடசாலை மட்டப் போட்டிகளில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று தனது பாடசாலைக்கும் அம்பாரை மாவட்டத்திற்கும் பெருமையை தேடிக்கொடுத்த வீரராவார்.

குறிப்பாக 2012ம் ஆண்டு இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் 21 வயதுக்குட்பட்ட பரிது வட்டம் நிகழ்ச்சியில் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றிருந்தார்.

நிந்தவுர் அல்-மதீனா மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான ரீ.எம்.ஆஸீக் நிந்தவுர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் வீரருமாவார். பெற்றி பெற்று தேசிய வீரராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரீ.எம்.ஆஸீக்கிற்கு ஆரம்பகால பயிற்றுவிப்பாளராக அம்பாரை மாவட்ட பயிற்றுவிப்பாளர் அனஸ் அஹமட் பயிற்சிகளை வழங்கியுள்ளார். தற்போது தில்றுக் அவர்கள் பயிற்சிகளை வழங்கி வருகின்றார்.

தேசிய விளையாட்டு விழாவில் தங்ப்பதக்கம் பெற்றுள்ள ஆஸீக் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய விளையாட்டு விழாவில் இரண்டாவது முறையாகவும் தங்கப்பதக்கம் பெற வெண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறியதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிந்தவுர் மதீனா விளையாட்டுக் கழகமும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது. இறைவனின் நாட்டம் எனக்கு வெற்றி கிடைத்தது.

இந்த வெற்றிக்காக முழுமையான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். அன்மைக் காலத்தில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று வந்ததால் தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் பெறலாம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. எதிர்காலத்தில் இலங்கை சார்பாக சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றேன். குறிப்பாக தெற்காசிய விளையாட்டுப் போட்டியைக் குறிப்பிடலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்ற தில்றுக் மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளராகவும், ஆரம்ப பயிற்றுவிப்பாளராகவும் உள்ள அனஸ் அஹமட் மற்றும் மதீனா விளையாட்டுக் கழக அங்கத்தவர்களுக்கும், எனது குடும்பத்திற்கும்,நண்பர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Image title

Tags :
comments