ஹக்கீமின் தனியலகு வட முஸ்லிம்களையும் உள்ளடக்கத்தக்கதாக விஸ்தரிக்கப்பட வேண்டும்! – எம்.எச். சேகு இஸ்ஸதீன்

  • October 11, 2017
  • 1010
  • Aroos Samsudeen

Image title

05.10.2017 வியாழன் தமிழ் தினசரியில் தலைப்புச் செய்தியாக தனி அலகு வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் வெளியிட்டுள்ள செய்தி கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையக்கூடிய தோற்றப்பாட்டையும் கொடுத்து, கிழக்கு பிரிவினைவாதிகளை கிலேசமடையவும் செய்துள்ளது.

கிழக்கு முஸ்லிம்களுக்கு கிழக்கில் ஒரு தனியான முஸ்லிம் அதிகார அலகை விட, முழுக்கிழக்கிற்குமான முஸ்லிம், தமிழ், சிங்கள கூட்டு அதிகார அலகு முஸ்லிம்களின் தனித்துவ அபிலாiஷகளைக் காப்பாற்ற சிறந்ததாகுமா? என்ற பிரசாரத்தில் கிழக்கு பிரிவினiவாதிகள் மழுங்கடிக்கப்பட்டுவிடுவார்கள் என்பது திண்ணம்.

தலைவர் ரஊப் ஹக்கீம், பிரதித்தலைவர் ஹரீஸின் கிழக்கைப் பிரிக்க வேண்டும் என்ற கெக்கரிப்புக்கு நன்றி சொல்ல வேண்டியுள்ளது. இல்லாவிட்டால், அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் வட-கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பான ஆலோசனை பற்றியும் கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக வாயைத்திறந்திராத ரஊப் ஹக்கீம் கேட்கப் பார்க்க ஆளில்லை என்ற தெம்பில் ஊமையாகவே இருந்து ஊரைக் கெடுத்திருக்க முடியும்.

கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி அலகைப் பெறமுடியுமானால், அம்பாரை மாவட்டத்தை அப்புறப்படுத்தி ஒரு தமிழ்மொழிக் கரையோர மாவட்டத்தை மருதமுனைக்கும் பொத்துவிலுக்கும் இடைப்பட்ட ஒரு பொருத்தமான இடத்தில் அமைப்பது சிரமசாத்தியமான ஒரு விடயமாகவே இராது. தனி அலகுக்குப் போராடி அதனை வென்றெடுக்க முடிந்தால் கரையோர மாவட்டம் ஒரு சில்லறைப் பிரச்சினையாகவே இருக்கும். கரையோர மாவட்டமும் தேவையில்லை, முஸ்லிம்களுக்கான தனியலகும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இனியும் ஹரீஸ் இருப்பாரானால், கிழக்கில், குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகப் போவதாகக் கலங்கி கட்சி மாறும் சைக்கினையாக கிழக்குப் பிரிவுக் கீதத்தை ஹரீஸ் பாடுகிறாரோ தெரியாது. எதற்கும் அவர் குளிக்கப்போய் சேற்றைப் பூசி விடாமல் இருந்தால் போதும்.

ஹக்கீம் தனது பத்திரிகைச் செய்தியில் சில உண்மைகளை ஒத்துக் கொண்டிருந்தாலும் சில எதிர்பார்ப்புகளுக்கு இடம் வைக்கவும் தவறவில்லை.

உதாரணத்துக்கு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கென தனியானதொரு அலகு அமைய வேண்டும் என மறைந்த தலைவர் அஷ;ரப் நீண்ட காலத்திலிருந்து கொள்கை அளவிலான முடிவை எடுத்திருந்ததாக ஹக்கீம் கூறியுள்ளார். இதன் மூலம் இந்தக் கொள்கை முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால, ஆதிக்கொள்கை இல்லை என்பதை ஹக்கீம் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தேவை ஏற்படும் போது புதிய அரசியல் சூழ்நிலைகளில் முஸ்லிம்களின் தீர்வு தேடலில் இந்த நீண்ட காலக்கொள்கை மாற்றப்பட முடியாததல்ல என்ற அம்சத்தையும் சேர்த்துக் கொண்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 1986 நொவெம்பர் மாநாட்டில், மறைந்த தலைவர் அஷ;ரப் இணைக்கப்பட்ட வடகிழக்கு முற்றாகவுள்ள தமிழர் பெரும்பான்மைப் பிரதேசங்களில் வடக்கு கிழக்கு மாகாண தமிழருக்கான மாகாண சபையும், அதேபோல, வடக்கு கிழக்கு முற்றாக உள்ள முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களில் வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு அதேவாறான முஸ்லிம் மாகாண சபையும் உருவாக்கப்பட வேண்டுமென்று தமது பிரதம உரையில் 30 வருடங்களுக்கு முன்னர் வீரியமாகப் பேசினார்.

தொடர்ச்சியாக 1986 நொவெம்பர் இறுதியிலிருந்து 1992 நொவெம்பர் இறுதி வரையுள்ள ஆறு வருடங்களாக இதே நிலைப்பாட்டில்தான் அஷ;ரப் இருந்தார். ஷமுஸ்லிம்களுக்கான தனி அலகு, வடக்கு கிழக்கு முஸ்லிம்களை உள்ளடக்கிய ஒரு முஸ்லிம்களுக்கான மாகாண சபையை உருவாக்குவதிலேயே உறுதிப்படுத்தப்படும்| என்று 19.07.1992இல் சண்டேரைம்ஸில் தெரிவித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் உருவாக்க விரும்பிய முஸ்லிம் மாகாண சபை வடக்கு கிழக்கு முஸ்லிம்களை உள்ளடக்கியதாகவே இருந்தது.

ஆனால், இப்போது ஹக்கீம் கூறும் முஸ்லிம் தனி அலகில் வடமாகாணத்தில் தற்போது வாழும் சுமார் 35,000 முஸ்லிம்களும், வடமாகாணத்தில் தமது பாரம்பரியக் காணிகளில் குடியேற பல்வேறு காரணங்களால் நாதியற்று, சக்தியற்று சிங்கள மாகாணங்களில் கடந்த 27 வருடங்களாக காலங்கழிக்கும் வடமாகாண முஸ்லிம் அகதிகளுமாக சுமார் 1½ லட்சம் முஸ்லிம்கள் றஊப் ஹக்கீமின் கிழக்கு முஸ்லிம்களுக்கான தனி அலகினால் நடுத்தெரிவில் அந்தரிக்கப்படவுள்ளனர்.

13.04.2002ல் – ஹக்கீமின் பிறந்த தினம் ஒன்றில், வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக நோர்வேயின் அனுசரணையுடன் விடுதலைப் புலிப் பிரபாகரனோடு பேசி, மீள்குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்த ஹக்கீமின் முழு வடகிழக்கிலும் நாட்டிலும் பரந்திருந்த அறிவும் ஆளுமையும், துணிகரமும் இன்று கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களுள் முடக்கப்பட்டு விட்டதா?

ஷவடகிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு முஸ்லிம்களுக்கான மாகாண சபை| (எம்.எச்.எம். அஷ;ரப் 19.07.1992 சண்டேரைம்ஸ்) என்பதனை ஷமனித நீதி நியாயங்களின் அடிப்படையில் முன்வைத்துள்ளதாகவும், ஜனநாயக ரீதியிலான அப்போராட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் கைவிடமாட்டாது| (எம்.எச்.எம். அஷ;ரப் 06.08.1992 வீரகேசரி) என்பதாகவும் கூறிய போது முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக இருந்தது றஊப் ஹக்கீம் தானே. இன்று உயிரோடு தலைவராய் பதவி உயர்ந்திருக்கும் ஹக்கீம், அஷ;ரபின் அந்த வாய்ச்சவடால்களுக்கு வெறும் தலையாட்டி பொம்மையாக மட்டும்தான் இருந்திருக்கிறாரா?

அஷ;ரபே தனது ஆதிக் கொள்கையில் இருந்து தடம் புரண்டிருந்தாலும் அவரை விட ஆழமாக யோசித்து வடமாகாண முஸ்லிம் அகதிளுக்கு வாழ்வளிக்க ஹக்கீமைத் தடுப்பது என்ன? அதைச் சொல்லுவதற்கோ, செய்ய பிரயத்தனிப்பதற்கோ தற்போது அவரோடு முஸ்லிம் அஹிம்சைப் போராளிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா?

இணைக்கப்படும் வடக்கு கிழக்கிலும், இன்னும் வெளியில் சிங்கள மாகாணங்களில் அகதிகளாகவும் வாழும் வடகிழக்கு முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்து உள்ளடக்கியதானதும், தமிழருக்கு வழங்கச் சாத்தியமான அதிகார அலகுக்கு சமமானதும் சரியொத்ததுமான முஸ்லிம் அதிகார அலகு முழு வடக்கு கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்த வகையில் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கொள்கை கோட்பாட்டினை முன்வைத்து போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இன்று ரஊப் ஹக்கீமின் தலையிலேயே சாட்டப்பட்டுள்ளது. அதனால், அவர் செய்யவிருப்பதெல்லாம் இவ்வாறான நிலைப்பாட்டினை உறுதியாக எடுத்து இறுதியானதாக வெளிப்படுத்தி வடக்கு கிழக்கின் அனைத்து முஸ்லிம்களின் மனங்களையும் வென்றெடுப்பது ஹக்கீமுக்கு முடியாத காரியமல்ல.

முழு வடக்கு கிழக்கிலும் தமிழர் பிரதேசங்களில் தமிழருக்கான அதிகார சபையும், முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கான அந்நியர் தலையீடற்ற அதிகார சபையும் என்பதை தமிழர் தரப்பு இதய சுத்தியாய் ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸும் தமிழர் கூட்டமைப்பும் இணைந்தும் தனித்தும் இரண்டு சமூகங்களுக்குமான இறுதி ஆலோசனைகளை வழிகாட்டல் குழுவுக்கும் சேர்த்து அனுப்பி வைக்க முடியும்.

வடகிழக்கு முழு முஸ்லிம்களுக்குமான அதிகார அலகுதான் உருவாகப் போகிறதென்றால் அதற்கு மக்கள் காங்கிரஸ் நிச்சயம் ஆதரவளிக்குமென்று நம்பலாம். மகிந்தவின் கிழக்குப் பிரிவினைவாதத்தில் துடைப்பதற்கும் துப்பட்டா இல்லாமல் தோய்ந்திருக்கும் தேசிய காங்கிரஸுக்கு அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி என்று அனுதாபப்படலாம்.

வடகிழக்கு முஸ்லிம்கள் இன்னும் தம்மை சிறு சிறு குழுக்களாக பிரித்துக்கொண்டு அரசியல் செய்ய முற்படாமல், அனைவரும் ஒன்றிணைந்து தம்மை ஒரு தனியான, பிரத்தியேகமான மக்கள் கூட்டமாய் உருபெருக்கிக் கொண்டு முஸ்லிம் தேசியமாக அடையாளம் கண்டு ஏற்றுக் கொண்டு செயற்பட்டால் தமது சகோதர இனங்களால் வேறாக நோக்கப்பட்டும், கையாளப்பட்டும் வரும் வேதனைகளுக்கு விடிவுகாண முடியும்.

ஒரு தேசியத்துக்குத்தான் தனது மக்கள் கூட்டத்திற்கான உரிமைகளைப் பெற்று சிந்திப்பதற்கும் போராடுவதற்கும் தகுதியும் உரித்தும் உண்டு. சிறு சிறு குழுக்களாய் தமது பட்டம் பதவிகளைப் பற்றிய அரட்டுணர்வுக்கு சமூகத்தை பலிக்கடாவாக்காமல் பதில் சொல்ல வேண்டிய இடத்தையும் காலத்தையும் முற்றும் மறந்துவிடாமல் இந்த அரசியல் பயணங்களை யாத்திரைகளாகச் செய்ய முன்வரும்போது கட்சிகளுக்கிடையே புரிந்துணர்வையும் பரஸ்பர பங்கீட்டையும் வளர்க்க முடியும்.

வடக்கு கிழக்கு இணையுமா? இணையாதா? என்று ஆருடம் பார்த்து அவஸ்தைப்பட வேண்டிய அவசியம் ஹக்கீமுக்கு இல்லை. ஷஉம்மத்தே ஸததன்| என்பது வார்த்தையில் மட்டுமல்ல வாழ்க்கைப் பூராவும் நினைவில் நிறுத்த வேண்டியதொன்றாகும். இந்த நிகழ்ச்சி நிரல்களுக்கு எல்லா முஸ்லிம்களையும் ஈர்த்துக்கொள்ளும் சக்தி உண்டாகும்.

இறுதியாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கில் முஸ்லிம் தனி அலகுக்கு ஒரு முஸ்லிம் முதலமைச்சர் உருவாகுவார். ஆனால், சம்மந்தன் ஐயா தமிழர் அலகுக்கும் ஒரு படித்த பக்குவமான முஸ்லிமை முதலமைச்சராக்குவதென்ற பாமரத்தனத்தை தொடர்ந்து பரப்பி வருகிறார். அவரைப் பற்றிய தமிழ் மக்கள் பேரவையின் கண்டனங்களும் விமர்சனங்களும் கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது போல தெரிகிறது.

இந்த தமிழர் அலகுக்கு முஸ்லிம் முதலமைச்சர் விவகாரம் முஸ்லிம் தனி அலகு கிடைக்கப் பெறாது என்றே பயமுறுத்துகிறது. ஹக்கீம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், கர்ணம் தப்பினால் மரணம்தான் என்பதை ஹக்கீம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும்.

– எம்.எச். சேகு இஸ்ஸதீன்

முன்னாள் அமைச்சர்

Tags :
comments