திவுலப்பிடிய துப்பாக்கிச் சூடு: மேல் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட 8 பேர் நீதிமன்றில் ஆஜர்

  • October 24, 2017
  • 453
  • Aroos Samsudeen

Image title

திவுலப்பிடிய – ஹென்பிடகெதர பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் கொள்ளைக்கும்பல் ஒன்றுக்குமிடையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட சந்தேகநபர்கள் 08 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து கைது செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினரின் வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு விசேட அதிரடிப்படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

பல்வேறு வகையான 115 துப்பாக்கி ரவைகள் மற்றும் குண்டு துளைக்காத மேலங்கியொன்று மற்றும் கைத்துப்பாக்கி தாங்கியொன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதனடிப்படையில் மாகாண சபை உறுப்பினரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் இதுவரை 08 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சந்தேகநபர் 35 வயதுடைய மினுவங்கொடை நில்பானாகொட பகுதியில் வசித்து வந்த ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் குறித்த நபர்களைக் கைது செய்யும் போது அவர்களிடமிருந்து கைக்குண்டொன்றும் மூன்று துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Tags :
comments