பொத்துவில் தொகுதியின் சேவைச் செம்மல் மர்ஹூம் டாக்டர் எம்.ஏ.எம் ஜலால்தீன்.

  • December 27, 2017
  • 810
  • Aroos Samsudeen

Image title

(பொத்துவில் தொகுதியின் முதல்வராக இருந்து சேவையே தன்பணியென்று வாழ்ந்து காட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்டாளைச்சேனையின் மைந்தன் அக்கிராசர் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வர், மர்ஹூம் டாக்டர் எம்.ஏ.எம் ஜலால்தீன் அவர்கள் இம்மண்ணை விட்டுப்பிரிந்து இன்றுடன்(27.12.2017) பதினைந்து வருடங்கள் பூர்த்தியாகின்றமை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்படுகின்றது)

(அட்டாளைச்சேனை மன்சூர்)

பொத்துவில் தொகுதியில் மறக்க முடியாத முதல்வர் மர்ஹூம் டாக்டர் எம்.ஏ.எம் ஜலால்தீன். அன்னாரது 15வது நினைவேந்தல் இன்றாகும்.

பொத்துவில் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஏ.எம். ஜலால்தீன் பொத்துவில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அன்றைய ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சியில் அளப்பறிய சேவைகளை ஆற்றியவர். அவர் மறைந்து பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இருந்தாலும் அவர் நினைவுகள் எம்மண்ணை விட்டு இன்னும் அகலவில்லை. இரண்டரக்கலந்து மக்களோடு மக்களாகப் பழகியவர்.

பல்வேறு முன்னோடித் திட்டங்களையும், அரசியலில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தவர். அரசியலை மக்கள் மயப்படுத்தியவர். அதனால் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருந்தார். இன்றைய நாளில் அன்னாரை நினைவுகூர்வதிலும் அன்னாருக்காகப் பிரார்த்திப்பதிலும் பொத்துவில் தொகுதி மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

மர்ஹூம் டாக்டர் எம்.ஏ.எம் ஜலால்தீன் அவர்கள் பொத்துவில் முதல்வராக பதவியேற்றதிலிருந்து இம்மண்ணை நேசித்தார். அளப்பறிய சேவைகள் செய்தார். பலரின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கு உதவினார். சேவையின் செம்மல் என அனைவராலும் போற்றப்பட்டார். இன்றுகூட அவரால் உருவாக்கப்பட்ட பல சேவைகள் எம்கண்முன்னே சான்றாய் அமைந்திருக்கின்றமை யாராலும் மறக்கவும், மறைக்கவும் முடியாத உண்மையாகும்.

1977ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரும்பாண்மையுடன் ஆட்சிபீடமேறியபோது பொத்துவில் தொகுதியின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். அன்றைய நிந்தவூர் தொகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பல்வேறு அமைச்சுப்பொறுப்புக்களைப் பெற்றிருந்த நாடாளுமன்ற பிரதிநிதியான எம்.எம். முஸ்தபாவைத் தோற்கடித்து ஆட்சிபீடம் ஏறியவர் டாக்டர் ஜலால்தீனாவார்.

அக்கரைப்பற்றினை இரண்டாகப் பிரித்து ஒருபகுதியை சம்மாந்துறை தொகுதிக்கும், ஒருபகுதியை பொத்துவிலுக்கும் வழங்கியமையினால் அக்கரைப்பற்று மக்கள் இன்றுகூட முன்னாள் பிரதியமைச்சரான முஸ்தபா அவர்களுடன் முரண்பாடாகவே இருக்கின்றனர். அன்றைய நிலையில் இந்த முரண்பாடுகள், பிரிவினைகளுக்கு முடிவுகட்ட அட்டாளைச்சேனை ஈண்றெடுத்த மர்ஹூம் எம்.ஏ.எம். ஜலால்தீனை முழுப் பிரதேசமும் முழுமையான ஆதரவுடன் வெற்றிபெறச் செய்திருந்தனர்.

அன்னாரின்குடும்பப் பின்னணி:

அட்டாளைச்சேனைமண்ணில்ஒருசெல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் 09.04.1934 ம் ஆண்டு ஜலால்தீன் அவர்கள் பிறந்தார்கள். அட்டாளைச்சேனை பிரதேசத்தின்முதல்தவிசாளரும் அதன் காரணத்தால் மக்களால் ’அக்கிராசர்’ என செல்லமாகஅழைக்கப் பட்டவருமான மர்கூம் முகம்மது அலியார் அவர்களுக்கும் மர்கூம் மர்யம் நாச்சிக்கும் பிறந்த ஜலால்தீன் அக்குடும்பத்தின் இரண்டாவது புதல்வராவார்.

அன்னாரின் பாட்டனார் மர்கூம் அகமது லெப்பை போடி ஹாஜியார் (கத்திக் காரன் போடியார் ) அவர்கள் நிலச்சுதாந்தர் ஆகவும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முதல் பிரதம நம்பிக்கையாளராகவும்(Chief trustee ) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவருடன் கூடப்பிறந்தவர்கள் நான்கு சகோதரர்களும் இரு சகோதரிகளும் ஆவர். மர்கூம் சம்சுதீன்BSc க்குஇளையவரான அன்னார், சாபிடீன்டீயு, மர்கூம்களான ஹாஜரா உம்மா, சுபைதா உம்மா, சுபைதீன் (லங்கா மெடிகல்), லத்தீப் ஆகியோருக்கும் மூத்தவராவார். சம்மாந்துறை மர்கூம் காலிசாவை கரம்பிடித்த அன்னாருக்கு ரோஷினி, ரொஷிக்கா (சிட்னி), ஷாமிலா(சிட்னி) ஆகிய புதல்விகளும் ஒரே ஒரு புதல்வன் ரபா ஜலால்தீனும் உள்ளனர் .

ஆரம்பக் கல்வி:

அன்னார் தனது ஆரம்பக்கல்வியை தனது சொந்தஊரான சாதனா பாடசாலையில் (இன்றைய தேசியகல்லூரியில்) கல்விகற்றார். அன்றிருந்த Denham Scholarship என்கின்ற புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த ஜலால்தீன் அன்று கிழக்கிலங்கையில் புகழ்பெற்று விளங்கிய காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்டு தனது கல்வியை ஆங்கில மொழிமூலம் அங்கு தொடர்ந்தார். ஜலால்தீன் அவர்கள் அன்றைய கல்விப்பொதுத் தராதர பரீட்சையான SSC (Senior School Certificate ) பரீட்சையில் திறம்படச் சித்தியடைந்து பின்னர்அதேகல்லூரியில் தனது உயர்தரக் கல்வியை ர்ளுஊ ( HSC (Higher School Certificate ) கற்று சித்தியடைந்தார்.

ஆனால் அன்றைய காலகட்டத்தில் நாட்டில் ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவியபடியால் ஆங்கில மொழிமூலம் கல்விகற்றவர்கள் எல்லாம் ஆங்கில ஆசிரியராக கட்டாயம் கடமையாற்ற வேண்டும் என்ற அரசின் ஆணைக்கு கட்டுண்டு சிலகாலம் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றினார்.

ஆனால் தனது மகனுக்கு வைத்தியத்துறையில் விருப்பம் இருப்பதை அறிந்த அவரது தந்தை அக்கிராசர் தனது மகனை அதற்கான முயற்சிகளுக்கு ஊக்கமளித்ததால் சுதேச வைத்தியக் கல்வியை தேர்ந்தெடுத்த ஜலால்தீன் யூனானி போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு வைத்தியக் கல்லூரியில் அனுமதியையும் பெற்றார்.

தொடர்ந்து ஐந்துவருடம்கள் வைத்தியக் கல்வியை மேற்கொண்ட ஜலால்தீன் அவர்கள் இறுதிப் பரீட்சையில் அதிவிசேடதேர்ச்சியும் பெற்று முதல்தர வகுப்பில்(First Class honours ) சித்தியடைந்தார். அன்று அச்சித்தியானது யூனானி வைத்திய பீடத்தின் முப்பது வருடவரலாற்றில் அகில இலங்கை ரீதியில் இரண்டாவது இடமாகவும்இ கிழக்கிலங்கையின் முதலாமவதாகவும் இருந்தது என்பது இங்கு குறிப்பிடப் படவேண்டிய விடயமாகும் .

தான் கல்விகற்ற அதே வைத்தியக்கல்லூரியில் விரிவுரையாளராக தனது வைத்திய சேவையை தொடங்கிய டாக்டர் ஜலால்தீன் அவர்கள் அங்குபதேனேழு வருடம்கள் தொடர்ந்து சேவையாற்றினார். இந்த வேளையில் 1973 ம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழகத்தில் தான் சார்ந்த வைத்தியத் துறையில் ஆராய்ச்சி செய்து வைத்திய முதுமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார் .

தனது சேவைக்காலத்தில் விரிவுரையாளராகவும்இ சிரேஸ்ட விரவுரையாளராகவும் பின்னர் அவர்சார்ந்த துறைக்கு பீடாதிபதியாகவும் கடமையாற்றினார். முஸ்லிம்களின் பாரம்பரிய மருத்துவமான யூனானி மருத்துவத்துறை இலங்கையில் வளர்ச்சியடைவதற்கு பாடுபட்ட மர்கூம் டாக்டர் ஜலால்தீன் அவர்கள்இ மறைந்த அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் மூலம் சுதேச மருத்துவத்துறைக்கு பல்கலைக்கழக அந்தஸ்தையும் பெற்றுக்கொடுதார்.

அரசியலில் பிரவேசம்:

டாக்டர் ஜலால்தீன் அவர்கள்அவரது மருத்துவக் கல்வியை நிறைவு செய்த அதேவருடம் தனது இருபத்தைந்தாவது வயதில் (1960 ல்) அரசியலிலும் காலடி எடுத்துவைத்தார். அட்டாளைச்சேனை மண்ணின் முதல் டாக்டரான ஜலால்தீன் அவர்களை ஊர்மக்கள் அரசியலுக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதற்கமைய 20.07.1960 ல் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அன்னார் அக்கரைப்பற்று அப்துல் மஜீத் அவர்களிடம் ( நௌஷாத்–முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தந்தை) தோல்வியுற்றார். அரசியலில் இருந்து தற்காலிகமாக விடைபெற்ற அன்னார் அதன் பின்னர் வைத்தியசேவையிலும்இ வைத்தியக் கல்விச்சேவையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

காலம் உருண்டோடியது. இவ்வேளையில் அட்டாளைச்சேனைக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லையே என்பதை உணர்ந்த ஊர்மக்கள் ஜலால்தீனின் கொஸ்வத்தை, நாவலை வீட்டுக்குச்சென்று அவருக்கு மீண்டும் அழைப்பு விடுத்தனர். ஊர்மக்களின் வேண்டுகோளை தட்டமுடியாத ஜலால்தீன் அவர்கள் மீண்டும் பதேனேழு வருடம்களின் பின்பு 1977 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.

அன்று இரட்டை அங்கத்தவர்களைக் கொண்ட பொத்துவில் தொகுதி 25 கிராமங்களை உள்ளடக்கிஇ வடக்கே மாளிகைக் காட்டில் தொடங்கி தெற்கே கூமனை வரை வியாபித்துக் காணப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் அம்பாறை மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவின் 1/3 பகுதியைக் கொண்டதாகக் காணப்பட்டது. 1977 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல்இலங்கை வரலாற்றின் என்றுமில்லாத ஒரு புரட்சித்தேர்தலாக இருந்தமை மறக்க முடியாத ஒன்றாகும். 1970 ல் ஆட்சி அமைத்த சிறிமா அம்மையாரின் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக் கூட்டரசாங்கம் தொடர்ந்து ஏழு வருடம்கள் ஆட்சி செய்து மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது. வறுமை தலைவிரித்தாடியது

நாட்டு மக்கள் ஒருங்கிணைந்து 1977 ம் ஆண்டின் தேர்தலை புரட்சிகர தேர்தலாக மாற்ற ஆர்வத்தோடு செயல்பட்டனர். எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி JR ஜெயவர்த்தனா தலைமையில் களத்தில் இறங்கியது. பொத்துவில் தொகுதியில் 20 புத்துஜீவிகள் நேர்முகப்பரீட்சைக்கு விண்ணப்பித்தபோதும் கட்சியின் தலைமைப் பீடம் இளம் சிங்கம் டாக்டர் டாக்டர் ஜலால்தீனை, எதிர்கட்சி வேட்பாளரான, அமைச்சராக இருந்தவரும் , அன்றைய அரசியல் வானில் சிறகடித்துப் பறந்தவரும், MS.காரியப்பரின் மருமகனுமான சிரேஸ்ட அரசியல்வாதி சட்டத்தரணி MM. முஸ்தபா அவர்களுடன் போட்டியிட களத்தில் இறக்கியது.

அத்தேர்தலை சவாலாக ஏற்ற ஜலால்தீன் அவர்கள் தனக்கு எதிராகப் போட்டியிட்ட முடிசூடா மன்னன் MM. முஸ்தபாவைவிட 8000 வாக்குகளை அதிகமாகப்பெற்று வெற்றிவாகை சூடினார். இத்தேர்தலில் அட்டாளைச்சேனை மக்கள் தனது மண்ணின் மைந்தனை பாராளுமன்ற உறுப்பினராக்க 99 விகிதமான வாக்குகளை வழங்கியிருந்தனர் என்பது குறுப்பிடத்தக்க விடயமாகும்.

அவ்வாறு வெற்றிவாகை சூடி பொத்துவில் தொகுதியின் முதல்வரான டாக்டர்ஜலால்தீன் அவர்கள்பிரதேசவாதமின்றி தன் தொகுதி மக்கள் அனைவருக்கும்இ அனைத்து ஊர்களுக்கும் சமனான சேவைகளைச் செய்து அனைத்து மக்களினதும் அபிமானத்தைப் பெற்றுக் கொண்டதனால்சேவையின் செம்மல் என போற்றப்பட்டார்.

தான் பிறந்த ஊரான அட்டாளைச்சேனையில் செய்த இரு பாரிய வேலைத்திட்டத்தினை பல தலைமுறைகள் சென்றாலும் அம்மக்களால் என்றும் மறக்க முடியாது. அதில் ஒன்று பாவங்காய் வீதி (அவ்வீதி தற்போது முதல்வர் டாக்டர் ஜலால்தீன்வீதி என பெயரிடப்பட்டுள்ளது), மற்றையது கோணாவத்தைப் பாலம். பல்லாண்டு காலங்கள் அப்பகுதி பிரதிநிதிகளால் கைவிடப்பட்டு அநாதரவாகக் கிடந்த இவ்விரு வேலைத்திட்டம்களை தன்னால் முடியும் என்று செய்துகாட்டினார் டாக்டர் ஜலால்தீன் அவர்கள்.

அன்றுபாவங்காய் வீதியும் பெருமளவிலான நெற்காணிகளும் களப்பினுள் மூழ்கிக்கிடந்தது. பெண்களும்இ ஆண்களும் தமது சிறுபிள்ளைகளை தோள்மேல் சுமந்த வண்ணம் நெஞ்சளவு பரவிய தண்ணீரை பொருட்படுத்தாது, அட்டைகள், சுங்கான்இ கெழுத்தி மீன்கள் மற்றும் நீர்ப் பாம்புகளின் மத்தியில் உடுத்த உடைநனைய நடந்தே அக்கரைக்கு (முல்லைத்தீவு) கஷ்டப்பட்டு சென்று வந்தனர். வசதி படைத்தவர்கள் மாட்டு வண்டிகளில் சென்றனர். இடுப்பளவு நீர் நிறைந்த களப்பை மண்கொண்டு நிரப்பி அதில் போக்குவரத்து வீதியை உருவாக்குவது அன்று ஒரு சவாலாகப் பார்க்கப்பட்ட வேலைத்திட்டமாக இருந்தது.

ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராலோ அல்லது அதையும்விட பதவியில் உயர்ந்தவராலோ செய்யமுடியாத அப்பாரிய வேலைத்திட்டத்தினை செய்துகாட்டினார் சேவையின் செம்மல் முதல்வர் டாக்டர் ஜலால்தீன் அவர்கள். அட்டாளைச்சேனையின் முதுகெலும்பாக இருந்த இவ்விவசாயப்பாதையை உருவாக்கியதன் காரணத்தால் மக்களின் வாழ்வாதாரம் பெருகியது.

நெற்காணிகள் எல்லாம் பெருமதியடைந்தன. போக்குவரத்து இலகுவாக்கப் பட்டதால் விவசாயத்தில் எல்லோரும் ஈடுபட்டனர். நீரில் மூழ்கிய ஆயிரக்கணக்கான நெற்காணிகள் விவசாயக் காணிகளாக உருவாகின. மீலாத் நகர் கிராமம் உருவாகியதால் முல்லைத்தீவில் மக்கள் குடியேறினர். பின்னர் இவ்வீதியைவீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பெடுத்து அம்பாறை நகர்வரை அவ்வீதியைக் கொண்டுசெல்ல ஏதுவாகியது. இதன் சரித்திரம் தற்கால இளைஞர்களுக்கு தெரியாத ஒன்றாகும்.

இன்றுபாவங்காய் வீதிக்கு ’முதல்வர் டாக்டர் ஜலால்தீன்வீதி’ என அவரின் நாமம் சூட்டப்பட்டுள்ளது சாலப் பொருத்தமானது மட்டுமன்றி நாம் அன்னாருக்கு பட்ட நன்றிக்கடனாகும் என்றால் அதுமிகையாகாது.

அதேபோன்று பல்லாண்டுகாலம் கைவிடப்பட்ட நிலையில் அனாதரவாகக் கிடந்த கோணாவத்தைப் பாலத்தை அன்றையபல லட்ச ரூபாய்கள் செலவில் துரித கதியில் முடித்துக் காட்டினார் பொத்துவில் முதல்வர் டாக்டர் ஜலால்தீன்.

இடிந்து விழுந்துவிடும் நிலையில் காணப்பட்ட நூற்றாண்டு பழமைவாய்ந்த அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் இன்றுள்ள அழகான பள்ளிவாசலாக உருவாக காரணகர்த்தாவாக இருந்தார் மர்கூம் டாக்டர் ஜலால்தீன். அதுமட்டுமன்றி தொகுதி முழுக்க உள்ள பாடசாலைகளில் புதிதாக கட்டிடம்கள், விஞ்சான கூடங்கள், வைத்தியசாலைகள், பிரசவ விடுதிகள், கமநல சேவை நிலையம்கள், நெல் கொள்வனவுக் குதம்கள் , அரசவங்கிகள், போன்றவற்றை தொகுதி முழுக்க அமைத்தார். ஜலால்புரம் எனும் வீட்டுத்திட்டம் கொண்ட கிராமங்களை எல்லா ஊர்களுக்கும் அமைத்துக் கொடுத்தார். மண்ஒழுங்கைகளை கிரவல் வீதிகளாக மாற்றிக் கொடுத்தார்.

அட்டாளைச்சேனையில் கரடிக்குள புனர்நிர்மாணம், பொதுமையவாடி, சாதனாபாடசாலை மகாவித்தியாலயமாக தரமுயர்த்தியமை, கோணாவத்தைப்பாலம், பள்ளிவாசல், பாவங்காய் வீதி, தபாலகம், கமநல சேவை நிலையம், நெல் கொள்வனவுக் குதம், வாசிகசாலை, மக்கள்வங்கி, அரசடிவீதி இவ்வாறு தனது சேவைகளை தனது ஊரிலும்இ அதேபோன்று தனது தொகுதிமுழுக்க தன் சேவையினால் தடம் பதித்தார்.

அன்று தபாலகங்கள் அனைத்தும் தனியார் கட்டிடம்களில் வாடகைக்கே இயங்கிவந்தன. ஜலால்தீன் அவர்கள் அரச காணிகளில் தபாலகங்களை நிறுவினார். ஆனால் தனதுசொந்த ஊரான அட்டாளைச்சேனையில் மட்டும் தனது சொந்தக் காணியில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கி அதில் தபாலகத்தை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகவலை தற்போதுள்ள இளம்தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒலுவிலில் அமையப்பெற்றமைக்கு முக்கிய காரணம் மர்கூம் ஜலால்தீன் அவர்களே. மறந்த தலைவர் மர்கூம் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்கு என ஒரு பல்கலைக்கழகம் அமைக்க நினைத்தபோது அதற்குப் பொருத்தமான இடமாக அன்று ஜலால்தீன் அவர்களால் ஒலுவிலில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரிசி ஆலையை பொருத்தமான இடமாகத் தெரிவுசெய்தார். அந்த அரிசிஆலை இல்லாவிடின் தென்கிழக்கு பல்கலைக்கழகம் தோன்ற வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.

அக்கரைப்பற்றில் புகையிலைக் கூட்டுத்தாபனம், இ.போ.ச பஸ் டிப்போ, தபாலகம் ஆகிவற்றை உருவாக்கி தொகுதிமக்களுக்கு பெருமளவில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். அதுமட்டுமின்றி உபஅரசஅதிபர் காரியாலயம் , வீட்டுத்திட்டம்கள், குளங்கள் ஆகியவை புனரமைக்கப் பட்டன. புட்டம்பை எனும் இடத்தில் 150 ஏழைக் குடும்பங்களுக்காக மாதிரிக் கிராமம் ஒன்றையும் செய்து கொடுத்தார்.

முதல்வர் ஜலால்தீன் அவர்கள் துணிந்து எக்காரியத்தையும் செயல்படுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தார். அன்று 1978 ல் எமது பகுதியைச்சேர்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் பலர் யாழ் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்ஆசிரிய மாணவர்களாக இருந்தபோது கா.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு வெளிவாரியாகத்தோன்றி அதில் சித்தியெய்தி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினர்.

ஆனால் பல்கலைக்கழகம் செல்வதாயின் ஆசிரியத்தொழிலை விட்டே ஆகவேண்டிய நிலை இருந்தது. ஆனால்டாக்டர் ஜலால்தீன் அவர்கள் அவ் ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய கல்விக்கான விடுமுறையை (Study leave with pay ) பெற்றுக்கொடுத்தார். அன்று அது ஒரு சாதனையாகப் பார்க்கப்பட்டது. அன்று அவ்வாறு படித்துப் பட்டம்பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் பிற்காலத்தில் பெரிய அரச பதவிகளில் இருந்து அண்மையில்தான் ஒய்வும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

டாக்டர் ஜலால்தீன் அவர்கள் எப்போதும் எல்லாச்சமூகங்களுடனும் மிகவும் அன்னியோன்யமாகப் பழகியதுடன் மிகவும் மனிதநேயத்துடனும் விளங்கினார். பொத்துவில் தொகுதியின் சிங்கள கிராமங்களான தொட்டம், மாந்தோட்டம் எக்கல்லார், லஹூகல, பாணம, ஹுலனுகே ஆகிய இடங்களுக்கும் அன்னாரின் சேவை வியாபித்துக் காணப்பட்டது.

அதற்குச்சான்றாக பலவிடயம்களை கொள்ளலாம். அதில் ஒன்றுதான் அன்று மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த மாந்தொட்டம்இ தொட்டம் என்ற மிகவும் பழமைவாய்ந்த இரு சிங்களக் கிராமங்களில் வீடமைப்புத்திட்டத்தை உருவாக்கியமை ஆகும். அதற்கு நன்றிக்கடனாக அவ்வூர் மக்களில் சிலர் அன்னார் காலமானபோது (27.12.2002)அன்னாரின் கொழும்பு இல்லத்தில் காலை முதல்தரிசனம் தொட்டு இறுதிவரை கவலைதோய்ந்த முகத்துடன் நின்றமை அனைவரினதும் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருந்தது.

பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பா.ம உறுப்பினராக இருந்த காலஞ்சென்ற எம். கனகரத்தினமும் மர்கூம் ஜலால்தீன் அவர்களும் தங்களது குறுகியகால பதவிக்காலத்தில் அண்ணன் தம்பிபோல் ஒற்றுமையாகவும் இருந்தனர்.

கனகரத்தினம் அவர்கள் ஜலால்தீனின் உதவியைக் கொண்டு திருக்கோயில் பகுதிக்கான உதவி அரசாங்க அதிபர் காரியாலத்தையும் கண்ணகி புரத்தில் 150 குடும்பங்களுக்கான மாதிரிக்கிராமத்தையும் உருவாக்கினார். இனப்பாகுபாடற்ற அன்னாரின் சேவையின் பிரதிபலிப்பை அன்னாரின் இறுதிகிரிகையில் பங்குகொண்ட மக்களைக்கொண்டு ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

அன்னார் அவர்கள் தொகுதிக்கப்பாலும் அவரது பார்வையைஇ சிந்தனையைச் செலுத்தினார். புரையோடிப்போன வடக்கு கிழக்கு யுத்தம் முழுநாட்டையும் சீரழித்துவிட்டதே என்று கலங்கினார். இதற்கு என்னதான் தீர்வு என்பதை சிந்தித்தார். வடக்கு கிழக்கில் சமாதானம் நிலவ மாற்று வழியை முன்மொழிந்தார்.

வடக்கு கிழக்கிற்கு முதலமைச்சர்கள் இருவரை அதாவது இணைந்த முதலமைச்சர்களை (Co-Chief Ministers ) ஏன் நியமிக்க முடியாது என்ற கேள்வியை மன்றில் எழுப்பினார். அன்னாரின் சிந்தனையில் உதித்த கருத்துக்கள், தீர்வுகள் பாராளுமன்றத்தில் ஓர் ஆவணமாக சமர்க்கிப் பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அவ் ஆவணம் தொடர்பில் பாராளுமன்ற விவகார அமைச்சராக இருந்த மர்கூம் அஸ்வர் ஹாஜியார் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையொன்றை நிகழ்த்தினார் (Hansard- Vol-143 No: 16 of 11.09.2002) அதில் ஜலால்தீனின் சிந்தனையில் உதித்த தீர்வையும் வலியுறுத்தினார்.

இவ்வாறுதான் நமது பகுதிகளில் அன்று இருந்த அரசியல்வாதிகள் சமூக சிந்தனையுடனும் சேவை மனப்பான்மையுடனும் செயல்பட்டனர். மர்கூம்களான எம்.எஸ். காரியப்பர், வன்னியனார் சின்னலெப்பைஇ டீயு அப்துல் மஜீது, ஏ.ஆர்.எம் மன்சூர், எம்.எம்.முஸ்தபா, சி.ஐ. மஜீத், எம்.சி. அகமது, தலைவர் அஸ்ரப், டாக்டர் ஜலால்தீன், ஆகியோர் ஆளுமையுடனும், சமூக சிந்தனையுடனும் பாராளுமன்றத்தில்MP பதவியை அலங்கரித்த வண்ணம் காணப்பட்டனர். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தடியெடுத்தவர்கள்எல்லாம் வேட்டைக்காரர்களாக மாறிவிட்டனர் .

பொத்துவில் முதல்வர் மர்கூம் டாக்டர் ஜலால்தீன் அவர்களின் அரசியல் சேவைக்காலம் விதி செய்த சதியினால் பூரணமடையாமல் குறுகிய காலத்தினுள் முடிவுற்றது. ஆனால் அக்குறுகிய காலத்தினுள் மூன்று MP க்கள் செய்யக்கூடிய சேவையினை தனித்தே செய்து சாதித்துக் காட்டியதன்மூலம் அப்பகுதி மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

இப்பிரதேசம்கள் உள்ளவரை அவரது நாமமும் நிலைத்திருக்கும். அன்னார் தனது 68 வது வயதில் சிறிதுகாலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் கொழும்பில் 27.12.2002 அன்று காலமானார். அன்னாரது இழப்பு எம்மால் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் தனது மக்களுக்காக செய்த சேவைகளையும், நல்ல அமல்களையும் பொருந்திக் கொண்டு அன்னாருக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திப்போம் . ஆமீன்.. ஆமீன்.!

(தகவல் : எஸ் நியாஸ் – சுங்கத்திணைக்களம்)

தொகுப்பு : அட்டாளைச்சேனை மன்சூர்

Tags :
comments