போர் கால வன்செயல்களில் பாதிக்கப்பட்ட மக்களை முகம் நிமிர்த்தி வாழ செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • May 2, 2018
  • 218
  • Aroos Samsudeen
போர் கால வன்செயல்களில் பாதிக்கப்பட்ட மக்களை முகம் நிமிர்த்தி வாழ செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
போர் கால வன்செயல்களில் பாதிக்கப்பட்டு முக பொலிவை இழந்த மக்களுக்கு இலவசமாக முக சீரமைப்பு சிகிச்சைகளை மேற்கொண்டு அவர்களையும் சமுதாயத்தில் முகம் நிமிர்த்தி வாழ செய்கின்றார் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முக சீரமைப்பு சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் அனுசன் மதுசங்க தெரிவித்தார்.
இவர் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
முக பொலிவில் குறைபாடு உடைய ஏராளமான மக்கள் அதனால் மனம் உடைந்தவர்களாக அவர்களை சமுதாயத்துக்குள் மறைத்து கொண்டு வாழ்கின்றனர். அவர்களை சமூகமும் அருவருப்புடனேயே நடத்தவும் செய்கின்றது. இந்நிலையில் அவர்களையும் பூரண மனிதர்களாக மாற்றி அமைக்கின்ற மகத்தான பணியையே நான் இலவசமாக மேற்கொண்டு வருகின்றேன். எனது இலவச சேவையை மக்களின் காலடிகளுக்கு கொண்டு செல்கின்றேன்.
யுத்த வன்செயல்களால் முக பொலிவை இழந்த மக்கள் இருக்கின்றனர். வாகன விபத்துகளில் சிக்கி முக பொலிவை இழந்தவர்களும் உள்ளனர். பிறப்பிலேயே முக குறைபாடு உள்ளவர்களும் உள்ளனர். புற்று நோயின் தாக்கத்துக்கு உள்ளாகி முக பொலிவை இழந்தவர்களும் உள்ளனர். இவர்களில் கணிசமான தொகையினர் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றனர். முன்பெல்லாம் இச்சிகிச்சையை மேற்கொள்வதற்கு தூரங்களில் உள்ள வெளிமாவட்டங்களுக்குத்தான் நோயாளர்கள் செல்ல வேண்டி இருந்தது. அத்துடன் இச்சிகிச்சையை மேற்கொள்வதற்கு இம்மக்களுக்கு போதிய பொருளாதார வசதிகளும் கிடையாது. இந்நிலையில் தற்போது இச்சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான மேம்பட்ட வசதிகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் முக பாதிப்பு உடைய மக்களை சரியான வகையில் அடையாளம் கண்டு உரிய சிகிச்சைகளை வழங்குகின்ற முன்னெடுப்புகளை நான் மேற்கொண்டு வருகின்றேன். கிராம மட்டத்தில் இருந்து எனது இவ்வேலை திட்டத்தை ஆரம்பித்து உள்ளேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று ஒரு பழமொழி உள்ளது. பெண்களுக்கு மாத்திரம் அன்றி ஆண்களுக்கும் முக அழகு முக்கியமானது. எனவே முக அழகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதை மீட்டு கொடுக்கின்ற சகிச்சையை எமது வைத்திய குழுவினர் நவீன முறையில் வழங்குகின்றனர். நான் கற்ற கல்வி மூலமாக மக்களின் முக அழகை மீட்டு கொடுப்பதை எனது உயர் தொழில் தர்மமாகவும், இலட்சியமாகவும் கொண்டிருக்கின்றேன்.
Tags :
comments