பந்துவீச்சு, துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் அசத்திய இலங்கை

  • July 21, 2018
  • 280
  • Aroos Samsudeen
பந்துவீச்சு, துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் அசத்திய இலங்கை

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு SSC சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கின்றது.

இன்றைய நாளுக்கான போட்டியில் அதிசிறப்பான முறையில் சுழல் பந்துவீச்சை வெளிக்காட்டி வந்த இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை அவர்களது முதல் இன்னிங்ஸில் 124 ஓட்டங்களோடு கட்டுப்படுத்தியிருந்ததோடு, துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்டு தென்னாபிரிக்க அணியைவிட 365 ஓட்டங்களால் முன்னிலையுடன் இப்போட்டியில் மிகவும் வலுவான நிலையில் காணப்படுகின்றது.

நேற்று (20) ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடியிருந்த இலங்கை அணி தமது முதல் இன்னிங்சுக்காக தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணத்திலக்க மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரின் அரைச்சத உதவியுடன் 277 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்திருந்தது.

களத்தில் அகில தனஞ்சய (14*), ரங்கன ஹேரத் (5*) ஆகியோர் ஆட்டமிழக்காது நிற்க தென்னாபிரிக்க அணியின் சுழல் பந்துவீச்சாளரான கேசவ் மஹராஜ் இலங்கை அணியில் நேற்று பறிபோன ஒன்பது விக்கெட்டுக்களில் 8 விக்கெட்டை தனக்கு சொந்தமாக்கி டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார்.

இன்று போட்டியின் இரண்டாம் நாளில் ஒரு விக்கெட் மீதமாக இருந்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணிக்கு அகில தனஞ்சய மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தாக்குதல் முறையில் (Aggressive) முறையில் துடுப்பாடி பெறுமதியான இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளம் போட்டிருந்தனர்.

இந்த பின்வரிசை வீரர்களினால் போடப்பட்ட அடித்தளம் வெற்றியளிக்க இலங்கை அணியின் இறுதி விக்கெட்டுக்காக 74 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்ட நிலையில், ரங்கன ஹேரத்தின் விக்கெட்டோடு இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.

இதன்படி, இலங்கை அணி தமது முதல் இன்னிங்சுக்காக 104.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களினை குவித்திருந்தது. இலங்கை அணிக்காக இறுதிவரையில் ஆட்டமிழக்காது நின்ற அகில தனஞ்சய 7 பெளண்டரிகள் அடங்கலாக 91 பந்துகளுக்கு 43 ஓட்டங்களையும், ரங்கன ஹேரத் 35 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இன்றைய நாளில் பறிபோன இலங்கை அணியின் இறுதி விக்கெட்டையும் கைப்பற்றிய கேசவ் மஹராஜ், இந்த இன்னிங்ஸில் 129 ஓட்டங்களுக்கு மொத்தமாக 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து, எய்டன் மார்க்ரம் மற்றும் டீன் எல்கார் ஆகியோருடன் தென்னாபிரிக்க அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.

தென்னாபிரிக்க அணிக்கு அவர்களது துடுப்பாட்ட இன்னிங்ஸில் இரண்டாவது ஓவரை வீசிய அகில தனஞ்சய டீன் எல்காரின் விக்கெட்டினை கைப்பற்றி அதிர்ச்சி ஆரம்பத்தை வழங்கினார். தனஞ்சயவின் சுழலில் வீழ்ந்த எல்கார் இரண்டாவது ஸ்லிப் களத்தடுப்பாளரான தனஞ்சய டி சில்வாவிடம் பிடிகொடுத்து ஓட்டங்கள் எதுவுமின்றி மைதானத்தை விட்டு நடந்தார்.

இதன்பின்னர், புதிய வீரராக வந்த தியோனிஸ் டி ப்ரெய்னும், ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான எய்டன் மார்க்ரமும் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட அகில தனஞ்சய, ரங்கன ஹேரத் ஆகியோரின் சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் மிகவும் சொற்பமான ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தனர்.

இதனால், முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மூவரை இழந்த நிலையில் இரண்டாம் நாளின் மதிய போசணத்தை தென்னாபிரிக்க அணியினர் அடைந்தனர். மதிய போசணத்திற்கு பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் புதிய துடுப்பாட்ட வீரர்களாக இருந்த தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு ப்ளேசிஸ், ஹஷிம் அம்லா ஆகியோர் வேகமான முறையில் துடுப்பாடி தமது தரப்பின் ஓட்டங்களை அதிகரிக்க முனைந்திருந்தனர்.

இவர்களது வேகமான துடுப்பாட்டத்தின் காரணமாக தென்னாபிரிக்க அணியின் நான்காம் விக்கெட்டுக்காக 55 ஓட்டங்கள் பகிரப்பட்டது. இலங்கை அணிக்கு சற்று நெருக்கடியாக இருந்த இந்த இணைப்பாட்டத்தை தில்ருவான் பெரேரா அம்லாவின் விக்கெட்டோடு முடிவுக்கு கொண்டு வந்தார். ஹஷிம் அம்லா 19 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பிய போதிலும், இந்த 19 ஓட்டங்களின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 9,000 ஓட்டங்களை கடந்த மூன்றாவது தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருந்தார்.

அம்லாவின் விக்கெட்டை அடுத்து சிறிது நேரத்தில் அணித்தலைவர் பாப் டு ப்ளேசிஸ் விக்கெட்டும் பறிபோனது. போராட்டமான துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஒன்றை வெளிப்படுத்திய டு ப்ளேசிஸ் 51 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 8 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 48 ஓட்டங்களைக் குவித்து அரைச்சதம் ஒன்றைப் பெற தவறியிருந்தார்.

பின்னர், தென்னாபிரிக்காவின் மத்திய வரிசை வீரர்கள் அகில தனஞ்சய, தில்ருவான் பெரேரா ஆகியோரின் சுழலை முகம்கொடுப்பதில் மீண்டும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதனால், தென்னாபிரிக்க அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே தமது முதல் இன்னிங்சுக்காக பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்க அணியின் மத்திய வரிசையில் குயின்டன் டி கொக் மாத்திரம் குறிப்பிடும் படியாக 32 ஓட்டங்களை குவிக்க ஏனையோர் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியிருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக அகில தனஞ்சய 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி திறமையை வெளிக்காட்டியிருந்ததோடு, தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தார்.

இதனையடுத்து, 214 ஓட்டங்கள் என்ற ஆரோக்கியமான முன்னிலையோடு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணத்திலக்க ஆகியோரின் அரைச்சத உதவியுடன் இரண்டாம் நாள் நிறைவில் 34 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில், இப்போட்டியில் இரண்டாவது தடவையாக அரைச்சதம் கடந்த தனுஷ்க குணத்திலக்க 68 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் 6 பெளண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களைப் பெற்றிருக்க, இத்தொடரில் நான்காவது தடவையாக அரைச்சதத்தை பதிவு செய்திருக்கும் திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது காணப்படுகின்றார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில், ஏற்கனவே சுழலில் அசத்திய கேசவ் மஹராஜ் இம்முறையும் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமது இரண்டாம் இன்னிங்ஸின் மூலம் தற்போது 365 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை அணி போட்டியின் நாளைய மூன்றாம் நாளில் இந்த முன்னிலையை இன்னும் அதிகரித்து தென்னாபிரிக்காவுக்கு கடும் சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

comments