கரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம்

  • September 10, 2018
  • 1204
  • Aroos Samsudeen
கரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம்

கரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம்

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலைப்பு)

அம்பாரை கரையோர மாவட்டத்தை வென்றடுப்பதற்கும் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று ஊடக அமைப்புக்கள் கொள்கையளவில் இணக்கம் தெரிவத்துள்ளனர்.

அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூன்று ஊடக அமைப்புக்களும் கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கு கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இதன்படி அம்பாரை மாவட்த்தில் உள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முன்னடுப்புக்களையும் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சி அரசியலை ஒரு பக்கம் வைத்துவிட்டு சமூகத்தின் இருப்பிற்கான ஒரு போராட்டத்தின் முன்னடுப்பிற்கு சகல கட்சிகளின் அரசியல் பிரமுகர்களும் ஆதரவளிக்க வேண்டியது அவர்களது தலையாய கடமையாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களினால் முன்னடுக்கப்பட்ட அம்பாரை கரையோர மாவட்ட விடயம் அவரது மறைவிற்குப் பின்னர் காத்திரமான முறையில் ஒழுங்குபடுத்தி முன்னடுக்கப்படவில்லை.

தேர்தல் காலங்களில் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக காலத்திற்குக் காலம் பேசப்படும் அம்பாரை கரையோர மாவட்டக் கோரிக்கை உண்மைக்கு உண்மையாக அரசியல் தலைவர்களால் வலியுறுத்தப்படவில்லை. நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தி தாங்கள்தான் என்று கூறும் நமது அரசியல் தலைவர்கள் கரையோர மாவட்டக் கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்காததன் மர்மம்தான் என்ன?

தமிழர் தரப்பினர் தமது கோரிக்கைகளை ஒன்றுபட்டு அழுத்தமாக முன்வைப்பதன் ஊடாக வென்றுகாட்டுகின்ற இன்றைய நிலையில் முஸ்லிம்கள் பிரிந்து நின்று செயற்படுவதன் ஊடாக தமது கோரிக்கைகளை வெல்ல முடியாமல் போவதுடன் இருக்கின்ற உரிமைகளைக்கூட இழக்கின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இன்று அம்பாரை மாவட்ட கச்சேரியின் நிலையை உணர்ந்து பாருங்கள். அங்கு முஸ்லிம்கள் மூன்றாந்தரமாக மாற்றப்பட்டுள்ளனர். எதிர்காலங்களில் பாரிய அநீதி இழப்பிற்கு முஸ்லிம்கள் ஆளாக்கப்பட வாய்ப்புள்ளது.

அம்பாரை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் இருப்பிற்கு கரையோர மாவட்டத்தின் உருவாக்கம் மிக மிக அவசியமாகும். சிங்கள, தமிழ் இனவாதிகளின் கோரப்பிடியிலிருந்து முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்கான நிலையான ஏற்பாடுதான் கரையோர மாவட்டமாகும்.

எனவே, அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், அதற்கான முன்னடுப்புக்களையும் செய்வதற்கு முன்வந்துள்ள மூன்று ஊடக அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு சகல தரப்பினரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

 

comments