அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்ற கௌதம் கம்பீர்

  • December 5, 2018
  • 143
  • Aroos Samsudeen
அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்ற கௌதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணி 2007 ஆம் ஆண்டு T20 உலகக்கிண்ணம், 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ணம் என்பவற்றை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்த நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

கௌதம் கம்பீர் இறுதியாக 2016 ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். இந்நிலையில், உள்ளூர் தொடரான ரஞ்சி கிண்ணத்தில் டெல்லி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வரும் கம்பீர், நாளை (06) ஆரம்பமாகவுள்ள ஆந்திர மாநில அணிக்கு எதிரான போட்டியுடன் அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.

ஓய்வு குறித்து சமூகவலைத்தளமான பேஸ்புக் பக்கத்தில் காணொளியொன்றை பதிவுசெய்துள்ள கம்பீர், “15 வருடங்களுக்கும் அதிகமாக இந்திய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதை அடுத்து, இந்த அழகான விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

கம்பீர், 2003 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியதில் இருந்து இதுவரை, 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 T20 போட்டிகளில் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் 20 சதங்களை கடந்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளங்கிய இவர், 2009 ஆம் ஆண்டு ஐசி.சி இன் (ICC) சிறந்த டெஸ்ட் வீரராக தெரிவுசெய்யப்பட்டார்.

அதேநேரம், இந்திய அணிக்கு மிக முக்கிய வெற்றிகளை பெற்றுத் தந்ததில் அதிக பங்கினை கௌதம் கம்பீர் கொண்டுள்ளார். குறிப்பாக, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் 75 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதுடன், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான உலகக்கிண்ண (50 ஓவர்) இறுதிப்போட்டியில் 97 ஓட்டங்களை குவித்து அணிக்கு கிண்ணத்தை பெற்றுக்கொடுத்திருந்தார்.

குறித்த இரண்டு வெற்றிகள் தொடர்பில் கம்பீர், “இரண்டு உலகக்கிண்ண இறுதிப்போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றமையானது, எனது கிரிக்கெட் கனவுகளை நனவாக்கிய தருணங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கம்பீர் மற்றும் வீரேந்திர செவாக் ஆகியோர் களமிறங்கிய காலம், இந்திய ரசிகர்களுக்கு அதிக சுவாரஷ்யங்களை கொடுத்த பொற்காலம் என கருதப்படுகிறது. சுவாரஷ்யத்தையும் தாண்டி, இருவரும் 87 இன்னிங்சுகளில் மொத்தமாக 4412 ஓட்டங்களை சர்வதேச கிரிக்கெட்டில் இணைப்பாட்டமாக பெற்றுள்ளனர். இந்த இணைப்பாட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் பெறப்பட்ட 8 ஆவது அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியுள்ளது.

இறுதியாக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித் கம்பீர், “நான் இந்த பயணத்தில் வீரர்களுடன் மட்டுமன்றி இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் அர்த்தமுள்ள இணைப்புகளை உருவாக்கியுள்ளேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கு மிகப்பெரிய நன்றிகளை கூறிக்கொள்வதுடன், நான் விளையாடிய அணிகளுக்கு ஆதரவு வழங்கியதற்கும் நன்றிகள்” என தெரிவித்தார்.

Tags :
comments